நம் வீட்டிற்குள் வெளிச்சம் மற்றும் காற்று வருவதற்கு வாசலும், ஜன்னலும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீட்டில் அதிகப்படியான வெளிச்சம், காற்று இவற்றின் வழியாகவே வருகிறது. அத்தகைய ஜன்னலை அலங்கரிக்கவும், வெயில், தூசி போன்றவை வீட்டிற்குள் வராமல் தடுக்கவும் திரைச்சீலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பதிவில் எத்தனை விதமான திரைச்சீலைகள் உள்ளன என்பது பற்றி பார்க்கலாம்.
பிளாக் அவுட் கர்டெயின்(Block out curtains): பிளாக் அவுட் திரைச்சீலை பயன்படுத்துவதன் முக்கிய காரணமே அதிகப்படியான வெளிச்சம் வீட்டிற்குள் வருவதை தடுப்பதற்கேயாகும். இந்த வகை திரைச்சீலைகளை படுக்கையறை, திரையரங்கம் போன்ற இடங்களில் வெளிச்சம் தேவைப்படாது என்று நினைக்கும் இடங்களில் பயன்படுத்துவார்கள். அத்துடன் இது Thermal Insulation ஆகவும் இருப்பதால், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் வீட்டை வைத்துக்கொள்ள உதவும்.
ஷியர் கர்டெயின் (Sheer curtains): இந்த வகை திரைச்சீலை அப்படியே பிளாக் அவுட் திரைச்சீலைக்கு எதிரானதாகும். அதிகப்படியான வெளிச்சத்தை வீட்டிற்குள் வர அனுமதிக்கிறது. இந்த திரைச்சீலையில் உள்ள ஒளி ஊடுருவும் தன்மையானது பார்ப்பதற்கு ரொமேன்டிக்காகவும் மற்றும் மென்மையாகவும் அந்த அறையை மாற்றியமைத்துவிடும்.
வேவ் போல்ட் கர்டெயின் (Wave fold curtain): இதை ரிப்பிள் போல்ட் அல்லது S போல்ட் திரைச்சீலை என்றும் அழைப்பார்கள். இது பார்ப்பதற்கு ஆடம்பரமான லுக்கை கொடுக்கும். இந்த திரைச்சீலை அலை அலையாக தொங்குவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதை சுலபமாக நகர்த்திக்கொள்ளலாம். இந்த வகை திரைச்சீலை நவீனத்துவமாக்கப்பட்ட வீடுகளுக்கு ஏற்றதாகும்.
சிங்கிள் பேனல் கர்டெயின் (Single panel curtains): இதில் ஒரேயொரு திரைச்சீலையே அமைக்கப்பட்டிருக்கும். இது மினிமலிஸ்ட் விரும்பிகளுக்கு ஏற்ற திரைச்சீலையாகும். திரைச்சீலைகள் அதிகமாக திறந்து வைக்கப்படும் சிறிய இடம் கொண்ட வீடுகளிலே இதுபோன்ற திரைச்சீலைகள் பயன்படுத்தப்படுகிறது.
டபுள் பேனல் கர்டெயின் (Double panel curtains): டபுள் பேனல் கர்டெயினில் இரண்டு பக்கமும் திரைச்சீலைகள் இருக்கும். நடுவில் திறந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கும். இது பெரிய ஜன்னல்களுக்கு பயன்படுத்தக் கூடியதாகும். இரண்டு பக்கமும் சமமான லுக்கை தரும். இது நன்றாக மறைக்ககூடியதோடு இல்லாமல் வெளிச்சத்தை நமக்கு ஏற்றவாறு கொடுக்கக்கூடியது.
கேபி கர்டெயின் (Cafe curtains): கேபி கர்டெயின்கள் பாதி திரைச்சீலைகளைக் கொண்டது. இது ஜன்னலின் கீழ்ப்பகுதியை மறைத்து வெளிச்சம் வருவதற்கு மேற்பகுதி திறந்தவண்ணமுடையது. இந்த திரைச்சீலையை சமையலறை, பாத்ரூம் போன்ற இடங்களில் பயன்படுத்துவார்கள்.
அக்கோஸ்டிக் கர்டெயின் (Acoustic curtain): இந்த வகை திரைச்சீலைகளை Sound proof திரைச்சீலைகள் என்று கூறுவார்கள். இது தேவையற்ற சத்தம் வீட்டிற்குள் வருவதை தடுக்கும். இது மிகவும் தடிமனாக நெய்யப்பட்டு செய்த திரைச்சீலை என்பதால் சத்தத்தை தன்னுள் உரிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையது. சாலையோரங்களில் அமைந்திருக்கும் வீடுகளுக்கு இதுபோன்ற திரைச்சீலை பயன்படுத்துவது சரியாக இருக்கும்.