குழந்தைகள் குட்டையில் குதித்து விளையாடட்டுமே!

Children play in the puddle
Children play in the puddle
Published on

- J.Vinu

மேற்கத்திய நாடுகளிலும் சரி, சில ஆசிய நாடுகளிலும் சரி, மழைநீர் குட்டைகளில் குழந்தைகள் விளையாடுவது என்பதை ஒரு கட்டாயமான செயலாகப் பார்க்கிறார்கள். மழை நின்ற நாட்களில், ஆங்காங்கேத் தோன்றும் குட்டைகளில் ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் விளையாட்டு, அறிவியல் ரீதியாகவும் அக்குழந்தைகளுக்கு நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது.

குழந்தைகளின் motor skills எனப்படும் கைகால்களின் இயக்கம் இதன் மூலம் மேம்படுகிறது. பிறகு குட்டைகளில் விளையாடுவதன் மூலம், அதன் நீளம், அகலம், ஆழம் என்பதை உணர்வதால் கணக்கு புரிகிறது.

குட்டையில் குதிக்கும் போது தண்ணீர் தெறித்தல், பிறகு தெளிவான குட்டையில், பிம்பங்களைக் காணும் அறிவியல், அதன் மேல் சிறிய காகிதக்கப்பல் விடுவதன் மூலம் அது எப்படி மிதக்கிறது என மூளைக்கு வேலை... எல்லாவற்றிற்கும் மேலாக... விளையாட்டுத் தரும் சந்தோஷம், மகிழ்ச்சி இவையனைத்தும் குட்டைகளில் குழந்தைகள் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்.

உண்மையில் நம் நாட்டில் இதை தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறார்களா?  என்பது மிகப்பெரிய கேள்வி.

கிராமங்களில் வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற விளையாட்டுக்கள் தானாகவே கிடைத்துவிடும்.  ஆனால் நகரங்களில்? கடினம்தான்.  சில பெற்றோர்கள் இந்த விளையாட்டை குழந்தைகளுக்கு அனுமதித்தாலும், பெரும்பான்மையான இடங்களில் இது 'NO' தான்.

காரணங்களைக் கேட்டால் நூறு காரணங்களைக் கூறுவார்கள். உடம்பிற்கு ஒவ்வாமை, அழுக்குத் துணியை யார் துவைப்பது, நேரமின்மை... ஏதோ ஒன்று பதிலாக வரும். நிஜத்தில் குழந்தைகளை எவ்வளவுக்கு எவ்வளவு இயற்கையுடன் இணைந்து விளையாட அனுமதிக்கிறோமோ,அது அவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு அவ்வளவு நன்மை சேர்க்கும். 

இதையும் படியுங்கள்:
வளர்வதன் வெற்றி வளர்ப்பினிலே!
Children play in the puddle

விளையாட்டு என்றவுடன் தற்போதைய பெற்றோர்கள் கையில் எடுப்பது கிரிக்கெட், டென்னிஸ், பாட்மின்டன், ஸ்கேட்டிங், ஸ்விம்மிங் போன்றவைதான். அதில் தவறில்லை. ஆனால் இவையெல்லாம் கற்றுக் கொள்ளும் முன்பே, குட்டையில் விளையாடுவது போன்ற இயற்கையோடு இணைந்த விளையாட்டுகளும் குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று புரிந்து செயல்படுவோம்.

குழந்தைகளை rain rain come again எனப் பாட வைப்போம். மழையிலும் , குட்டையிலும் அவர்களை விளையாட அனுமதிப்போம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Everypath has its puddle.  அதாவது... ஒவ்வொரு பாதைக்கும் ஒரு குட்டை உண்டு. இதற்கு நிறைய அர்த்தங்கள்... 

தமிழில் ஒரு திரைப்பட பாடலில் அழகான வரிகள் வரும்.. செல்லும் வழி எங்கெங்கும் வெள்ளம் வரலாம்; உள்ளம் எதிர்பாராமல் பள்ளம் வரலாம்... என்ற வரிகள்!

குழந்தைகள் இயற்கையோடு சேர்ந்து வாழ்க்கைப் பயணத்தைக் கற்றுக் கொள்ளட்டும். கதவைத் திறந்து வெளி உலகை அவர்களுக்கு காண்பியுங்கள் பெற்றோர்களே. நான்கு சுவருக்குள் வாழ அவர்கள் கைதிகள் கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com