உயிர் காக்கும் கவசமான RCD மின் சாதனம்: உடனே இதைச் செய்யுங்கள்!

RCD Device
RCD Device

மின் விபத்துகளைத் தவிர்க்க நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அவ்வப்போது மீட்டர் பாக்ஸ் மற்றும் மின் வயர்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மையும் மீறி நடக்கும் மின் விபத்துகளைத் தடுக்கப் பயன்படும் ஆர்சிடி என்ற சாதனத்தைப் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மின்சாரத் துறையும் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கிறது. காற்று, நீர் மற்றும் பல ஆதாரங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அநேக இடங்களில் அடிக்கடி மின்கசிவு மற்றும் மின் பழுதால் மின்சார விபத்துகள் ஏற்படுவதை நம்மால் செய்திகளில் காண முடிகிறது. இந்த விபத்துகளின் போது மனித உயிர்கள் பலியாவதும் வேதனைக்குரியது. இது மாதிரியான மின்சார விபத்துகளைத் தவிர்க்க கண்டுபிடிக்கப்பட்டது தான் ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (RCD) என்ற மின் சாதனம். இந்த சாதனத்தை வீடுகள் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் பொருத்தினால் மின் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்கிறது மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

மழைக்காலங்களில் மின் வயர்கள் அறுந்து விழுவது, மின் கசிவு மற்றும் மின் பழுது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இருப்பினும் இம்மாதிரியான நேரங்களில் தான் மின் விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த மின் விபத்துகளைத் தடுக்க புதிய நுகர்வோர்கள் மட்டுமின்றி, பழைய நுகர்வோர்களும் ஆர்சிடி சாதனத்தை மின் இணைப்பில் பொருத்திக் கொள்ள வேண்டும். மனித உயிர்களைக் காக்கும் கவசமாக விளங்கும் ஆர்சிடி சாதனத்தை வீடுகள், பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் பொருத்திக் கொள்ள முடியும்.

மின்சாரம் செல்லும் பாதையில் ஏதேனும் சிக்கலைக் கண்டறிந்தால் ஆர்சிடி சாதனம், உடனடியாக வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்து விடும். மின் அதிர்ச்சியால் உண்டாகும் தீ விபத்துகளைத் தடுத்து, உயிர் மற்றும் பொருள் சேதங்களைத் தவிர்க்க ஆர்சிடி சாதனம் உதவுகிறது. குறிப்பாக வீட்டில் மின்சாரத் தேவை அதிகமாகத் தேவைப்படும் இடங்களான சமையலறை, உள் அறைகள் மற்றும் குளியலறை போன்ற இடங்களில் ஆர்சிடி சாதனத்தைப் பொருத்துவது மிகவும் அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!
RCD Device

ஆர்சிடி சாதனம் மிகவும் குறைந்த விலையில் நேர்த்தியுடனும் இருப்பதால் அணுகுமுறையிலும், பொருளாதார ரீதியாகவும் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆர்சிடியை சரியான முறையில் பொருத்திய பிறகு அதனைத் தொடர்ந்து பராமரித்து, ஒவ்வொரு ஆண்டும் சரியாக வேலை செய்கிறதா என்பதை சரிபாரத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் ஆர்சிடி எனும் உயிர் காக்கும் சாதனம் அவசியம் தேவை எனவும், இதனை அனைவரும் பொருத்த வேண்டும் எனவும் TANGEDGO நிறுவனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவோ வீண் செலவுகளைச் செய்கிறோம் அல்லவா! நம் உயிரைக் காக்கும் ஒரு சாதனத்திற்காக சிறிது பணத்தை செலவு செய்து உடனே வீட்டில் பொருத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com