பெண்ணை சக மனுஷியாய் வாழ விடுங்கள்!

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் – நவம்பர், 25
Let the woman live as a fellow human being
Let the woman live as a fellow human being

வ்வொரு ஆண்டும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குடும்ப மற்றும் பாலியல் வன்முறை உலகம் முழுவதும் தொடர்ந்து வரும் பிரச்னையாக உள்ளது. இந்த ஆண்டின் உலகளாவிய கருப்பொருள், ‘பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க முதலீடு செய்ய ஒன்று கூடுங்கள்’ என்பதாகும்.

ஒரு கணவன், தனது மனைவியை மோசமான வார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது, பொருளாதார ரீதியாக தன்னைச் சார்ந்தே இருக்கும்படி நிர்பந்திப்பது, உளவியல் ரீதியான சிக்கல்களை தருவது போன்றவை ஒரு பெண்ணிற்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும். வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசியாக இருந்தாலும் அவளுக்குத் தேவையான பணத்தை வீட்டுச் செலவைத் தாண்டி அவளது கையிருப்புக்கென கொடுக்கப்பட வேண்டும்.

சமூகத்தில் மாற்றங்கள் வர வேண்டும் என்றால் முதலில் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். சிறு வயதிலிருந்து ஒரு ஆண் குழந்தைக்கு தனது தங்கையையோ, அக்காவையோ மரியாதையுடனும் அன்புடனும் நடத்த வேண்டும் என்று கற்பிக்கப்பட வேண்டும். ஒரு ஆண் தனது மனைவியை கௌரவமாகவும் மரியாதையுடனும் நடத்துவதைப் பார்த்து வளரும் ஒரு சிறுவன், வீட்டில், பள்ளியில், பின்னாளில் கல்லூரியில், தான் வேலை பார்க்கும் இடத்தில் சக பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுக்கொள்கிறான். இதனால் பிற பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலோ, திருமணமான பின் குடும்ப வன்முறையிலோ ஈடுபட மாட்டான் என்பது சர்வ நிச்சயம்.

ஆண், பெண் இரண்டு குழந்தைகளும் சமம்தான் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இருவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை பெற்றோர் வழங்க வேண்டும். ஒழுக்கம் சார்ந்த விஷயங்களிலும் இருபாலருக்கும் ஒரே மாதிரியான கண்டிப்பு காட்டப்பட வேண்டும். அதில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக் கூடாது.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு முட்டுக்கட்டை போடும் பதற்றம்!
Let the woman live as a fellow human being

பட்டிமன்ற ஆண் பேச்சாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். மேடைகளில், தனது மனைவியை காமெடி பீஸ் போல ஆக்கி பேசுவதை நிறுத்துங்கள். தனது மனைவிக்கு ஒன்றுமே தெரியாது, அவள் ஒரு மக்கு என்ற கருத்தைத்தான் ஆண் பேச்சாளர்கள் காலம் காலமாக பொதுவெளியில் பேசி வருகிறார்கள். இதைப் பார்க்கும் கூட்டமும் கைதட்டி ரசித்து சிரிக்கிறது. அதேபோல, திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் பெண்கள் மீது மோசமான வார்த்தை பிரயோகங்கள், உடல் ரீதியான துன்பங்கள், பாலியல் வன்முறை காட்சிகளை எடுப்பதை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் முதலில் மாற்ற வேண்டும். இதைப் பார்க்கும் இளம் தலைமுறையினர், இவற்றை அப்படியே தங்களுக்கான பாடமாக எடுத்துக்கொண்டு அதை தனது வீட்டிலும், வெளியிலும் செயல்படுத்த முயல்கிறார்கள். ஏனெனில், நல்லவற்றை விட, தீயவை மிக எளிதில் அவர்களை ஈர்க்கிறது.

தன்னை தெய்வமாக மதிக்க வேண்டும் என்று எந்தப் பெண்ணும் வேண்டுவதில்லை. ‘தன்னை சக மனுஷியாய் நடத்தி, சகஜமாக இந்த உலகில் வாழ விடுங்கள்’ என்பதே அவளின் கோரிக்கையாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com