நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் எல்லா உணவுகளும் நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு ஒத்துக் கொள்ளும் என சொல்ல முடியாது. அதில் சில உணவுகள் விலங்குகளுக்கு ஒவமையை ஏற்படுத்தி பல பாதிப்புகளை உண்டாக்கலாம். உணவு ஒவ்வாமை காரணங்களால் செல்லப்பிராணிகளுக்கு குடல் பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, வீக்கம் ஏற்படலாம். குறிப்பாக பெரும்பாலானவர்களின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கப்படுவதால், அவற்றிற்கு எது போன்ற உணவுகள் ஒத்துக் கொள்ளாது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வெங்காயம் மற்றும் பூண்டு: பொதுவாக இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் வெங்காய மற்றும் பூண்டு, உங்கள் நாயின் ரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்தி ரத்த சோகைக்கு வழிவகுக்கும். இவை பல வடிவங்களில் நமது உணவுகளில் காணப்படுகின்றன. எனவே வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் உள்ள உணவுகளை ஒருபோதும் உங்கள் நாய்க்குக் கொடுத்துவிடாதீர்கள்.
திராட்சை: திராட்சை பழம் மனிதர்களுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், நாய்களுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடையவை. அவை சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற கடுமையான உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒரு சிறிய அளவு திராட்சை கூட உங்கள் நாய்க்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே திராட்சைப் பழங்களை உங்கள் நாய் ஒருபோதும் சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாக்லேட்: சாக்லேட்டில் தியோப்ரோமைன் மற்றும் காபின் உள்ளது. இவை இரண்டுமே நாய்களுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக நாய்களின் நரம்பு மண்டலம் மற்றும் இதய அமைப்பை இவை பாதிப்பதால், இதயத்துடிப்பு அதிகரிப்பு, நடுக்கம், வாந்தி, வலிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழி வகுக்கின்றன. எனவே காஃபின் அதிகம் நிறைந்த பொருட்களை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்.
காரமான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்: இந்திய உணவுகள், அதிக காரம் நிறைந்த சுவையான மசாலா பொருட்களுக்கு பெயர் பெற்றவை. இவை மனிதர்கள் சாப்பிட ருசியாக இருந்தாலும், அதிக காரம் மற்றும் அதிக சுவையூட்டப்பட்ட உணவுகள் நாய்களுக்கு பிரச்சனைகளைக் கொடுக்கலாம். இவை செரிமான அமைப்பை பாதிக்கும் என்பதால், மிளகாய், மிளகு, அதிகப்படியான உப்பு போன்றவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்.
எலும்புகள் மற்றும் மீன் முள்: நாய்கள் எலும்புகளை கடிக்க விரும்பினாலும், சில வகை எலும்புகள் அவற்றிற்கு ஆபத்தானவை. குறிப்பாக கோழி எலும்புகள் கூர்மையாக இருப்பதால் அவற்றின் செரிமானப் பாதையில் சிக்கி, அடைப்பு, மூச்சுத் திணறல் மற்றும் காயங்களை ஏற்படுத்தலாம். அதேபோல முள் அதிகம் உள்ள மீன்களை நாய்க்கு போடும்போது அதன் முட்கள் தொண்டையில் சிக்கிக்கொண்டு உறுப்புகளை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது.