சாலை பாதுகாப்பு விதிகளை மதிப்போம்!

ஜீப்ரா கிராசிங்
ஜீப்ரா கிராசிங்
Published on

‘சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழப்பு’ என்ற செய்தியை நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் காணலாம். இத்தகைய செய்திகளை படிக்கும்போதெல்லாம் மனதில் வேதனை ஏற்படுகிறது. விலை மதிக்க முடியாத நமது உயிரை பாதுகாத்துக்கொள்ளுவது மிகவும் அவசியம். சாலையைக் கடக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகளை இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.

போக்குவரத்து சிக்னலுக்கு அருகில் பாதசாரிகள் சாலையை பாதுகாப்பாகக் கடக்க கறுப்பு வெள்ளை நிறத்தில் பட்டை பட்டையாக வரையப்பட்டிருக்கும். இதற்கு ‘ஜீப்ரா கிராசிங்’ என்று பெயர். பார்ப்பதற்கு வரிக்குதிரையின் நிறத்தில் உள்ளதால் இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. பாதசாரிகள் சாலையை கடப்பதற்காக உலகம் முழுவதும் இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. வாகன நெரிசல் மிகுந்த அகலமான சாலையைக் கடக்க இந்த அமைப்பை நீங்கள் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். இதைத்தவிர வேறு எந்தப் பகுதியிலும் நீங்கள் சாலையைக் கடக்க முயற்சி செய்யக்கூடாது. ஜீப்ரா கிராசிங்கில் (Zebra Crossing) நீங்கள் சற்று நிற்க வேண்டும். சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது பாதையைக் கடக்கவே கூடாது.  பாதசாரிகள் பாதையைக் கடக்கலாம் என்றால் ஒரு மனிதன் நடப்பது போல பச்சை விளக்கு சிக்னல் எரியத் தொடங்கும். அதை நன்கு கவனித்து உறுதி செய்த பின்னரே பாதையைக் கடக்க வேண்டும்.

ஜீப்ரா கிராசிங் மற்றும் சிக்னல் இல்லாத இடங்களில் சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் அதிக தொலைவில் வரும் போதுதான் சாலையைக் கடக்க முயற்சி செய்ய வேண்டும். சாலையைக் கடக்க முயற்சி செய்யும் முன்னால் வலது புறத்தில் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். அடுத்ததாக இடது புறத்தில் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். வலது புறத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

நெரிசல் மிகுந்த சாலைகளில் தனியே பாதையைக் கடக்க பயமாக இருந்தால் வெட்கப்படாமல் யாரையாவது துணைக்கு அழைக்கலாம். பலர் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வலது புறத்தில் வரும் வாகனம் உங்களை நெருங்கிவிட்டது. அதனால் உங்களால் சாலையைப் பாதுகாப்பாகக் கடக்க முடியாது என்று உங்கள் மனதில் தோன்றினால்  தயவு செய்து சாலையைக் கடக்க முயற்சி செய்ய வேண்டாம். ஓரிரு நிமிடங்கள் காத்திருந்து பின்னர் சாலையைக் கடப்பது நல்லது.

சாலையைக் கடக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் வேக வேகமாக நடந்தபடியோ அல்லது ஓடியபடியோ சாலையைக் கடக்க முயற்சி செய்யாதீர்கள். பதற்றத்தில் தவறி கீழே விழுந்துவிட்டால் விபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

சிக்னல்
சிக்னல்

சாலையைக் கடக்க முடிவு செய்து பாதி தொலைவிற்கு சென்ற பின்னர் சிலர் பயந்து போய் அப்படியே நின்று விடுவார்கள். அல்லது திரும்பி புறப்பட்ட இடத்தை அடைய முயற்சி செய்வார்கள். இது பெரும் தவறாகும். நீங்கள் இந்த தவறைச் செய்யவே செய்யாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த ஒரு அரிசி போதும்; உடலில் உள்ள பிரச்னைகளுக்கு குட் பை சொல்லிடுங்க!
ஜீப்ரா கிராசிங்

பெருநகரங்களில் நெரிசல் மிக அதிகமுள்ள பகுதிகளில் பாதசாரிகளுக்காக சுரங்கப்பாதைகள் (Subways) அமைக்கப்பட்டிருக்கும். இது மிகவும் பாதுகாப்பான முறையாகும். மேலும், வேறு சில இடங்களில் இரயில் நிலையங்களில் உள்ளது போல சாலைகளில் இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் செல்ல படிக்கட்டுகள் (Foot-over Bridge) அமைக்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தி நீங்கள் பாதுகாப்பாக பயமின்றி சாலைகளைக் கடக்கலாம்.

சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் ஏதேனும் வேகமாக வந்தால் அவற்றை ஓட்டுபவர் உங்கள் மீது கரிசனம் கொண்டு உங்களுக்காக தங்கள் வாகனத்தின் வேகத்தைக் குறைப்பார்கள் என்று நினைக்கவே கூடாது. உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.

சாலையைக் கடக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் படபடப்பு கூடவே கூடாது.  சிலர் மொபைல் போனில் பேசியபடியே பாதையைக் கடப்பவர்களாக இருக்கிறார்கள். இதுவும் மிகவும் தவறான விஷயமாகும்.

சாலைப் பாதுகாப்பு விதிகளைத் தெரிந்து கொள்ளுவதும் அதைப் பின்பற்றி நடப்பதும் நமது கடமைகளில் ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் சாலைப் பாதுகாப்பு விதிகளை கற்றுக் கொடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com