குடும்ப வேலைகளைப் பகிர்ந்து கொள்வோமே!

Let's share family chores
Let's share family choreshttps://www.btaskee.com/

ரு குடும்பம் என்றால் பல வேலைகள் இருக்கும். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அவருக்கே உண்டான பல கடமைகளும் பொறுப்புகளும் உண்டு. அந்தக் கடமைகளையும் பொறுப்புகளையும் செவ்வனே செய்து முடிக்க பல வேலைகளைச் செய்ய வேண்டும். இந்த எல்லா வேலைகளையும் ஒருவரே செய்வது என்பது இயலாத காரியம். அப்படியே செய்யலாம் என்று முயற்சி செய்தாலும், அவை செவ்வனே செய்து முடிக்கப்பட மாட்டாது. ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் தேவைப்படுவது வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுதல்.

இன்று பெரிய பெரிய நிறுவனங்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன என்றால் அதற்கு முக்கியமான காரணம் அங்கு இருப்பவர்கள் தங்களுக்குள் பல வேலைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்வதுதான். எவ்வளவு பணம் இருந்தாலும் எவ்வளவுதான் தொழில் நுட்ப அறிவு இருந்தாலும், ஒரு மனிதனால் மட்டும் தன்னுடைய நிறுவனத்தைத் தானே முழுமையாக நிர்வாகம் செய்ய முடியாது. அது போன்றுதான் ஒரு குடும்பமும்.

ஒரு வேலையைச் செய்வதற்கு முன்பு கீழ்க்கண்டவற்றை ஆலோசிப்பது நல்லது. அது நல்ல பயனைத் தரும்.

1. இந்த வேலையை நான்தான் செய்ய வேண்டுமா? அல்லது வேறு யாராவது செய்யலாமா? வேறு யாராவது செய்யலாம் என்றால், அவருக்கு நான் என்ன உதவி செய்யலாம்? இந்த வேலையை நான்தான் செய்து முடிக்க வேண்டும் என்றால் மட்டும்தான் நானே செய்வேன்.

2. இந்த வேலையை நான்தான் செய்ய வேண்டும். வேறு யாரும் செய்ய முடியாது, அல்லது செய்யக் கூடாது. ஆயினும் இதை உடனே செய்ய வேண்டிய அவசியமோ அவசரமோ இருக்கிறதா?

3. இந்த வேலையை நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், நானே செய்யக் கூடாது. மற்றவர்கள்தான் இந்த வேலையைச் செய்ய வேண்டும்.

சில உதாரணங்களைப் பார்ப்போம்:

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பது. இதை நாம்தான் செய்ய வேண்டும். இது போன்ற முக்கியமான கடமைகளைச் செய்ய சம்பளத்திற்கு ஆள் வைத்தால், அவை நேர்த்தியாகச் செய்யப்பட மாட்டாது. அப்படியே செய்யப்பட்டாலும் அதில் மனிதநேயம் இருக்காது.

வீட்டிற்கு வெள்ளையடித்தல்: முடிந்தால் இதை நாமே செய்யலாம். ஆனால், இதற்கென்று சிலர் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த வேலையை விட்டால் இதுபோன்ற வேலைகள் நேர்த்தியாகவும் தரமாகவும் செய்து முடிக்கப்படும். நமது சௌகரியத்தையும் மற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் பொறுத்து இதுபோன்ற வேலைகளை மற்றவர்கள் மூலமாகச் சாதித்துக் கொள்வது நல்லது.

