
இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கான ஸ்க்ரீன் டைம் என்பது அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் பல பிரச்சனைகள் நாளடைவில் வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நவீன காலத்தில் கணவன் - மனைவி என இருவரும் வேலைக்கு செல்வதாலும், ஓடி கொண்டே இருப்பதாலும், குழந்தைகளுடன் நேரம் செலவிட அவர்களுக்கு முடியவில்லை. இதனால் தான் ஸ்க்ரீன் டைம் என்பது தொடங்குகிறது. எந்த பெற்றோரும் விருப்பப்பட்டு செய்யவில்லை என்றாலும் கால சூழலால் இது உருவெடுத்து வருகிறது.
அதுவும் ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு ஸ்க்ரீன் டைம் இருப்பது ரொம்பவும் தவறானது என கூறப்படுகிறது. முந்தைய காலங்களில் டிவியே சிறியதாக இருக்கும். இந்த அளவு தெளிவாக இருந்ததில்லை. தற்போது அதிக கலர், வெளிச்சம் இருப்பதால் குழந்தைகள் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர்.
கோகோமெலன் போன்ற வீடியோக்களை குழந்தைகள் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் குழந்தைகளின் கண்பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுவும் தொலைக்காட்சியை விட அதிக நேரம் போன் கொடுப்பது அவர்களை அதற்கு அடிமையாக்கிவிடுகிறது.
எந்த பொது இடத்திலும் 1 வயது குழந்தைக்குக் கூட மொபைல் காட்டுவதைப் பார்க்கலாம். மொபைலில் யூடியூப் வீடியோக்களைப் காட்டினால்தான் உணவருந்தும் என்ற நிலையில் குழந்தைகளைப் பார்க்கிறோம்.
வீடியோக்கள் அல்லது நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கானவை எனக் குறிப்பிட்டால், அவை பொழுதுபோக்கைக் கடந்து சில அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? குழந்தைகளைத் திரையோடு கட்டிப்போடுவது மட்டுமல்லாமல், அவை கொஞ்சமேனும் பொறுப்புணர்வோடு உருவாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
நீதி போதனைகள் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது நன்னெறி சொல்லித்தரப்பட வேண்டும். குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்ப்பதாக, கற்பனையைத் தூண்டுவதாக, படைப்பாற்றலை ஊக்குவிப்பதாக, உணர்வுகளை நெறிப்படுத்துவதாக இருக்க வேண்டுமல்லவா?
இப்போது குழந்தைகளால் அதிகம் பார்க்கப்படக் கூடிய வீடியோக்கள் அவர்களை மகிழ்விப்பது கூட இல்லை. மூளையின் ரசாயனங்களைத் தூண்டி கண்கொட்டாமல் பார்க்கவைப்பதில் மட்டுமே கவனம் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
எனவே ஸ்க்ரீன் டைமை முழுவதுமாக தவிர்க்காவிட்டாலும், படிப்படியாக குறைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது நல்லதாகும். குழந்தைகள் ஸ்க்ரீனில் மூழ்கி இருப்பதால் பேசும் திறனையே இழந்துவிடுகின்றனர். இதனாலேயே பல குழந்தைகள் தாமதமாக பேசுகிறார்கள்.
குழந்தைகளிடம் அதே பாடல்களை பெற்றோர்கள் பாடுவதன் மூலம் அவர்களுக்கு உங்களோடு ஒரு இணைப்பும் ஏற்படும், எளிதில் புரிந்து கொண்டு பேச தொடங்கும் திறனும் உருவாகும். அதுவும் தற்போது பலரது வீடுகளிலும் 40 இஞ்ச் அளவிற்கு டிவி வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய அளவில் மணிக்கணக்கில் வீடியோக்களை பார்ப்பது நிச்சயம் பாதிப்பை உண்டாக்குமாம்.