வாழ்க்கை வளம் பெற அவ்வப்போது சான்றோரின் உரைகளைக் கேட்டு அல்லது படித்து மகிழலாம். அந்த வகையில் சத்குரு ஜக்கியின் உரையிலிருந்து படித்தது இங்கே...
“மிக வளமான விவசாய நிலத்தை தன் இரு மகன்களிடம் ஒப்படைத்தான் ஒரு குடியானவன். கால ஓட்டத்தில் மூத்தவனுக்கு திருமணமானது. ஐந்து குழந்தைகள் பிறந்தனர். இளையவனோ கடைசி வரை திருமணமே செய்துகொள்ளவில்லை.
தந்தையின் விருப்பப்படி நிலத்தில் விளைவதை இருவரும் சமமாக பிரித்துக்கொண்டனர். ஒரு கட்டத்தில் மூத்தவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. எனக்கு முதுமை வந்தால் கவனித்துக்கொள்ள ஐந்து குழந்தைகள் உள்ளனர். தம்பிக்கு யாருமே இல்லையே. அவனுக்கு கூடுதலான சேமிப்பு தேவையல்லவா?
இந்த எண்ணம் வந்ததிலிருந்து அவன் ஒவ்வொரு மாதமும் தன் பங்கில் இருந்து ஒரு மூட்டை தானியத்தை எடுத்துச் சென்று தம்பியின் கிடங்கில் ரகசியமாக வைத்தான். இளையவன் வேறு விதமாக சிந்தித்தான். நானோ ஒற்றையாள். என் அண்ணனின் குடும்பத்துக்கு அல்லவா அதிக பங்கு தேவை என நினைத்து அவனும் தன் பங்கில் இருந்து ஒரு மூட்டை தானியத்தை எடுத்துச் சென்று அண்ணனின் கிடங்கில் வைக்க ஆரம்பித்தான்.
இது வெகு காலமாக தொடர, சில வருடங்கள் கழித்து ஒரு நாள் அண்ணன், தம்பி இருவரும் முதுகில் தானிய மூட்டைகளுடன் எதிரெதிரே வந்து விட்டனர். தங்கள் பெருந்தன்மை குறித்து இருவருமே தர்ம சங்கடமாக உணர்ந்து தலை குனிந்தனர். ஒரு வார்த்தைகூட பேசாமல் வழக்கப்படி தானிய முட்டைகளை அடுத்தவர் இடத்தில் இறக்கிவிட்டு தத்தம் வீடுகளுக்கு திரும்பினர்.
பிற்பாடு அந்த ஊரில் கோயில் அமைக்க தகுந்த இடம் தேடியபோது அந்த சகோதரர்கள் சந்தித்த அந்த குறிப்பிட்ட இடமே புனித இடமாக அமைந்தது.
இப்படி இருக்க, நாம் பொதுவாக உறவுகளை எப்படி கையாளுகிறோம்? எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் ஒரு எல்லைக்கோட்டை வளர்த்து வைத்திருக்கிறோம். இருவரில் யார் அதை யார் தாண்டினாலும் அடுத்தவர் போர்க்கொடி ஏந்துகிறோம். ஒருவராவது விட்டுக்கொடுத்து பெருந்தன்மையாக இருக்கும் வரைதான் அடுத்தவர் பிழைத்திருக்க முடியும்.
படித்ததில் பிடித்தது!