கடவுளுக்கு சாத்தப்படும் மாசி பச்சை மாலை - நன்மைகள் உண்டு; ஆனால்..!

Masi pachai Malai
Masi pachai Malai
Published on

கடவுளுக்கு சாத்தப்படும் மாசி பச்சை மாலையில் இவ்ளோ விஷயம் இருக்கா?

நாம் இந்த மாசி பச்சை இலையை அடிக்கடி மாலைகளில் பார்த்திருப்போம். மாலைகளில் மலர்களுக்கு நடுவில் மாசி பச்சை வைத்து கட்டுவார்கள். கோயில்களில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் துளசி இலையுடன் மாசி பச்சை கலந்து கொடுப்பார்கள்.

இந்த மாசி பச்சையின் நறுமணம் நேர்மறையான ஆற்றலை கொடுக்க கூடியது. எனவே இந்த தீர்த்தத்தை நாம் குடிக்கும் போது ஒருவித நிம்மதி ஏற்படும். வீடுகளில் அழகுக்காக இந்த செடியை வளர்த்து வருவார்கள். மேலும் ஆன்மீக ரீதியாக இந்த மாசி பச்சையை பயன்படுத்தி வருவதும் உண்டு.

மேலை நாடுகளில் இந்த மாசி பச்சை இலையை வசிய துளசி, மாய துளசி என்று பல பெயர்களில் அழைப்பதுண்டு. காரணம் வசியம் செய்வதற்கு இதை பயன்படுத்துவார்கள். நாம் இந்த பதிவில் மாசி பச்சையின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

மாசி பச்சை:

இது ஒரு மூலிகை செடியாகும். மாசி பச்சை மிதமான வெப்பமண்டல நாடுகளில் வளர்கிறது. இது மாசி பத்திரி அல்லது மாசி பச்சை என்றழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதன் பெயர் Common Wormwood அல்லது Mugwort ஆகும். தமிழ் மாதமான மாசி மாதத்தில் இதன் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு மாசி பத்திரி என பெயர் பெற்றது. இந்த செடியில் ஒன்றை மட்டும் வீட்டில் வளர்த்தால் போதும். இதன் அருகில் மேலும் பல செடிகள் வளரும்.

மாசி பச்சை பயன்கள்:

மாசி பச்சை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தூபம் போட்டு வந்தால் பூச்சி தொல்லை நீங்கும். சிறந்த பூச்சி விரட்டியாக உள்ளது.

மாசி பச்சை கிருமி நாசினியாக பயன்படுகிறது. இரண்டு அல்லது மூன்று இலைகளை நீரில் போட்டு குடித்து வந்தால் குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

உடலில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும். மேலும் பித்தப்பை நோய், கல்லீரல் பிரச்சனை, காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

மலேரியா, புற்றுநோய் செல்களுக்கு எதிராக இந்த மாசி பச்சை செயல்படுகிறது.

உடலில் ஏற்பட்டுள்ள நோய் காரணமாக கை, கால் வீக்கம் இருந்தால் இந்த இலையை அரைத்து பூசி வர வீக்கம் குணமடையும்.

இந்த இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எல்லா விதமான சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்.

பல நாட்களாக உடலில் துர்நாற்றம் உள்ளவர்கள் இந்த இலையை நீரில் கலந்து குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் மாசி பச்சை இலை கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

குறிப்பு: மாசி பச்சையில் நன்மைகள் இருந்தாலும் இதிலிருந்து பெறப்படும் எண்ணெய்யில் துஜோன் என்ற வேதிப்பொருள் உள்ளது. நாம் இந்த எண்ணெய்யை நேரடியாக சுவாசிக்கும் போது அது மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அதாவது மீண்டும் மீண்டும் முகர்ந்து பார்க்க தூண்டும். எனவே மாசி பச்சையை தீர்த்தத்தில் பயன்படுத்துவது போல குறைந்த அளவு பயன்படுத்தலாம்.

மற்ற நோய்களுக்கு மருந்தாக எடுத்துக்கொள்ளும் போது மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுவது சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com