தற்போது ஸ்மார்ட் போன் இல்லாத மனிதர்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட செல்போனை 24 மணி நேரமும் நம்முடனே வைத்திருப்பதால் போனுக்கு பின்னால் அதிகம் பேர் பணம் வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
தற்போது, செய்தித்தாள்களில் தினசரி செய்தியாக பல மொபைல் போன்கள் வெடித்தது அல்லது தீப்பிடித்த சம்பவங்கள் குறித்து அதிகம் படிக்கிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் மொபைல் போன் சூடாவது தான். அதிக நேரம் மொபைலை பயன்படுத்துவது மற்றும் நீண்ட நேரம் மொபைலுக்கு சார்ஜ் போடுவது போன்ற காரணங்களால் மொபைல் போன் சூடாகிறது.
இவ்வாறு இருக்க அதிகம் பேர் மொபைல் போனின் பின்புற அட்டையில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை வைத்திருப்பது ஆபத்தை விளைவிக்கும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் உள்ள காந்த பட்டை தரவுகளை மொபைலால் உருவாக்கப்பட்ட காந்தப்புலம் சேதப்படுத்தும். தொலைபேசியின் பேட்டரி அல்லது செயலியில் அதிகப்படியான அழுத்தம் தீயை ஏற்படுத்துகிறது. இதனால் மொபைல் போன் வெடித்து சிதறுகிறது. இது தவிர தவறான சார்ஜரை பயன்படுத்துவதும் பேட்டரி வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
மொபைல் போனுக்கு பின்னால் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மட்டுமல்ல ரூபாய் நோட்டுகளை வைப்பதும் பாதுகாப்பான செயலாக கருத முடியாது. ஏனெனில் ரூபாய் நோட்டுகளில் பலவகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், அவை தொலைபேசியில் உருவாகும் வெப்பத்தை வெளியேற அனுமதிக்காது.
அந்த சூழ்நிலையில் தொலைபேசியின் வெப்பம் உள்ளே சிக்கி வெடிப்பை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் இது போன்ற அட்டைகள் தொலைபேசியில் உருவாக்கும் வெப்பம் வெளியேறுவதை தடுக்கின்றன.
ஒவ்வொரு பொருளுக்கும் அதை வைப்பதற்கு என்று தனி பாதுகாப்பான இடம் இருக்கும்போது, நம் வாழ்வின் அங்கமாகிவிட்ட மொபைலுக்கு பின்னால் கிரெடிட் கார்டுகள் டெபிட் கார்டுகள் மற்றும் பணத்தை வைப்பதை தவிர்த்து, அதற்கு என தனி கார்டு போல்டர்கள் மற்றும் பணப் பையை பயன்படுத்தி பாதுகாப்பாக இருப்போம்.