Manathara Parattuvome! Ethil Kanchathanam Etharkku?
Manathara Parattuvome! Ethil Kanchathanam Etharkku?https://www.istockphoto.com

மனதார பாராட்டுவோமே! இதில் கஞ்சத்தனம் ஏனோ?

பாராட்டு என்பது தாராளமாக பிறருக்கு அளிக்க வேண்டியது. எல்லோருமே தாம் செய்யும் செயலுக்கு பலனாக பணமோ அல்லது பொருளோ எதிர்பார்ப்பதில்லை. ஆனால், உற்சாகப்படுத்தும், ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் பாராட்டுக்களாக வரும்போது அவர்கள் மனம் மகிழும். அவர்களுடைய செயல்களில் இன்னும் சிறப்பு கூடும். இன்னும் மேன்மையாக அவர்கள் தங்கள் செயல்களை செய்வார்கள்.

என்னுடைய தூரத்து உறவு பெரியப்பாவிற்கு 80 வயது ஆகிறது. அவர் எப்போதும் சிடுசிடுத்த முகத்துடனும் கடுகடு பேச்சுமாக இருப்பார். அவரை நெருங்கி பேசவே அவருடைய கொள்ளு பேரன்கள் கூட பயப்படுவார்கள்.

'பெரியவங்கன்னா ஒரு பயம் இருக்கணும் சின்னவங்களுக்கு’ என்று எப்போதும் சொல்வார். அதனால் பிறரை அதட்டிக் கொண்டும் அவர் சொல்வதைப் பிறர் கேட்டே ஆக வேண்டும் என்றும் பிடிவாதமாக இருப்பார். தன் மகன், மகள், பேரன், பேத்திகள் என்று எல்லோரிடமும் எப்போதுமே இறுக்கமாக இருப்பார். அவர்களைப் பாராட்டி பேசவே மாட்டார். ஆனால், அவர்கள் இல்லாதபோது பிறரிடம் தனது குடும்பத்தினரைப் பற்றி பெருமையாகப் பேசுவார்.

சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது அவரை வீட்டினர் நன்றாக கவனித்துக் கொண்டனர். அவருடைய மருமகளுக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயதாகிறது. அவர் தனது மாமனாரை மிகுந்த கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்.

அவர், அந்த மருமகளைப் பற்றி தன்னுடைய நண்பரிடம் மிகவும் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். “எனது மருமகள் எனக்கு பார்த்து பார்த்து செய்கிறார். ரொம்ப நல்ல மனது அவருக்கு. இதுபோல மருமகள் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்'’ என்றார்.

அப்போது அவருடைய நண்பர், ''ஏம்பா, நீ நேர்ல உன் மருமகளை என்ன திட்டு திட்டுற? இவ்வளவு பாசத்தை மனசுல வச்சிக்கிட்டு ஏன் எப்பவும் வெளியில இறுக்கமாவே இருக்கிற? உன்னோட மருமகளை கூப்பிட்டு, ‘நீ நல்லா என்னை பாத்துக்கிட்டமா' என்று ரெண்டு வார்த்தை பாராட்டி பேசினால் என்ன குறைந்து விடும்?’’ என்றார்.

இதையும் படியுங்கள்:
அடம் பிடிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு அவசியமான 10 ஆலோசனைகள்!
Manathara Parattuvome! Ethil Kanchathanam Etharkku?

அவருடன் வந்திருந்த அவருடைய 22 வயதுப் பேரன், “ஆமாம் தாத்தா, நாங்க எல்லாம் பெரியவங்கன்னா ஒரு எதிர்பார்ப்பு வெச்சிருப்போம். இப்ப நீங்க சின்னவங்க எல்லாம் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு கண்டிஷன் போடுறீங்க இல்ல? அதே மாதிரி, பெரியவங்கன்னா பக்குவமா பெருந்தன்மையா இருக்கணும், சின்னவங்களை நல்லது செஞ்சா மனசார பாராட்டணும் இதெல்லாம்தான் பெரியவங்களுடைய குணங்கள்'’ என்றான்.

அதைக் கேட்டு என் பெரியப்பா ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின்பு, “ஆமாம், இத்தனை வருடங்களாக நான் பிறரை பாராட்டிப் பேசினால் அவர்களுக்கு தலைக்கனம் வந்து விடுமோ அப்படின்னு நினைச்சு யாரையுமே நேரில் பாராட்டினது இல்ல. இப்ப 80 வயசு ஆயிடுச்சு. இத்தனை நாட்களை வீணே கழிச்சிருக்கேன்னு எனக்குத் தோணுது. மனுஷங்கன்னா அன்பும் கருணையும் நிறைஞ்சவங்கதான். அவங்களை பாராட்டியும் உற்சாகப்படுத்தியும் நாலு வார்த்தை பேசினா அவங்க மனசு குளிர்ந்து இன்னமும் நல்லபடியா நடந்துக்குவாங்க அப்படிங்கறத ரொம்ப லேட்டாதான் நான் புரிஞ்சுகிட்டேன்'’ என்றார்.

பாராட்ட வேண்டும் என்று நினைத்து விட்டால் அதில் எந்தவிதமான கஞ்சத்தனமும் காட்டாமல் மனம் திறந்து உளமாற பாராட்டுவது நல்லது. பாராட்டப்படும் நபருக்கு மட்டுமல்ல, பாராட்டுபவருக்கும் நல்ல மன நிறைவை அது தரும் என்பது உறுதி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com