மழைக்காலம் தொடங்கிவிட்டாலே ஊரெங்கும் ஜுரம், சளி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்குக் குறைவிருக்காது. இதுபோன்ற பிரச்னைகளுக்குக் கைகண்ட மருந்தாக விளங்குகிறது தூதுவளைக் கீரை. இம்மாதிரி மழைக்கால நோய்களால் அவதிப்படுவோர், நீங்கள் மேற்கொள்ளும் இதர மருத்துவத்துடன், கைப்பிடியளவு தூதுவளை கீரையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டிய கஷாயத்தை மூன்று வேளை அருந்தி வர அந்நோய் விரைவில் குணமாகும். இந்தக் கீரையை துவையலாக அரைத்தும் உணவுடன் பயன்படுத்தலாம்.
தற்காலத்தில் இள வயதினரையும் விட்டு வைக்காத ஒரு உடற்பிரச்னை சர்க்கரை நோய். இந்த நீரிழிவு பிரச்னைக்கு கைக்கண்ட மருந்தாக விளங்குகிறது தூதுவளை கீரை. இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மேலும், வயது மூப்பின் காரணமாக ஞாபகத் திறன் குறைவினால் அவதியுறுவோர் தூதுவளைக் கீரையை அடிக்கடி உணவுடன் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமை பெற்று நினைவாற்றல் பெருகுகிறது. இள வயதினரும் கூட ஞாபகத் திறன் அதிகரிக்க இந்தக் கீரையை உணவுடன் அடிக்கடி பயன்படுத்தி பலன் பெறலாம்.
உடலில் பித்தம் அதிகரிக்கும்போது நெஞ்செரிச்சல், தலைவலி, மயக்கம் போன்றவற்றால் பலரும் கஷ்டப்படுவர். உடல் பித்தத்தை சமப்படுத்துவதில் தூதுவளை மிகப் பெரிய பங்காற்றுகிறது. இந்தக் கீரையை நன்கு அரைத்து பிழிந்து பசும்பாலில் கலந்து அருந்துவதால் பித்தம் குறைந்து, மேற்சொன்ன பிரச்னைகள் குணமாகின்றன. மேலும், ரத்த சோகை நீங்கவும், விஷப் பூச்சிக்கடி குணமாகவும்கூட தூதுவளைக் கீரை பெரிதும் பயன்படுவதாக இயற்கை மருத்துவம் கூறுகிறது.
இந்த நவீன யுகத்தில் வயது வித்தியாசமின்றி அனைவரையும் அதிகளவில் புற்று நோய் பாதிப்பதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அந்நோய்க்கு எடுத்துக்கொள்ளும் ஆங்கில மருத்துவத்துடன், இயற்கை மூலிகையான தூதுவளையையும் உணவுடன் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்வது, அதிக நோய்ப் பரவலில் இருந்து பாதுகாக்கும் வழியாகும் என்று தற்கால மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.