கார்ப்பரேட் உலகம் கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து எட்ட வேண்டுமானால், அங்கு திறமை வாய்ந்த ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதோடு மட்டுமல்லாமல் அங்கு பணியாற்றும் உயர் அதிகாரிகளும் தனித்துவமான திறமைகளோடு இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு நிறுவனம் சிறப்பாக செயல்படுவதற்கு inter personal skills என்று சொல்லக்கூடிய நிர்வாகத்திறமை சிறப்பாக இருக்க வேண்டும்.
பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணியாட்கள் தவறு செய்கிறபோது மேலதிகாரி அவர்களிடம் இரண்டு விதமான வழிமுறைகளை பின்பற்றுவது இயல்பு.
ஒன்று நீ செய்தது தவறு! என முகத்தில் அடித்தார் போல் தவறை சுட்டிக்காட்டுவது. இரண்டாவது தவறு செய்த ஊழியருக்கு எது சரி? என்பதை புரிய வைப்பது.
இதில் முதல் வழிமுறையை பின்பற்றும்போது பெரும்பாலானவர்கள் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளாவதால் வேலையின் மீதான நாட்டத்தை இழக்கின்றனர். இரண்டாவது முறையை பின்பற்றும்போது சரியான வழிமுறையை தெரிந்துக் கொள்வதற்காக தங்களது மனதை ஒருமுகப்படுத்தி கவனத்தை அதிகரிக்கின்றனர்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கு வேலை சார்ந்த அறிவு 35 % இருந்தாலே போதும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தன்னுடைய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கிறது. அப்படியானால் இது மட்டும் போதுமா? என்று நீங்கள் கேட்கலாம். மீதமுள்ள 65% தன்னை சுற்றி இருப்பவர்களிடம் உறவுகளை வளர்த்துக் கொள்ளும் திறன் அவருக்கு இருக்க வேண்டும் என்று ஆய்வில் தெரிவித்துள்ளது. யார் ஒருவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் இணக்கமாக பழகி உறவுகளை ஏற்படுத்தி கொள்கிறாரோ அவரால் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் மிகவும் சுமூகமான முறையில் வேலைகளை வாங்கிக் கொள்ள முடியும் என்கிறது ஹார்வெர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள்.
இன்றைய சமூகத்தில் பழகும் தன்மை என்பது இயல்பாகவே குறைந்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடுகளினால் பெரும்பாலும் மனிதர்கள் தங்களுக்குள் மனம் விட்டு பேசிக் கொள்வது என்பதே குறைந்து வருகிறது.
எனவே இன்றைய காலகட்டங்களில் குழந்தைகளிடமும் பழகும் தன்மையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். மேலும் இன்று இல்லங்களிலேயே கூட பழகும் தன்மை மிகவும் குறைந்து வருகிறது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் மனிதகுலம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடலாம்.
எனவே ஒரு நிறுவனமும் சரி, ஒரு சமூகமும் சரி, சுமூகமான ஒரு வாழ்வியல் சூழலை அமைத்துக் கொள்ள வேண்டுமானால் அதற்கு inter personal skills என்று சொல்லக்கூடிய நிர்வாக இயல் திறமைகளோடு, பழகும் தன்மையையும் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே இன்றைய காலகட்டத்தில் வளரும் தலைமுறையினருக்கு இசை, ஓவியம், நடனம் என்று கற்றுக் கொடுப்பதைப் போல மற்றவர்களிடம் இணக்கமாக பழகும் திறனையும் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது! உண்மைதானே நண்பர்களே!