டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன?
டவுன் சிண்ட்ரோம் அல்லது மனநலிவு என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. பொதுவாக மனித உடலில் மொத்தம் 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு 21வது ஜோடியில் குரோமோசோமின் கூடுதல் நகல் உள்ளது. இதுவே டவுன் சிண்ட்ரோம் குறைபாடு எனப்படுகிறது.
டவுன் சிண்ட்ரோம் (மனநலிவு) தினம்:
இந்தக் குறைபாட்டை கண்டுபிடித்தவர் பிரிட்டிஷ் மருத்துவர் ஜான் லாங்டன் டவுன் என்பதால், அவரின் பிற்பாதிப் பெயரால் டவுன் என்று பெயரிடப்பட்டது. இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ. நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.
டவுண் சிண்ட்ரோம்’ அதாவது மன நலிவு ஒரு நோயல்ல; இது ஒரு குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே கருதவேண்டும்.
ஆனால் இது, மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும். எல்லோரையும் போலவே, டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களை ஏற்றுக்கொள்ளவும் சமமாக நடத்தப்படவும் அனைத்து உரிமைகளும் உள்ளன என்பதை வலியுறுத்தவே இந்தத்தினம் கொண்டாடப் படுகிறது.
டவுன் சிண்ட்ரோம்’ குறைபாடின் அறிகுறிகள்:
இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அமைப்பு இருக்கும். மேலும் கைவிரல்கள் குட்டையாகவும், கைகளில் மூன்று ரேகைக்கு பதில் ஒரு ரேகையுடன் இருப்பர்.
இவர்களுக்கு, இயல்பான தசை உறுதி குறைந்து, தளர்வாக இருக்கும். பிறக்கும்போது எடை குறைவாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தை விட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக் கொண்டும் காணப்படும். இவர்களின் உடல், மன வளர்ச்சி, மற்ற குழந்தைகளைவிட குறைவாகவே இருக்கும். இந்தக் குழந்தைகள் தவழ்வது, உட்காருவது போன்றவற்றைச் செய்ய, மற்றக் குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிக காலம் எடுத்துக் கொள்வர்.
இந்த அறிகுறிகள் எல்லாமே பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும் என்பது கிடையாது. பாதிப்பின் வீரியமும் வேறுபடும்.
பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள்:
45 வயதில் கருவுறும், 30 பெண்களில் ஒருவருக்கு, மன நலிவுடன் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் அதிகம். அதேபோல், முதல் குழந்தை மன நலிவு குறைபாட்டுடன் இருந்தால், அடுத்த குழந்தைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும்.
டி.என்.ஏ., பரிசோதனையுடன் இணைந்த கூட்டுப் பரிசோதனை மூலம், குழந்தைக்கு மன நலிவு இருப்பதைக் கருவிலேயே உறுதி செய்யலாம். ரத்தப் பரிசோதனையில், தாயின் ரத்த மாதிரி பரிசோதித்து அறியப்படும். மீயொலி பரிசோதனை மூலம், குழந்தையின் பின் கழுத்து பகுதி ஆராயப்படும். அங்கே இயல்புக்கு மாறான தன்மையும், அதிக அளவில் திரவமும் இருந்தால், குழந்தைக்கு மன நலிவு இருப்பது உறுதி செய்யப்படும்.
மன நலிவு குறைபாட்டை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், துவக்க நிலையிலேயே கண்டறிந்தால், குழந்தையின் வளர்ச்சியிலும், செயல்பாடு களிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். புலன் உணர்வு, உடலியக்கச் செயல்பாடு, அறிவாற்றல் ஆகியவற்றில், நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும். இதற்கென தனியாகப் பயிற்சியளித்தால், அடிப்படை வேலைகளுக்கு, குழந்தை பிறரைச் சாராமல் இருக்க முடியும். இதற்கிடையே மருத்துவக் கண்காணிப்பும் நிச்சயம் அவசியம்.
இந்தியாவில் டவுன் சிண்ட்ரோம் விழிப்புணர்வு தினம்:
இந்தியாவில் இத்தினத்தன்று பல இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் டவுன் சிண்ட்ரோம் உள்ள நபர்களுக்கு ஆதரவையும் பயிற்சியையும் வழங்குகின்றன. அவர்கள் முக்கியத்துவத்தைக் குறிக்க இலவச கண்டறிதல் மற்றும் டவுன் சிண்ட்ரோம் தெரபி நடத்துகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் வாக்கத்தான், (Walkathan) கண்காட்சிகள், போட்டிகள் மற்றும் பிற வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள்.
With Us, Not For Us என்பதே இந்த ஆண்டிற்கான தீம் (கருப்பொருள்) ஆகும். டவுன் சிண்ட்ரோம் உள்ள நபர்கள் நம்முடன் இருக்கின்றனர். அவர்களுக்கும் சமஉரிமையும், வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்.