எங்கெங்கு காணினும் நீயடா: தாயின் இடுப்பில் அமர்ந்து கொண்டு இறங்க மறுக்கும் கைக்குழந்தையைப் போல, நாம் எங்கே சென்றாலும் கூடவே வரும் ஒரு பொருள் செல்போன். வெளியில் செல்லும்போது ஆண்களின் சட்டைப் பாக்கெட்டிலும், பெண்களின் கைப்பையிலும் பிரியாத இடம் பிடித்திருக்கிறது. வீட்டில் இருக்கும்போது சொல்லவே வேண்டாம். அடுக்களை, ஹால், படுக்கையறை, மொட்டை மாடி, சிலர் வீட்டு பாத்ரூம் என்று சகல இடங்களுக்கும் இது கூடவே வரும்.
கூடவே இருக்கணும்: காலையில் கண் விழித்தது முதல், இரவு படுக்கப்போகும் வரை அலைபேசியை மட்டும் பிரிய யாருக்கும் மனசே இருப்பதில்லை. நிறைய பேர் அதை படுக்கைக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு தூங்குகிறார்கள். விடியும் வரை கூட கண் விழித்து அதனுடன் சிலர் உறவாடுகின்றனர். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அதில் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பவர்கள் பலர். நானும் மேற்கண்ட வகைகளில் ஏதேனும் ஒரு பிரிவை சேர்ந்தவள்தான்.
செல்போனை விட்டு விடுதலையாகி: சமீபத்தில் ஒரு விடுமுறை நாளில் பயிலரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை நிகழ்ச்சி. பயிலரங்கு நடந்த இடம், என் வீட்டுக்கு மிக அருகில் என்பதாலும், அன்று என் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்ததாலும், நான் செல்போன் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து, அதை வீட்டிலேயே வைத்துவிட்டு கிளம்பினேன்.
அன்று நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வர இரவு ஏழு மணியானது. கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் நான் அலைபேசியை விட்டு விலகி இருந்தேன். அதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக, நிறைய நன்மைகள் கிடைத்தது. அங்கே வந்திருந்த அத்தனை பேருடனும் நன்றாக மனம் விட்டு பேச முடிந்தது. நிறைய புதிய நட்புகளின் அறிமுகங்கள் கிடைத்தன. ஒருவருக்கொருவர் மனதார பேசிக்கொண்டோம். நான் நிகழ்வை ஊன்றி கவனித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். என்னுடன் தண்ணீர் பாட்டில் மட்டுமே இருந்தது. செல்போன் சுமை இல்லாததால் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன். வந்திருந்த அனைவருமே அலைபேசியை அமைதி நிலையில் வைத்து விட்டு நிகழ்வில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர்.
காத்திருந்து, காத்திருந்து: செல்போனின் வருகைக்கு முன்னால் எல்லோரும் லேண்ட் லைன் ஃபோன்தானே பயன்படுத்தினோம்? வீட்டில் யாருக்காவது அழைப்பு வந்தால், அவர் வீட்டில் இல்லை எனில், ‘அப்புறமா பேசுங்க’ என்போம். ‘பூஜையில் இருக்கிறார், குளியல் அறையில் இருக்கிறார்’ என்போம். அவர்களும் காத்திருந்து போன் செய்வார்கள். நாமும் யாரையாவது தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தால் நினைத்தவுடன் பேசி விட முடியாது. சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இருந்தால் மட்டுமே அவருடன் தொடர்பு கொண்டு பேச முடியும். நான் கல்லூரியில் படிக்கும்போது, திருமணமாகி கர்நாடகா மாநிலத்தில் இருந்த என் அக்காவிடம், வாரம் ஒரு முறை ஞாயிறன்று மட்டுமே பேச முடியும். அதுவும் அப்பா, அம்மா, தம்பி, நான் என ஆளுக்கு ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோதான். கடிகாரத்தை பார்த்துக்கொண்டே பேச வேண்டும். இல்லையெனில், எஸ்.டி.டி. பில் எகிறிவிடும். அப்பாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பொது தொலைபேசி நிலையங்களில் காத்திருக்கும் மக்களும், கண்ணாடிக் கதவை சார்த்திக்கொண்டு, பேசும் நபர் எப்போது வெளியே வருவார், தங்கள் முறை எப்போது வரும் என்று ஆவலுடன் நின்று கொண்டிருப்பர்.
அலெர்ட் ஆபிசர்கள்: அந்த நிலைமை இப்போது இல்லை. சிலர் கழிவறைக்கு சென்றால் கூட செல்போனை உடன் எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளது. சிலர் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும், அலைபேசி அடித்து விட்டால், அலெர்ட் ஆபிசர்களாகி அதை அப்படியே போட்டு விட்டு போன் அட்டென்ட் செய்வார்கள். அது அப்படி ஒன்றும் தலை போகிற விஷயமாக இருக்காது. ஏன் ஒரு அலைபேசி அழைப்பிற்கு இவ்வளவு முக்கித்துவம்? 80 சதவீத போன் கால்கள் வெறும் வெட்டி அரட்டைக்காக மட்டுமே வருபவை. மிகத் தேவையான போன் கால்கள் என்பது குறைவுதான். பெரியவர்கள் மணிக்கணக்கில் போனில் பேசுவதைப் பார்த்து பிள்ளைகளும் அதை கடைப்பிடிக்கிறார்கள்.
மாதம் ஒரு முறையேனும்: பகல் முழுக்க, கையில் செல்போன் இல்லாத அந்த நாள் எனக்கு மிகவும் இனிய நாளாக இருந்தது. கையில் இருந்தால் கண்டிப்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவையாவது எடுத்து பார்க்கச் சொல்லும். சில பல வருடங்களுக்குப் பின்பு இந்த உணர்வு ஓர் அதீதமான சந்தோஷத்தை எனக்குக் கொடுத்தது என்றால் மிகையில்லை. மாதத்தில் ஒரு நாளாவது இப்படி செல்போனை தொடாமல் இருப்பது நம் உடலுக்கும் மனதுக்குமே நல்லது என்று நினைக்கிறேன். அந்த நேரத்தை புத்தகம் படிக்க, தோட்ட வேலை செய்ய, அலமாரியை ஒழுங்கு படுத்த என்று எவ்வளவோ செய்யலாமே.