இரவல் கண்கள் எதற்கு? சொந்தக் கண்களால் பார்க்கப் பழகுவோம்!

இரவல் கண்கள் எதற்கு? சொந்தக் கண்களால் பார்க்கப் பழகுவோம்!
PeopleImages

னித உடலின் மிக அற்புதமான உறுப்பு கண்கள். பிறப்பு முதல் இறப்பு வரை தினம் தினம் எத்தனை விதமான காட்சிகளை நம் கண்கள் காண்கின்றன. என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் லேட்டஸ்ட் டெக்னாலஜியில், விதவிதமாக படம் பிடித்து பார்த்தாலும், நம் சொந்த கண்களால் இயற்கை அழகை ரசிப்பதற்கு ஈடு ஏது?

புதிதாகப் பிற மனிதர்களை பார்க்கும்போது நம் கண்களால் அவர்களை அளவிடுகிறோம். இவர் தோற்றம் எப்படி இருக்கிறது? என்ன வயதிருக்கும் இவருக்கு? இவர் அணிந்திருக்கும் உடை என்ன ரகம்?  இது என்ன விலையிருக்கும்? அவருடைய சிரிப்பும் பேச்சும் எப்படி இருக்கிறது என்று அவரைப் பார்க்கும்போதே, அவரின் புறத்தோற்றம் பற்றிய மதிப்பீட்டிற்கான கேள்விகள் மனதில் ஓடும். அடுத்த கட்டமாக அவரைப் பற்றிய அகமதிப்பீட்டில் இறங்குவோம். எந்த மாதிரியான குணம் படைத்தவர் இவர்? நம் இயல்பிற்கு இவர் ஒத்து வருவாரா? மேற்கொண்டு அவருடன் பழகலாமா? வேண்டாமா? என்று மனம் பட்டிமன்றம் நடத்தும்.

ஒரு மனிதரைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே அவரைப் பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. சிலமுறை நன்றாக பழகிப் பார்த்த பின்பு, ஓரளவிற்கு அவரின் இயல்பு பற்றி கணிக்க முடியும். நிலைமை இப்படியிருக்க, நாம் முன் பின் பார்த்திராத அல்லது ஓரிரு முறை மட்டுமே பார்த்து அவ்வளவாக பேசிப் பழகியிராத ஒருவரைப் பற்றிய அபிப்பிராயத்தை இன்னொரு நபர் சொல்லக் கேட்டால் நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பது  மிக முக்கியம்.

உதாரணமாக, ஒரு இடத்திற்கு புதிதாகக் குடிபோகிறீர்கள் அல்லது ஒரு அலுவலத்தில் வேலைக்கு சேர்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இரண்டொரு நாட்களிலேயே அங்கு உங்களுக்கு ஒரு நண்பர் கிடைக்கிறார். அவர், ‘இந்த ஆபிஸ்ல இருக்கிற மிஸ்டர் ஷர்மா கிட்ட மட்டும் பார்த்துப் பழகுங்க. மனுஷன் ரொம்ப மோசம்’ என்றோ, ‘அந்த மூணாவது வீட்டு மஞ்சுளா கிட்ட அளவா வெச்சுக்குங்க. சரியான அலட்டல் பேர்வழி. சமயம் பார்த்து உங்களை மட்டம் தட்டி அவமானப்படுத்துவா’ என்றோ சொல்கிறார்.

அவர் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு ஷர்மாவிடமும் மஞ்சுளாவிடமும், பழகியே பார்க்காமல் அவர்களை ஒதுக்குவீர்களா அல்லது இது புது நண்பரின் கணிப்பு என்று அவர் வார்த்தைகளை ஒதுக்குவீர்களா? இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதுதானே சரி? ஏனெனில், உங்களிடம் ஷர்மாவை பற்றி சொல்லிய நபருக்கும் ஷர்மாவிற்கும் என்ன மாதிரியான நிகழ்வுகள் இதற்கு முன் நடந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவர் என்ன சொல்லி அவர் அப்படி நடந்து கொண்டார் என்பது தெரியாது. அப்படி இருக்கும்போது மூன்றாம் மனிதரின் கண்ணோட்டத்தில் நாம் மனிதர்களை எடை போடுவது சரியாகுமா?

பெண்கள் மிகவும் விரும்பி அணியும் தங்க நகைகளை உருவாக்குவதற்கு நூறு சதவிகிதம் தங்கத்தை யாரும் பயன்படுத்துவதில்லை. 91.6 சதவிகிதம்தான் தங்கம், மீதி செம்பு அல்லது வெள்ளி கலந்துதான் நகை செய்கிறார்கள். மனிதர்களும் அப்படித்தான். எந்த மனிதரும் நூறு சதவிகிதம் நல்லவராக இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கேயான பலவீனங்கள் உண்டு. எல்லாவற்றிலும் சிறந்தவராக முழுக்க முழுக்க நல்லவராக இருப்பவரை மட்டுமே நான் நண்பராக்கிக் கொள்வேன் என்று ஒருவர் நினைத்தால் வாழ்வில் தனியாகத்தான் இருக்க வேண்டும்.

எந்த மனிதரும் இந்த உலகத்தில் ஒதுக்கத்தக்கவர் அல்ல. அவரிடம் ஏதேனும் ஒரு நல்ல குணம் நிச்சயமாக இருக்கும். எனவே, மற்றவருடைய கண்ணோட்டத்தில் நாம் மனிதர்களை பார்க்காமல், நம் சொந்த கண் கொண்டு பார்த்துப் பழகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com