உதறித் தள்ளுவோம் உருவக் கேலியை!

உதறித் தள்ளுவோம் உருவக் கேலியை!

ந்த ஒரு மனிதரைப் பார்த்தாலும் முதலில் ஈர்ப்பது அவரின் தோற்றமே. கண்ணியமான தோற்றத்தில் இருப்பவர்கள் மீது மரியாதையும், பார்வைக்கு அழகாக தோன்றுபவர் மீது  ஈர்ப்பும் எழுவது இயல்பு. சிலரை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கக் கூடத் தோன்றும்.

அதே சமயம், சற்றே பருமனான உடல்வாகு கொண்டவர்களையோ, எடுப்பான பல்வரிசையுடனோ, கருமை நிறமானவர்களையோ, உயரம் குறைந்தவர் களையோ, ஒடிந்து விடும் அளவு ஒல்லியாக இருப்பவர்களையோ காணும்போது அமைதியாக கடந்து செல்லாமல் அவர்களின் அங்க அடையாளங்களை விமர்சனம் செய்து சிரிப்பது கீழான செயல்.

இறைவன் படைப்பில் எந்த ஒரு உயிரினமும் நூறு சதம் முழுமையான அழகோடு இருப்பதில்லை. இதற்கு முட்களோடு, நறுமணம் வீசும் அழகிய ரோஜாவும், வண்ணத் தோகை விரித்தாடும் மயிலும் விதிவிலக்கல்ல.

மனிதராய் பிறத்தலே அரிது எனும் போது ஒருவரின் உயரம், நிறம், பருமன் போன்ற அங்க அமைப்புகள் பற்றிக் கேலி பேசுவது சரியில்லை. உருவக் கேலியை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு நம் திரைப் படங்களுக்கு உண்டு. பிறர் மனம் நோகுமே என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல்  அவர்களை உருவ கேலி செய்து சிரிப்பது வன்முறைக்கு ஒப்பாகும்.

‘’கல்யாணத்தப்போ ஊசி மாதிரி இருந்த பொண்ணு, இப்போ இருபது வருஷத்துல தூண் மாதிரி ஆயிட்டா’’ என யாராவது ஒரு பெண்ணைப் பற்றி கேலி பேசும் முன் உணர வேண்டும். அந்தப் பெண் பிள்ளைப்பேறு, சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகான அசௌகர்யங்கள், நாற்பதுக்கு பின்வரும் பெரிமெனோபாஸ் கைங்கரியத்தில், தாறுமாறாக வேலை செய்யும் ஹார்மோன்களால் எவ்வளவு உடல் ரீதியான துன்பத்தை அனுபவிக்கிறாள் என்பதை.

‘அந்தப் பொண்ணு அட்டைக் கருப்பு. தொட்டுப் பொட்டு வச்சுக்கலாம்’  ‘பல்லைப் பாரு, தேங்காய்த் துருவி மாதிரி நீட்டிக்கிட்டு’, என்று ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணைப் பார்த்து சொல்வதுதான் கொடுமை. இப்படிச் சொல்லுபவரின் மனம் எந்தளவு வக்கிரத்தால் நிறைந்திருக்கும்?

மருந்துகளும் ரசாயனங்களும் தெளிக்கப்பட்ட காய்கறிகளையும், தானியங்களையும் உட்கொள்ளும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதன் விளைவாக சிறுவயதிலேயே ஒபிசிட்டி எனப்படும் அதீத உடற்பருமனோடு சிறுவர் சிறுமியரும், ஹார்மோன் கோளாறுகளால் மிகச் சிறுவயதிலேயே பூப்படைந்த சிறுமிகளும், மெனோபாஸ் தொந்தரவால் பெண்களும், தைராய்டு பிரச்சனைகளால் ஆண்களும் பெண்களும் பாதிக்கப்பட்டு உடல் பருமனை அனுபவிக்கின்றனர். இவர்களிடம் கேட்டால் மேற்சொன்ன ஏதாவது ஒரு தொந்தரவுகளால் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பர்.

யாராவது உருவக் கேலியில் ஈடுபட்டால், அவரிடம்

 உடல் அழகெல்லாம் அழகன்று: உள்ளத்து

ஆரோக்கிய அழகே அழகு’’

என்ற புது குறளை எடுத்துச் சொல்லுவோம். அப்படியும் கேலி செய்தால் அதைப் புறந்தள்ளப் பழகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com