ஹேண்ட் பேக்குகளை கவனிப்போம்!

ஹேண்ட் பேக்குகளை கவனிப்போம்!

ஷாப்பிங், வேலைக்கு என்று செல்லும் பெண்கள் வீட்டு வாசலை தாண்டும் போது கையில் பையை தூக்கு கின்றனர். மாலை வீடு வரும் வரை அவர்களோடு எப்போதும் இருப்பது ஹேண்ட் பேக்தான். இதில் ஒரு டாய்லெட்டில் இருப்பதைவிட அதிக அளவு கிருமிகள் பெண்களின் ஹேண்ட்பேக்கில் இருக்கின்றன என நிரூபித்திருக்கிறது ஒரு ஆராய்ச்சி. அந்த ஹேண்ட் பேக்கை கையாளும் முறை பற்றி இதில் காண்போம்! 

ஹேண்ட் பேக்கில் மிக அசுத்தமான பகுதி என கைப்பிடியைத்தான் குறிப்பிடுகிறார்கள். எப்போதும் அதை கைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. வேறு ஏதாவது வேலை பார்த்துவிட்டு திரும்பவும் கைப்பிடியை பிடித்தபடி ஹேண்ட் பேக்கை தூக்கி வருகிறோம். எங்கெங்கோ இருக்கும் கிருமிகளை நாமே கைப்பிடி களில் கொண்டு வந்து சேர்க்கிறோம். அங்கிருந்து நம் உடலிலும் பரவ விடுகிறோம்.

ஹேண்ட் பேக்கில் உள்ளே இருக்கும் மிக அசுத்தமான பொருள் முகத்துக்கு பூசும் கிரீம். எப்போதும் ஈரப்பதமாக இருப்பதால் பாக்டீரியாக்கள் போஷாக்காக வளர உகந்த சூழலை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது. அடிக்கடி திறந்து மூடும் எல்லா மேக்கப் ஐட்டங்களிலுமே கிருமிகள் ஏராளம்.

ஹேண்ட் பேக்கிற்கு கிருமிகளை பரப்பும் இன்னொரு டேஞ்சர் ஐட்டம் செல்போன். பலருக்கு அது பதினோராவது விரல் போலவே இருக்கிறது. டாய்லெட் போகும்போது கூட அதை எடுத்துப் போகிறவர்கள் பலர். எங்கெங்கிலுமிருந்து கிருமிகளைக் கடத்தி வந்து,  பைக்குள் பத்திரமாக சேமிக்கிறது செல்போன்.

லெதர் ஹேண்ட்பேக்குகளில்தான் கிருமிகள் அதிகம் வளர்கின்றனவாம். அவற்றின் உட்புறம் மிருதுவாக இருப்பது பாக்டீரியா போன்ற கிருமிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

ஃபுட் பாய்சனிங்கிற்கு காரணமாக அமையும் ஈகோலி, நிமோனியா காதுகளில் நோய் தொற்று என பல நோய்களை ஏற்படுத்தும் ஸ்டெப்டோ காக்கஸ் பாக்டீரியா என பல கிருமிகள் சர்வசாதாரணமாக ஹேண்ட் பேக்குகளில் உலவுகின்றன. இந்த விபரீதம் புரியாமல் பலர் சாப்பிடும் ஐட்டங்கள்,  சாக்லேட்டுகள், மாத்திரைகளை அப்படியே பைகளில் வைத்து பயன் படுத்துகிறார்கள். பலரது குழந்தைகள் பொழுது போக்குக்காக ஹேண்ட் பேக்கில் கைப்பிடிகளைத்தான் கடித்துக் கொண்டிருக்கின்றன. 

மிகவும் சுகாதாரமாக இருக்கும் பெண்கள் கூட ஹேண்ட் பேக்குகளை அடிக்கடி சுத்தம் செய்வது இல்லை .33 சதவீத பெண்கள் எப்போதாவது எதையாவது தேடும்போது சுத்தம் செய்தால்தான் உண்டு என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். துணிகளை துவைப்பது போல ஹேண்ட் பேக்குகளை அலச முடியாது. ஆனால் சில முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளலாம். 

ஈரமான கிருமி நாசினி டவல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. மாதம் இரண்டு முறையாவது ஹேண்ட் பேக்கில் இருக்கும் எல்லா பொருட்களையும் எடுத்துவிட்டு, இந்த டவலால் துடைத்து காற்றோட்டமான இடத்தில் ஹேண்ட் பேக்குகளை உலர வைக்கலாம். குறிப்பாக கைப்பிடிகள், உட்புறங்களில் நன்கு துடைக்கவும். 

ஹேண்ட் பேக்கில் இருக்கும் பொருட்களை அப்படியே எடுத்து பயன்படுத்த வேண்டாம். கைகளை கழுவிக்கொண்டு எடுக்கவும். பயன்படுத்திய பிறகு இறுக்கமாக மூடி வைக்கவும். பேஷியல் கிரீம் போன்றவற்றை கைகளில் எடுத்து பூசினால் அதில் இருக்கும் பாக்டீரியாக்களையும் முகம் முழுக்க பூசுகிறீர்கள் என அர்த்தம். அப்படியே நேராக முகத்தில் பூசும் வசதி கொண்ட டியூப்களை வாங்கி பயன்படுத்தலாம். 

பஞ்சில் கிருமி நாசினி நனைத்து ஹேண்ட் பேக்கின் கைப்பிடியை தினமும் துடைக்கலாம். 

பழங்களை வாங்கி எப்போதும் ஹேண்ட் பேக்கில் வைக்காதீர்கள். 

குழந்தைகள் ஹேண்ட் பேக்கை வைத்துக்கொண்டு  படிக்கவோ விளையாடவோ அனுமதிக்காதீர்கள். 

இதுபோல் செய்தால் ஓரளவாவது கிருமிகளிடமிருந்து தப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com