கற்றலும் கற்பித்தலும் - இரண்டில் எது அழகு?

கற்றலும் கற்பித்தலும் - இரண்டில் எது அழகு?

ம் வாழ்க்கையில் தினம் தினம் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டுதான் வருகிறோம். அந்தக் கற்றலை யாருக்காவது கற்பித்திருக்கிறோமா என்று யோசித்தேன். விளைவு இந்தப் பதிவு:

சிக்கனம் + சேமிப்பு:

ஐந்து பெண்களைப் பெற்று, அவர்களின் திருமணம், குழந்தைப்பேறு, சீர் செனத்திகள் என இப்படி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து யாரிடமும் கடன் வாங்காமல் என் அப்பா ஒருவரின் சம்பாத்தியத்தில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய என் அம்மாவின் அந்த வெற்றிக்குக் காரணம் அழகாய் பட்ஜெட் போடும் திறன்தான்.

‘சிக்கனமே சேமிப்பு' என்பதை வாழ்வியல் பாடமாகச் சொல்லிக் கொடுத்தார். ‘வாழ்வதற்கான செலவு மிகவும் குறைவு. அடுத்தவர்களைப் போல் வாழ்வதற்கான செலவுதான் மிக அதிகம்’ என்று அடிக்கடி சொல்வார்கள்.

ஒரு பொருளை வாங்க எண்ணும்போது முதலில், ‘அது தேவையா? அது அவசியமா? அது இல்லாமல் நம்மால் குடும்பத்தை நடத்த முடியாதா? அந்தப் பொருளை ஆறு மாதத்துக்குப் பிறகு வாங்கிக்கொண்டால் என்ன?’ இப்படி பலவும் யோசித்து மனதுக்கு சரி எனப் பட்டதை செய். ஓரறிவு எறும்புக்கு சேமிப்புதான் வாழ்க்கை. ஆறறிவு மனிதனுக்கு சேமித்தால்தான் வாழ்க்கை. ‘சிக்கனமாய் இரு! சேமித்துப் பழகு!’ என்று அழகாய்க் கற்றுக் கொடுத்தவர் அம்மா.

தைரியம் + தன்னம்பிக்கை:

எட்டாம் வகுப்பு படித்தபொழுது அரையாண்டுத் தேர்வில் கணிதப் பாடத்தில் மதிப்பெண் குறைய, ஆசிரியை அப்பாவை அழைத்து வரச் சொல்ல, நான் பயந்துபோய் அழ, அப்பா என் கையை பிடித்து மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, ‘கவலைப்படாதே, உன்னால் முடியும்! அடுத்த முறை நல்ல மதிப்பெண் வாங்குவாய்’ என்று என்னைத் தட்டிக்கொடுத்து தைரியம் சொன்னதை என்றும் மறக்க மாட்டேன்.

‘நம்மால் முடியும் என்று நினைத்தால் எல்லாமே முடியும். முடியாது என்று நினைத்தால் எதுவுமே முடியாது. அனைத்துமே உன் எண்ணத்தைப் பொறுத்தது’ என்று அப்பா கூறியது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்தது. ‘வெற்றி என்பது நிரந்தரமல்ல. தோல்வி என்பது இறுதியானதுமல்ல’ என்று அப்பா சொன்ன பாடத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டேன். நான் தோல்வியுறும் தருணங்களில் இதைத்தான் நினைத்துக்கொள்வேன். மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் எழுவேன்.

பொறுமை + வெற்றி:

கூட்டுக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட நான், என் மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் விட்டுக் கொடுப்பதும், மன்னிப்பதும்தான். ஆனால், வாழ்க்கையின் போராட்டம் யார் விட்டுக் கொடுப்பது? யார் மன்னிப்பது? என்பது தான். ’நீயே முதலில் விட்டுக்கொடு. நீயே முதலில் மன்னித்தும் விடு’ன்னு அத்தை சொன்னதை வேதவாக்காக எடுத்து அதன்படி நடக்கிறேன். மனதுக்குப் பிடித்ததை செய்! மகிழ்ச்சியாக வாழ்!இவ்வளவுதான் வாழ்க்கை என எளிமையாக வாழ்க்கைக்கு புது அர்த்தத்தை கற்றுக்கொடுத்தவர் என் அத்தை.

கணவன் + மனைவி = காதல்:

உடம்பை கூலாக வைத்திருப்பது ஆரோக்கியத்தின் ஆணி வேர் என்றால், மனதை குளுகுளுவென வைத்திருப்பது வாழ்க்கைக்கான ஆதாரம்! மனதை கூலாக வைத்திருப்பது வாழ்நாளை அதிகரிக்கும். வாழும் நாட்களை அழகாகவும் அமைதியாகவும் வைத்திருக்க உதவும்‌. மனதை ஜெயித்தவர்கள் வாழ்க்கையை ஜெயித்தவர்கள் என்று சொல்லலாம். எனது பெரிய அத்தான் சொன்ன ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறேன். ‘நீ கடைக்குப் புறப்படுகிறாய். கையில் பணம் இல்லை. என்ன செய்வாய்’ என்பார். ’ஏடிஎம்மில் போய் பணம் எடுத்து பிறகு கடைக்குச் செல்வேன்’ என்பேன். அதற்கு அவர், ‘ஏடிஎம் தானாகக் காசு தந்து விடாது. அதற்கு நம் வங்கிக் கணக்கில் அவ்வப்பொழுது போதுமான அளவு பணம் போட்டுவர வேண்டும். இல்லாவிட்டால் தீர்ந்துபோய் பல்லிளிக்கும் சரிதானே’ என்பார்.

இதேபோல்தான், ‘அன்புக் கணக்கு’ என்ற ஒரு விஷயம் இருக்கிறது தெரியுமா ?’ என்பார். நீங்கள் கணவன் மனைவியாக இருக்கலாம். உங்களுக்கு இடையே இருக்கும் உறவு அல்லது நட்பை அவ்வப்பொழுது தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுதாவது அக்கவுண்ட்டில் அன்பு குறைவது போல் தோன்றினால், அதைக் கொட்டி நிரப்பி நிறைகுடமாக வைத்திருக்க வேண்டும்’ என்பார். ஆக, கணவன் மனைவியின் காதலுக்கு புது அர்த்தத்தை அவரிடமிருந்து கற்றேன்.

மாற்றி யோசி:

நான் ஏதாவது நினைத்து அது நடக்கவில்லை என்றால் கலங்கும் சமயங்களில், ’நினைத்தது நடக்கவில்லை என்றால்தான் மன அழுத்தம் அதிகமாகிறது என்றால், எந்த விஷயம் நடக்குமோ அதற்கான எதிர்பார்ப்பை மட்டும் மனதுக்குள் வளர்த்துக் கொள்வது நல்லது’ என்று அழகாய் எடுத்து உணர்த்திய எனது சகோதரியின் வார்த்தைகள் பச்சை குத்தினாற்போல் பத்திரமாய் நெஞ்சுக்குள்.

இன்று என் நட்பு வட்டாரத்தில் இளம் பெண்கள் பலருக்கும் கவுன்சிலிங் சொல்லி விவாகரத்து வரை செல்லும் அவர்களை ஒன்று சேர்ந்து வாழ வைத்துள்ளேன். அவர்கள் மனதார, ‘நன்றி ஆன்ட்டி, உங்களால்தான் இன்று வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறோம்’ என்று சொல்லும்பொழுது, எனக்கு வாழ்க்கைப் பாடத்தை அழகாய் கற்றுக்கொடுத்த அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்கிறேன். நான் கற்றதை உங்களுடன் பகிர்ந்துகொண்டு, கற்பித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com