குடும்பத்திலுள்ள வேலைகளைச் செய்யவும் மற்றவர்களுடன் நமது வேலைகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒரு மனோபாவம் தேவை. இந்த ஆரோக்கியமான மனோநிலையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நம்மில் பலர் நினைக்கலாம் வெளியில் சென்று வேலை செய்வதுதான் கடினமான செயல் என்று. ஆனால், வீட்டிலிருக்கும் ஒரு குடும்பத் தலைவியின் அன்றாட வாழ்க்கையைச் சற்றே உன்னிப்பாக நோக்கினால் அவருடைய வேலைகளின் சுமையை நாம் உணர முடியும். வீட்டிலுள்ள எல்லோருடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் யோசித்து அவற்றைத் திருப்தி செய்ய வேண்டும். யாருக்காவது ஏதாவது குறை வைத்துவிட்டால் போதும், முணுக்கென்று கோபம் வந்துவிடும். அவரவர் ருசிக்கேற்ப உணவும், மற்ற தின்பண்டங்களையும், அவரவர் நேரத்திற்கேற்ப கொடுக்க வேண்டும். இவற்றுக்கிடையில் பணப் பற்றாக்குறை, பொருள் பற்றாக்குறை, நேரம் பற்றாக்குறை போன்ற பல தடங்கல்கள். இவற்றையெல்லாம் சமாளித்து, வேலைகளையெல்லாம் செய்தபின்பும் கூட ஒரு கோபமும் வராமல் முகத்தில் ஒரு நிரந்தரமான புன்முறுவலைக்கொண்டிருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய வேலைப் பளு எவ்வளவு, அவர்களுக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறதா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்காக பெரிய பெரிய வேலைகளைச் செய்து தங்களுடைய வேலைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்பதில்லை. சின்னச் சின்ன வேலைகளைப் பகிர்ந்துகொள்ளலாம். உதாரணமாக, மனைவி அடுப்பறையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்றால், தண்ணீர் பிடித்து வைத்தல், பாத்திரப் பண்டங்களை ஒழுங்குபடுத்தி வைத்தல் போன்ற சிறு சிறு வேலைகளைக் கணவன் செய்தால், எவ்வளவோ திருப்தியும் பரஸ்பரமும் ஏற்படும். இவற்றைச் செய்ய அதிக நேரம் தேவைப்படாது. சிரமமாகவும் இருக்காது.

அதேபோன்று மனைவி இரண்டு குழந்தைகளுக்கும் தானே பாடம் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்காமல், தான் ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுக்கலாமா என்று யோசனை செய்யலாம்.

கணவன் அலுவலகத்திலிருந்து அலுவலக வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார் என்றால் தன்னால் அந்த வேலைகளைத் துரிதமாகச் செய்து முடிக்க என்ன உதவிகளைச் செய்யலாம் என்று மனைவி யோசனை செய்யலாம். தன்னால் ஒன்றுமே செய்ய முடியாதா? குறைந்தபட்சம், அந்த நேரத்தில் டீ.வி.யைப் பெரிதாக வைத்து அவருடைய வேலையைத் தடங்கல் செய்யாமலாவது இருக்க முடிகிறதா என்று முயற்சி செய்யலாம்.

இதேபோன்று குழந்தைகள் பெரியவர்களாக இருந்தால், குடும்பத்திலிருக்கும் வேலைகளில் தகுந்த பொறுப்புக்களை அவர்கள் மனமுவந்து ஏற்று உதவி செய்யக்கூடிய மனோநிலையையும் மனப் பக்குவத்தையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் தங்களுடைய வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள கற்றுத் தர வேண்டும். எத்தனை நாள்தான் அவர்களுடைய அன்றாட துணிமணிகளையும் பாடப் புத்தகங்களையும் நீங்கள் எடுத்து வைப்பீர்கள். சாப்பிடத் தட்டுப் போட்டுக்கொண்டு மீண்டும் அதைக் கழுவி அதற்குரிய இடத்தில் வைப்பது, தங்களுடைய அறையையோ இடத்தையோ சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்வது போன்ற பல விஷயங்களில் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் ஒரு நாளாவது குடும்பத்திலிருக்கும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து தங்களுடைய அன்றாட வேலைகளைப் பற்றிப் பேச வேண்டும். யாருக்கு வேலைப் பளு அதிகமாக இருக்கிறது, யாருக்கு அதிக வேலையில்லாமல் ஒய்வு இருக்கிறது, யாருடைய வேலையை யார் எப்படிப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வெளிப்படையாகப் பேச வேண்டும். நிறுவனங்களில் இதையே JOB ROTATION என்று சொல்வார்கள். நிறுவனம் என்பதும் ஒரு பெரிய குடும்பமே. நிறுவனத்தில் கடைப்பிடிக்கப்படும் பல வழிமுறைகளும் தத்துவங்களும் ஒரு குடும்பத்தின் தேவைக்கேற்ப கடைப்பிடிக்கப் படலாம். இதில் தவறேதும் இல்லை.

ஒரு இனிமையான குடும்பத்தில் மன இறுக்கமும் (MENTAL TENSION) சோர்வும் இருக்கக் கூடாது. இவை தவிர்க்கப்பட வேண்டுமானால், குடும்பத்திலுள்ள வேலைகளை அனைவரும் பகிர்ந்துகொண்டு தமக்குள் இருக்கும் சுமுகத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

முயன்று பாருங்கள், உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

நன்றி: மங்கையர் மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com