வாஸ்து சாஸ்திரத்தில் செடிகளுக்கும் மரங்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. சில செடிகள் நம் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகவும், செல்வ வளம் பெருக்குவதாகவும் இருக்கும். ஆனால், சில செடிகள் அழகாக உள்ளது என்று வைத்து வளர்க்க ஆரம்பித்தால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, வீட்டிற்குள்ளும், வீட்டுக்கு அருகிலும் வளர்க்கக் கூடாத சில செடிகள், மரங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சில செடிகளை நாம் வீட்டில் வைத்து வளர்ப்பது நல்லதல்ல என்று நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோல் வாஸ்து படி வீட்டில் சில செடிகளை வைக்கவோ வளர்க்கவோ கூடாது என்றும் சொல்வார்கள்.
வீட்டில் வளர்க்கக் கூடாத மரம், செடிகள்:
1. முள் செடிகள்: ரோஜாவைத் தவிர மற்ற முட்செடிகளை வீட்டில் வைத்து வளர்ப்பது நல்லதல்ல என்று கூறப்படுகிறது.
2. புளிய மரம்: அதேபோல், புளிய மரத்தையும் வீட்டில் வைத்து வளர்ப்பது சரியல்ல. அவை தீய சக்திகள் குடியிருக்கும் மரமாகக் கருதப்படுவதால் புளிய மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது.
3. சிவப்பு நிற பூச்செடிகள்: வாஸ்து சாஸ்திரப்படி சிவப்பு வண்ணம் கொண்ட அரளிச் செடிகளை வீட்டில் வளர்ப்பது சரியல்ல. போன்சாய் மரங்களையும் சிவப்பு நிற மலர்களைக் கொண்ட செடிகளையும் வீட்டிற்கு உட்புறம் வைத்து வளர்க்கக் கூடாது. தோட்டத்தில் அல்லது வீட்டிற்கு வெளியே திறந்த வெளிப்பகுதிகளில் வைக்கலாம்.
4. கருவேல மரங்கள்: வீட்டிற்கு அருகில் கருவேல மரங்கள் இருப்பதும் தீய பலன்களைத் தரும் என்பதால் கருவேல மரத்தை வீட்டில் அல்லது வீட்டுக்கு அருகில் வளர்வதை அனுமதிக்கக் கூடாது.
5. காய்ந்து போன மரங்கள்: காய்ந்த பட்டுப்போன செடிகளையோ மரங்களையோ வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அவற்றை உடனே அகற்றி விடுவது வாஸ்துப்படி நல்லது. இல்லையெனில், அவை நமக்கு துரதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அதுபோல், பருத்திச் செடிகளையும் பனை மரங்களையும் வீட்டில் வளர்க்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. மேலும், சப்பாத்திக்கள்ளி செடிகளையும் கண்டிப்பாக வீட்டில் வளர்க்கக் கூடாது.
சில செடிகள் எதிர்மறை சக்திகளை உருவாக்கி துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என வாஸ்து சாஸ்திரம் எச்சரிப்பதால் இப்படிப்பட்ட செடிகளை வீட்டில் வளர்க்காமல் இருப்பது நல்லது.
வீட்டில் வளர்க்கக்கூடிய சிறந்த வாஸ்து தாவரங்கள்:
1. வீட்டில் நல்ல அதிர்வைக் கொண்டு வரும் சில சிறந்த வாஸ்து தாவரங்கள் துளசி, மல்லிகை, மணி பிளான்ட் ஆகியவையாகும். இவை வீட்டின் நுழைவாயிலுக்கு சிறந்த வாஸ்து செடிகளாகக் கூறப்படுகிறது.
2. மூங்கில் செடி மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், புகழ், செல்வம் ஆகியவற்றைக் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது.
3. வேப்பமரம், அசோக மரம், வாழைமரம், மாமரம், தென்னை மரம் ஆகியவை நேர்மறை ஆற்றலையும் மகிழ்ச்சியையும் உண்டுபண்ணக் கூடியவை.
4. ஆலோவேரா, ரோஸ்மேரி, லாவெண்டர், சாமந்தி, செம்பருத்தி, ஆர்க்கிட்ஸ் போன்ற செடிகளை தாராளமாக வளர்க்கலாம்.