ஆன்மிகம் சொல்லும் 10 அறிவியல்பூர்வ உண்மைகள் அறிவோமா?

Let's Know 10 Scientific Facts About Spirituality
Let's Know 10 Scientific Facts About Spiritualityhttps://bracesforagreatsmile.com
Published on

ம் வீடுகளில் பெரியோர்கள் இருந்தால், ‘வடக்கே தலை வைத்துப் படுக்காதே... உடம்புக்கு ஆகாது’, ‘நகத்தை கடித்துத் துப்பாதே… வீட்டுக்கு ஆகாது’ என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், நாம் விதண்டாவாதமாக, ‘ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது? திசைகள் நான்குதானே? என் நகம் நான் கடிப்பேன் இதற்கும் வீட்டுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றெல்லாம் பேசி இருப்போம்.

இன்றைய இளைய தலைமுறையினர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நமது முன்னோர்கள் மிகுந்த அறிவாளிகள். ஆன்மிகம் மூலமாக அவர்கள் வகுத்துத் தந்து இருக்கும் ஒவ்வொரு அறிவுரைகளின் பின்னால் அவர்களின் அனுபவம் மட்டுமல்ல, அவர்கள் கற்றுத் தெளிந்த அறிவியலும் கலந்து இருக்கிறது. அப்படி நமது முன்னோர்கள் சொல்லிச் சென்ற பத்து அறிவியல்பூர்வ ஆன்மிக உண்மைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது. ஏன்?

பூமியின் மையப் பகுதியில் இருக்கும் காந்த விசையானது வடக்கு, தெற்கு ஆகத்தான் இயங்குகிறது. எனவே, வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது ஈர்க்கும் காந்த விசையால் நமது மூளையின் செயல் திறன் குறையும் வாய்ப்புள்ளது என்பதே காரணம்.

2. நகத்தைக் கடித்தால் வீட்டுக்கு ஆகாதா?

நகத்தை கடிக்கும்போது நகத்தின் அடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குள் சென்று நோய்த் தொற்றுகளை உருவாக்கும். அறியாமல் நகத்துணுக்குகளை விழுங்கி அதனால் உடல் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. உடல் நலம் குன்றுவதால் வீட்டில் உள்ளவர்களுக்கு சிரமத்தை தரும் என்பதால்தான் நகம் கடிப்பதை ஆகாது என்றனர்.

3. ஏகாதசி விரதத்தின்போது ஏன் அகத்திக்கீரை சாப்பிட வேண்டும்?

பொதுவாக, மாதத்துக்கு ஒரு முறையாவது மென்று விழுங்கும் திட ஆகாரங்களை எடுக்காமல் இரைப்பைக்கும், குடலுக்கும் ஓய்வு தருவது உடலுக்கு  நல்லது. அதேநேரம், திட உணவை எடுக்காமல் இருப்பதால் சிலருக்கு வயிற்றில் உண்டாகும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் இதனை தடுக்கவே அகத்திக்கீரையின் சத்துக்கள் அருமருந்து ஆகிறது. எனவேதான் ஏகாதசி விரதம் முடிப்பதில் அகத்திக்கீரை இடம் பெற்றுள்ளது. தவிர, அகத்திக்கீரையில் உள்ள இரும்புச் சத்து விரதம் இருந்து களைத்த உடலுக்கு  எனர்ஜி தருவதாகும்.

4. இடி இடிக்கும்போது, ‘அர்ஜுனா அர்ஜுனா’ என்று சொல்வதால் என்ன பலன்?

இடி சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையை தாக்கி கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று வாயை அகலமாகத் திறந்து கத்தும்போது அதிக  ஒலியானது இரண்டு பக்கங்களும் சென்று செவிப்பறை பாதிப்பு, காது அடைத்துக் கொள்வது போன்ற பிரச்னைகளில் இருந்து காக்கும்.

5. வாசல் நிலைப்படியில் மஞ்சளை ஏன் தடவ வேண்டும்?

மஞ்சள் நல்ல கிருமி நாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்கு சென்று திரும்பும்போது நம் கால்கள் முதலில் மிதிப்பது நம் வாசல் நிலைபடிதான். அதைத் தாண்டியே உள்ளே நுழைய வேண்டும். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால் அது கிருமிகளை உள்ளே வர விடாமல் தடுத்து, நோய் தொற்றுகளை தவிர்க்க வழிவகை செய்கிறது.

தோரணம்
தோரணம்https://www.facebook.com

6. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைக்கக் கூடாது. ஏன்?

மரங்களில் மிகவும் அடர்த்தி இல்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை மரம். வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் எளிதாக ஏறி விளையாடினால் கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் படும் வாய்ப்பு உண்டு. மேலும், கம்பளிப் பூச்சிகளின் புகலிடம் முருங்கை மரம் என்பதால் வீட்டுக்குள்ளும் கம்பளி பூச்சிகள் அதிகம் பரவும் என்பதும் ஒரு காரணம்.

7. கோயிலை விட அதிகமான உயரத்தில் வீடு கட்டுவது தவறா?

பலத்த இடி, மின்னல் தாக்கும்போது கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள் அதன் மின் அதிர்ச்சியை உள்வாங்கி சேதங்களைத் தடுக்கிறது. இதனால் அந்த கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. அதை மறைக்கும் விதமாக கட்டடங்கள் இருந்தால் பாதிப்பு ஏற்படும். எனவேதான் இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத காலத்தில் கோயிலை விட உயரமாக கட்டடம் கட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள்.

இதையும் படியுங்கள்:
உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும் ஆறு வித ஹாட் ட்ரிங்க்ஸ்!
Let's Know 10 Scientific Facts About Spirituality

8. உச்சி வெயில் நேரத்தில் கிணற்றை எட்டிப் பார்த்தால் ஆபத்தா?

உச்சி வெயில் படும் நேரங்களில் சூரிய ஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால் திடீரென வேதிவினை விளைந்து கிணற்றுக்குள்ளிருந்து விஷ வாயு உண்டாகும் வாய்ப்பு அதிகம். அதன் காரணமாக சுவாசம் தடுமாறி கிணற்றில் தவறி விழ வாய்ப்பு உண்டு என்பதே இதற்கான காரணம்.

9. வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் வீட்டில் சாம்பிராணி புகை போடுவது நல்லது. ஏன்?

பொதுவாக, வீட்டில் பூச்சித்தொல்லை, கொசுத்தொல்லை நீங்க  நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே சாம்பிராணி  போடுவது. இதன் மூலிகை மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும் கொசுக்களையும் எதிர்த்து அவற்றை வெளியேற்றும் வல்லமை கொண்டது.

10. விசேஷத்தின்போது வீட்டில் வாழைமரம், மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?

வீட்டின் விழாக்களிலும், விசேஷ நாட்களிலும் கூடும் மக்கள் கூட்டங்களினாலும் வெளிப்படும் மூச்சுக்காற்று இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் கூடியிருக்கும் கூட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாசுபட்ட காற்றைத்  தூய்மைப்படுத்தி ஆக்ஸிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்ற உதவுபவை வாழை மரமும் மாவிலையும் என்பதால் அவசியம் இவற்றை வாசலிலும் உள்ளும் வைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com