
டிஜிட்டல் யுகத்தின் அதிவேக வளர்ச்சியானது நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி, குறிப்பாக இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறையை பெரிதும் மாற்றியுள்ளது. ஸ்மார்ட் போன்கள், கணினிகள், டேப்லெட்டுகள் என திரைகள் நிறைந்த உலகில் குழந்தைகள் மூழ்கி, வெளியே சென்று விளையாடுவது, இயற்கையுடன் இணைந்த நேரத்தை செலவிடுவது போன்றவற்றை மறந்துவிட்டனர். இதனால், குழந்தைகளுக்கு கிட்டப் பார்வை பிரச்சனை ஏற்படலாம். இதை ஆங்கிலத்தில் மயோபியா (Myopia).
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஆப்தால்மாலஜியின் அதிர்ச்சியூட்டும் அறிக்கையின்படி, நாடு முழுவதும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒருவர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 2050-ஆம் ஆண்டில், இந்திய குழந்தைகளில் 40% பேர் கிட்டப்பார்வையால் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
மயோபியா (Myopia) என்றால் என்ன?
மயோபியா என்பது ஒளிவிலகல் பிழையால் ஏற்படும் ஒரு கண் பிரச்சனை. இதில், குழந்தைகளால் தொலைதூரப் பொருளைத் தெளிவாகப் பார்க்க முடியாது. அருகில் உள்ள பொருளைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்பதால் இதனை கிட்டப்பார்வை என்று அழைக்கிறோம். இந்த நோயில், குழந்தைகள் சிறு வயதிலேயே கண்ணாடி அணிவார்கள். எனவே, ஆரம்பத்திலிருந்தே அவற்றை கவனித்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், டி.வி., சாலையில் உள்ள சைன் போர்டு, பள்ளியில் உள்ள கரும் பலகைகளில் எழுத்துக்களை சரியாக பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்.
மயோபியாவின் காரணங்கள்
குடும்பத்தில் யாருக்காவது கிட்டப்பார்வை இருந்தால், குழந்தைகளுக்கும் வர வாய்ப்பு அதிகம். ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கணினிகள் போன்ற திரை சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மயோபியாவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.
வெளியில் விளையாடுவது, இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுவது போன்றவை குறைந்துவிட்டதால், குழந்தைகளின் கண்கள் போதுமான ஒளியைப் பெறுவதில்லை. வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் குறைபாடு இருப்பதும் மயோபியாவிற்கு காரணமாக இருக்கலாம். மிக நெருக்கமாக புத்தகத்தைப் படிப்பது, குறைந்த வெளிச்சத்தில் படிப்பது போன்றவை கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி மயோபியாவை தூண்டும்.
மயோபியா காரணமாக குழந்தைகள் படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் சிரமப்படுவார்கள். மேலும், இது தலைவலி, கண் சோர்வு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். காலப்போக, மயோபியா அதிகரித்து, கண் பார்வை முற்றிலும் இழக்க நேரிடலாம். எனவே, உங்கள் குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.