பட்டாம் பூச்சியாய்ப் பறப்போம்!

பட்டாம் பூச்சியாய்ப் பறப்போம்!
Published on

நான் சிறு வயதிலிருந்தே படிப்பு, பேச்சு, கவிதை, தனி நடிப்பு என அனைத்திலும் முதல் மாணவியாய் விளங்கியவள். படிப்பு முடிந்து நல்ல கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆனால், திருமணம் ஆன பின் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. குழந்தைகளை வளர்ப்பதே தலையாய கடமை என்று நினைத்தேன். முழு நேரத்தையும் குழந்தைகளுக்காகவே
செலவிட்டேன்.

“உன் படிப்பு என்ன...! அறிவு என்ன! இப்படி அதை வீணாக்குகிறாயே” என யார் கேட்டாலும் ஒரு புன்னகையுடன் நகர்ந்து விடுவேன். எனவே அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து மேலும் படிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டுத்தான் படித்தேன். இதற்கிடையில் தையலும் கற்றுக் கொண்டேன். வருடங்கள் ஓடி. குழந்தைகளுக்கு 2 வயதும் 6 வயதுமாய் ஆனபின் எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது. அதை ஏன் பயனுள்ள முறையில் செலவழிக்கக் கூடாது என யோசிச்சேன்.

ஒரு நண்பர் மூலமாய் புடவை மொத்த வியாபாரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. செய்யலாமா வேண்டாமா என ஒரே குழப்பம். என் கணவரின் சம்மதத்துடன் சிறிய அளவு முதலீட்டில் வீட்டிலேயே புடவை வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.

நிறைய லாபத்திற்கு ஆசைப்படவில்லை. கொஞ்ச லாபம் என்பதால் வியாபாரம் அதிகமாயிற்று. நாளடைவில் ஜாக்கெட் துணி, ரெடி மேட்ஸ், சுரிதார் மெட்டீரியல் என வியாபார எல்லை விரிவடைந்தது. என் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு ஒரே மாதிரி ஆடைகள் தருவித்துக் கொடுத்தேன். – கடைகளில் விற்பதை விடக் குறைவான விலைக்கு. அதன் பலன் மூன்று மாதங்களுக்குப் பின் இப்போது தெரிந்தது. பள்ளியில் அழைத்து சீருடை தைக்கும் பொறுப்பை அளித்தனர். எனக்கு இனிய அதிர்ச்சி.

பொறுப்புக்களின் சுமையும் அலைச்சலும் கூடிவிட்டாலும் நான் இப்பொழுது மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பதாய் உணர்கிறேன்.

சகோதரிகளுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நன்கு படித்துவிட்டால் அலுவலக வேலைதான் வேண்டும் என நினைக்காதீர்கள். இல்லையெனில் “என் திறமை வீணாகிறதே!” என்ற புலம்பலுடன் வீட்டில் அடைந்து கிடக்காதீர்கள்.

நடுத்தர வர்க்கத்தின் அசட்டு கெளரவம் என்ற கோட்டைத் தாண்டி எட்டிப் பார்த்தீர்களானால் நேர்மையாய் உழைத்துச் சம்பாதிக்க இவ்வுலகில் எத்தனையோ வழிகள் இருப்பது புலப்படும்.

வரும் வருமானம் ஆரம்பத்தில் குறைவாகத் தோன்றலாம். ஆனால் நம் நேர்மையும் நியாய விலையில் பரவப் பரவ வியாபாரம் விரிவடையும்.

அக்கம்பக்க அனாவசியப் பேச்சு, உறவினருடனான மனத்தாங்கல் என எதையுமே எண்ணிப் பார்க்க நேரமின்றிப் போய்விடும். முதலில் மேலுக்கு அணிய ஆரம்பித்த புன்னகையே பின் நிரந்தரமாகிவிடும். தன்னம்பிக்கை கூடி தோற்றத்தில் அது பொலிவது நிச்சயம்!

அனைத்தையும்விட நம் குழந்தைகளுக்காக செலவழிக்கும் நேரம் குறையாது என்பது பெரிய ப்ளஸ் பாயிண்ட் அல்லவா!

சகோதரிகளே! கூட்டுக்குள் இருக்கும்வரை வெறும் புழுதான். வெளியே வந்து சிறகடித்தால் அதுவே பட்டம்பூச்சி! எனவே வாருங்க... சிறகடித்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com