நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. நம் குழந்தைகளை நேர்மையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் வளர்த்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் பொறுப்பான பிரஜைகளாக உருவாவார்கள். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்ற திருவள்ளுவரின் வாய்மொழி போல் கட்டுக்கோப்பான ஒழுக்கம், நேர்மையான குணம், பொறுப்புள்ளவர்களாகவும் புத்திசாலித்தனம் நிரம்பியவர்களாகவும் வளர்க்க பெற்றோராகிய நமக்கு நிறைய கடமைகள் உள்ளன. அதற்கு பெற்றோராகிய நாம் செய்ய வேண்டியது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
குழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடலாக இருப்பது: இது மிகவும் முக்கியம். நம்மைப் பார்த்துதான் குழந்தைகள் வளரும். எனவே, நாம் அவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
நேர்மையாக நடந்து காட்டுங்கள்: பொய் சொல்லாதே என்பதை விட, நாம் உண்மையுடனும் நேர்மையுடனும் நடந்து காட்ட, நம் செயல்களையும் வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனிக்கும் குழந்தைகள் நம்மைப் போலவே அறநெறி தவறாமல் வாழ்ந்து காட்டுவார்கள்.
பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள்: நமக்கான பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் நம் கடமைகளை குறைவர செய்ய வேண்டும். இதைப் பார்க்கும் நம் குழந்தைகளும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
பிறரை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்: பிறர் மனம் நோகாமல் பேச கற்றுக் கொடுங்கள். மதிப்பும் மரியாதையும் கொடுத்தால்தான் திரும்பக் கிடைக்கும் என்பதைச் சொல்லி புரிய வையுங்கள். பெற்றோர், பெரியோர், வயதில் மூத்தோரை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்.
சிந்திப்பதை ஊக்கப்படுத்துங்கள்: குழந்தைகளை சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் ஊக்குவியுங்கள். ஏதேனும் விஷயங்களைக் குறித்து கேள்விகள் எழுப்பினாலோ, தங்கள் கருத்தை கூறினாலோ, ‘உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று கூறி அலட்சியப்படுத்தாமல் அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். குழந்தைகளிடம் அன்பு, கருணை, இரக்க குணத்தை விதையுங்கள். மனித நேயம் மிக்க சிறந்த மனிதராக உருவாக இந்த குணங்கள் அவசியம் தேவை. ஒழுக்கம், நேர்மையாக நடந்து கொள்வது ஆகியவற்றிற்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதையை புரிய வையுங்கள். குறுக்கு வழியில் வெற்றி பெறுவதை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.
மன்னிப்பு என்ற வார்த்தையின் பொருளை கற்றுக் கொடுங்கள்: தவறு செய்தால் மன்னிப்பு கேட்கவும், மற்றவர்கள் தெரியாமல் செய்த தவறை மன்னிக்கவும் கற்றுக் கொடுங்கள். இதனால் பழிவாங்கும் குணம் சிறிதும் அவர்களிடம் தலை தூக்காது. சக மனிதர்கள் மீது அக்கறை, அன்பு, மனிதாபிமானம், பரிவு காட்டுவது, மரியாதையுடன் நடத்துவது ஆகியவற்றை கற்றுக் கொடுத்தால் நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும், ஏன் இந்த சமுதாயத்திற்குமே சிறந்த தொண்டாற்றியவர்களாவோம்.