
நவராத்திரி என்றாலே பெரியவர்கள் முதல் அனைவருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குழந்தைகளுக்கு சற்று கூடுதல் உற்சாகம்
வரக் காரணம் விழாவின் மையமாக இருக்கும் வண்ண மயமான பொம்மைகளே. நவராத்திரி விழாவை கொண்டாடுபவர்களும் சரி, அந்த விழாவில் கலந்துகொள்பவர்களும் சரி, அதற்கான ஆயத்தங்களை சில நாட்கள் முன்பிருந்தே மேற்கொள்கிறார்கள்.
இந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகளும் உண்டு என்பதால் குழந்தைகளுக்கு மேலும் கொண்டாட்டம்தான். பொம்மைகளை சுத்தம் செய்வது மற்றும் பொம்மை களுடன் விளையாடுவது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல் ஆகிறது.
தங்கள் வீட்டில் வைக்கப்படும் கொலுவுக்கு தங்கள் நட்புகளுடன் சேர்ந்து வீட்டில் உள்ளவர்களுடன் இணைந்து செயல்படும்போது அந்த குழந்தைகளின் செயல்திறன் வெளிப்படுகிறது. ஜாதி, மதம். இன பேதம் இன்றி பழகுவதால் குழந்தைகளிடம் உள்ள ஒற்றுமை மேலும் அதிகரிக்க வைக்கிறது.
பத்து நாட்கள் தொடரும் நவராத்திரி விழா இந்தக் காலத்து குழந்தைகளுக்கு குதூகலம் மட்டுமல்ல, சத்துள்ள பலகாரங்கள் உண்பதற்கும் வழி வகுக்கிறது. இந்த நவராத்திரி 10 நாட்களும் குழந்தைகளின் உடலுக்கு தேவையான சத்துக்கள் கொண்ட சுண்டல்கள், முளைகட்டிய பயிர் வகைகள், வெல்லப் பொங்கல், எலுமிச்சை போன்ற கலவை சாதங்கள், பானகங்கள் அனைத்தும் குழந்தைகளின் உடல் நலனை காக்கும். மற்றும் இந்த ருசிகளை அவர்களுக்கு பழக்கப்படுத்தும் நிகழ்வாகவும் நவராத்திரி அமைகிறது.
பொம்மைகளை கண்டு ஆராய்ச்சி செய்து அந்த பொம்மைகள் எங்கே எவ்வாறு எதற்காக உருவாக்கப்பட்டன? அவற்றின் பெயர்கள், கதைகள் என்ன? எதற்காக இந்தப் பண்டிகை? என்று குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை தர வேண்டியது பெரியவர்களின் பொறுப்பு. அவர்களின் உற்சாகத்தை பார்க்கும்போது பெரியவர்களுக்கும் எனர்ஜி வருவது என்னவோ உண்மை!
மாடர்ன் டிரஸ்களில் உலா வரும் குழந்தைகளுக்கு பட்டு பாவாடை அணிவித்து நெற்றிச்சுட்டியுடன் ஒட்டியாணம் போன்ற நகைகள் அணிவித்து பார்க்கும்போது, உண்மையில் நம் வீட்டு தேவதைகளும் சக்திகளே என்பதை உணர்கிறோம்.
ஆண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெட்டியில் இருக்கும் பொம்மைகளை ஏறி எடுப்பது, அவற்றுக்கு மின்சார சாதனங்கள் மூலம் ஒளி கொடுப்பது . சமூக ப்ராஜக்ட்டுகளை அவர்கள் கையில் தருவது என ஆண், பெண் இருவரும் சமம் என்பதை இந்த பண்டிகை நிரூபிக்கிறது.
வந்தவர்களை உபசரித்து அவர்கள் கைகளில் பிரசாதங்களை தருவது முதல் அவர்களுக்கு தாம்பூலம் மற்றும் அன்பளிப்பு பொருட்களை தருவதுவரை நவராத்திரி முழுக்கவே குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவே உள்ளது . சுண்டலுக்காக காத்திருந்து குதூகலிக்கும் குழந்தைகள் மட்டுமல்ல அலைபேசியை சற்று நேரம் மறந்து தெய்வங்களுக்கு முன் அமர்ந்து பாடல் ஆடல் எனத் தங்கள் திறமைகளை காட்டும் குழந்தைகளும் நவராத்திரி பண்டிகை சமயம் ஆனந்தம் அடைவது என்னவோ உண்மை!
அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப பொம்மை கொலுகளும் மாறி வருகிறது. தற்போது லேசர் ஒளிக்கற்றைகள் மின்ன தெய்வங்கள் ஜொலிப்பதைக் காண முடிகிறது. இந்த நவராத்திரிக்கு நிலாவில் கால் பதித்த நமது சந்திராயன் விண்கலம் நிச்சயம் இடம்பெறும். இது போன்ற நிகழ்வுகளை கொலுவில் வைப்பதன் மூலம் நமது குழந்தைகள் எளிதாக சமூக நிகழ்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது.
சத்தான உணவு, ஆராயும் அறிவுக்கு தகுந்த கொலு அமைப்புகள், அலையும் மனதுக்கு எனர்ஜி தரும் ஆன்மீக நம்பிக்கைகள் என குழந்தைகளுக்கு நவராத்திரி குதூகலத்தை தந்து நமது பாரம்பரியத்தை உணர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.