நவம்பர் 14 அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது போல, ஐக்கிய நாடுகள் சபை 1954ல், நவம்பர் 20ஐ உலகளாவிய குழந்தைகள் தினமாக அறிவித்தது. உலகளவில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 அன்று உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டிற்கான கருப்பொருள் ஒவ்வொரு குழந்தைக்கும் சகல உரிமை என்பதாகும்.
சமீபத்தில் எழுத்தாளர் உதயசங்கர் தனது, ‘ஆதனின் பொம்மை’ நூலுக்காக 2023ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருது பெற்றார். ஏராளமான சிறார் நூல்களை எழுதியுள்ள இவர், குழந்தைகள் மேல் அளவில்லாத அன்பு கொண்டவர். பெற்றோர் தம் பிள்ளைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று அவர் கூறிய கருத்துகளை இந்தப் பதிவில் காணலாம்.
1. குழந்தைகளுடன் உரையாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.
2. எப்போதும் படிப்பு குறித்தும், ‘அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே’ என்று எதிர்மறையாகப் பேசாதீர்கள்.
3. குழந்தைகளை உரையாட விட்டு அவர்களுடைய கற்பனைத் திறனை, இந்த உலகம் பற்றிய கருத்துகளை உள்வாங்கி அனுபவியுங்கள். உங்கள் கருத்துகளையோ, நம்பிக்கைகளையோ, உங்களுக்குத் தெரிந்த தகவல்களையோ, குழந்தைகளிடம் திணிக்காதீர்கள்.
4. அவர்களுக்கு மாதம் தோறும் ஒரு புத்தகமாவது வாங்கிக் கொடுங்கள். அதை அவர்களுடன் சேர்ந்து நீங்களும் வாசியுங்கள். குழந்தைகளுக்கென்று குட்டியான நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுங்கள்.
5. கதைகளை நீங்கள் வாசிக்கும்போதோ அல்லது சொல்லும்போதோ குழந்தைகளின் தலையீட்டை, கேள்விகளை உற்சாகப்படுத்தி வரவேற்று உரையாடுங்கள்.
6. குழந்தைகளின் அத்தனை கேள்விகளுக்கும் பொய்யாகவாவது பதில் சொல்லி விட வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு தெரியாததை தெரிந்து கொண்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லுங்கள். குழந்தைகளிடமும், குழந்தைகள் முன்பும் பெரியவர்கள் தோற்றுப் போவதற்கு அச்சமோ வெட்கமோ படக்கூடாது.
7. குழந்தைகளிடம் உங்கள் முழுத் திறமையையும் காட்டி அவர்களை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் வெற்றி பெறுவதை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் தனித்துவமானவர்கள். எனவே, மற்ற குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்.
8. குழந்தைகளை எப்போதும் அழுத்தத்திலேயே வைத்திருக்காதீர்கள். எண்ணற்ற பயிற்சிகள் (இசை, நடனம், நீச்சல், விளையாட்டு, ஸ்போக்கன் இங்கிலீஷ்) என்று குழந்தைகளை விரட்டிக்கொண்டே இருக்காதீர்கள். ஒரே நேரத்தில் அத்தனை பயிற்சிகளையும் கொடுப்பதை விட, அவர்களுடைய ஆர்வத்தை அறிந்து கொண்டு ஏதாவது ஒன்றில் மட்டும் அவர்கள் ஈடுபடுமாறு செய்வது நல்லது.
9. குழந்தைகளை சுதந்திரமாக, மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள். அதற்கான காலம், நேரம், சூழலை உருவாக்கிக் கொடுங்கள். எங்கே குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறார்களோ அங்கே மட்டுமே அவர்களுடைய படைப்பாக்கம் மிகச் சிறப்பாக வெளிப்படும்.
10. கூட்டுச்செயல்பாடுகளில் (விளையாட்டு, கதை சொல்லுதல், பாடல் பாடுதல்) என்று குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அதுதான் பின்னால் அவர்கள் சமூகத்தோடு இயைந்து வாழும் உணர்வை கொடுக்கும்.
11. எப்போதும் குழந்தைகளிடம் போட்டியுணர்வை வளர்க்காதீர்கள். முதலிடம் இரண்டாம் இடம் என்பதெல்லாம் வெறும் எண்ணிக்கை மட்டுமே குழந்தைகளின் ஆளுமையை போட்டிகளுக்குள் சுருக்கி விடக்கூடாது.
12. குழந்தைகள் குட்டி மனிதர்கள். அந்தக் குட்டி மனிதர்கள், சரியான, சமமான, சமத்துவமான வாய்ப்புகளையும் சூழல்களையும் கொண்ட உலகில் வாழ்வதற்கான அத்தனை சந்தர்ப்பங்களையும் நாம்தான் உருவாக்க வேண்டும்.