சென்னை.. மாநகரம்! சென்னைக்கு சென்றால் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்று வெளியூரில் இருந்து வருபவர்கள் சொல்வது உண்டு. சுதந்திரமாக காலரை தூக்கி கொண்டு சொல்வார்கள்.. ‘எங்க ஊரு மெட்ராஸு’ என்று. அந்த அளவுக்கு சென்னையை பிடித்து வாழ்பவர்கள் ஏராளம்.
விடிய விடிய நடுரோட்டில் தங்கி தங்களின் தரத்தை உயர்த்தி கொண்டவர்கள் எத்தனையோ பேர். அப்படி ஒவ்வொருவரையும் இந்த ஊர் தூக்கி வாழ வைத்துள்ளது. அப்படிப்பட்ட சென்னை மாநகரத்தின் 384வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கல.. கல.. சென்னையின் இன்றைய அடையாளங்களாக இதோ சில:
பட்டய கிளப்பும் புள்ளிங்கோ:
சென்னை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது வடசென்னையின் புள்ளிங்கோதான். வித்தியாசமான சிகை அலங்காரம்! இப்படியெல்லாம் கூடி முடி திருத்தம் செய்துகொள்ள முடியுமா என்று வியக்கும்படி கலர் கலராக தலையில் பூசி கொண்டு க்ளிப், கடுக்கண்( அதிலும் எலும்பு கூடு, மண்டை ஓடு படு பிரசித்தம்!) என அவர்களின் கல்சரே வித்தியாசமானது.
கட்டுக்கடங்கா தெறி கானா:
கானா பாடல் உருவானதே சென்னையில் தான் என்றே சொல்லலாம். டோலியை வைத்து கொண்டு அழகாக மெட்டு போட்டு அனைவரையும் மயக்குவார்கள், ஆடவும் வைப்பார்கள். தற்போது இந்த பாடல்கள் அடுத்தக்கட்டத்திற்கு போய் திரைப்படங்களில் ஒலிக்க தொடங்கிவிட்டது.
கானா பாலா தனது அசாத்திய திறமையால் அட்டக்கத்தியில் தனது முதல் பாடலை பாடினார். அவரின் ஆடி போன ஆவணி மற்றும் நடுக்கடலுல கப்பல இறங்கி பாடல்கள் பலரையும் வித்தியாச உலகத்திற்கு கொண்டு சென்றது.
கைக்கொடுக்கும் கையேந்தி பவன்கள்:
சென்னையில் தள்ளுவண்டி போட்டா கூட பிழைச்சுக்கலாம் என்று சொல்வார்கள். தெருவிற்கு தெரு ஏகப்பட்ட தள்ளுவண்டி கடைகள்! எந்த பக்கம் திரும்பினாலும் சென்னையில் ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்க்கு பஞ்சமிருக்காது. நடுராத்திரியில் கூட சென்னையில் சுடசுட பிரியாணி கிடைக்கும்.
மயங்க வைக்கும் மால்கள்:
சென்னையில் மால்களுக்கு பஞ்சமே இருக்காது. வார இறுதியில் பலருக்கும் எண்டெர்டெயின்மெண்டே இந்த மால்கள் தான்.
பொருட்கள் வாங்க காசு இல்லாவிட்டாலும், சும்மா பொழுதைப் போக்கலாம் இங்கே! பணம் இருந்தால் படு குஷி!