* வாகனங்கள் பெருகி விபத்துகளும் அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில், வாகனம் ஓட்டுவதற்கு முதற்கண் தேவை மன உறுதி. அதே நேரத்தில் மன எண்ணங்கள் சிதறாமல் ஒரு நிலைப்படுத்தி வாகனத்தை ஓட்ட வேண்டும்.
* வாகனம் ஓட்டும்போது குதிகால் செருப்புகளை அணிவது அத்தனை நல்லதல்ல. கட் ஷூ கேன்வாஸ் ஷூ போன்றவை அணிந்தால் நல்லது.
* வாகனத்தில் இருந்துகொண்டு நேராகவே பார்க்க வேண்டும். இரு பக்கத்தையும் பார்க்க ‘சைட் மீரர்’களை பயன்படுத்த வேண்டும்.
* கவலையோடு குடும்பப் பிரச்னைகளை சுமந்து கொண்டும் வாகனத்தை இயக்கக்கூடாது.
* தினமும் பெட்ரோல் அளவு மற்றும் பிரேக்கை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
* அவசர அவசரமாக எந்த இடத்துக்கும் வாகனத்தில் செல்லக்கூடாது. சற்று முன்னதாகவே கிளம்பிச் சென்று விடுங்கள். அதன் மூலம் பதற்றத்தையும் வேகத்தையும் கட்டுப்படுத்தி விபத்தைத் தவிர்க்கலாம்.
* வாகனத்தைப் போக்குவரத்து நிறைந்த இடங்களில் ஓட்டும்போது ‘பெட்ரோல் டேங்’கை நிறைத்துக் கொள்ள வேண்டும்.
* வாரத்துக்கு இரண்டு முறை ‘ஏர் செக்’ செய்ய வேண்டும்.
* நன்றாக ஓட்டப் பழகும் வரை ‘டபுள்ஸ்’ ஏற்றிக் கொள்ளக் கூடாது.
* வாகனத்தின் பின்னால் இருப்பவர்கள் வாகனம் ஓட்டுபவரிடம் பேச்சுக் கொடுக்கக் கூடாது. முக்கியமாக பின்னால் அமர்ந்துகொண்டு கையை ஆட்டிப் பேசக் கூடாது.
* அழுகிற குழந்தைகளையோ, அடம் பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளையோ முன்னால் நிறுத்தி வைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டாதீர்கள். அதனால் பலவிதமான தொல்லைகள் ஏற்பட்டுவிடும்.
இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களே!
கவர் செய்யப்பட்ட ஸ்கூட்டர் வாகனங்களே உங்களுக்கு சிறந்தது. அந்த வகை வாகனங்களை புடவைக் கட்டிக்கொண்டும் ஓட்டலாம். புடவை பறக்காத அளவுக்கு வாகனத்தை இயக்க வேண்டும். சுடிதார் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டினால் துப்பட்டாவை பறக்கவிடக் கூடாது. துப்பட்டாவை முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். துப்பட்டா பறந்து வாகனம் ஓட்டுபவரின் முகத்தை மறைத்துவிடுவது மட்டுமின்றி, அருகில் செல்பவரின் மீதும் பறந்து அவர்களையும் விபத்தில் சிக்க வைத்துவிடக்கூடும். புடவைக் கட்டிக்கொண்டால் முந்தானையை இறுக்கமாக சொருகிக் கொள்ள வேண்டும்.
- பவித்ரா