புதிய கோணம் புதிய வானம்!

புதிய கோணம் புதிய வானம்!

“படத்தை தலைகீழாக மாட்டிவிட்டு, புரியவில்லை யென்றால் எப்படி? உலகம் நமக்காக என்ற பார்வையை மாற்றி, நாம் உலகிற்காக என்று வாழுங்கள். துன்பமெல்லாம் நீங்கும்” – என்கின்றார் ஆன்மிகச் சொற்பொழிவாளர்.

நம் மீது மனவருத்தப்படுபவர்களை நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டு, நம்மைத் தாழ்த்திக் கொள்வானேன்? மனவருத்தம் உள்ளவர்கள் தமது உணர்ச்சிகளின் கைதிகள் என உணர்ந்துகொண்டு, நாம் மனஅமைதியோடு இருக்கலாம் அல்லவா!

புதிய கோணத்தில் பார்த்தால் பிரச்னைகளுக்குப் புதிய தீர்வு கிடைக்கலாம். சிந்தனைக்கு வேலை கொடுத்தால் சிறப்பாக வாழலாம்.

நமது சொல்படி நடக்க வேண்டும் குழந்தைகள் என்பது வழக்கமான கோணம். குழந்தைகளின் சொல்படி நாமும் சில சில சமயம் நடக்க வேண்டும் என்று மாற்றிக் கொள்வது, குழந்தைகளின் மனநிலையையும், ஆர்வங்களையும் புரிந்துகொள்ள துணை செய்யும்.

கல்லூரிப் பேராசிரியையின் சொற்பொழிவின் போது ‘நோட்ஸ்’ எடுப்பது கஷ்டமாகப்பட்டது கவிதாவிற்கு. பேராசிரியையின் அனுமதியுடன் முக்கியமான பாடங்களின் சொற்பொழிவை ‘டேப்’பில் பதிவு செய்தாள். இரவு தூங்கப் போகும் முன் போட்டுக் கேட்கத் தொடங்கினாள். படிப்பது எளிதாகிவிட்டது.

ஒரு பாடத்தைப் படித்துவிட்டு கேள்விகளுக்குப் பதில் சொல்வது வழக்கமானது. ஆசிரியை அகிலா ஒரு புதுமை செய்தாள். “பிள்ளைகளே, பாடத்தைப் படியுங்கள். அதன்பின் நீங்களாக பதினைந்து கேள்விகளை எழுதுங்கள்” என்றாள். கேள்வி கேட்க வேண்டுமானாலும், பாடத்தைப் புரிந்திருக்க வேண்டுமல்லவா! அதுவே பிள்ளைகளுக்கு ஒரு படிப்பு ஆகிவிட்டது.

கணவன் சத்தம் போடும்போதெல்லாம் காரண காரியங்களைச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்தி வந்தாள் நிர்மலா. அவளுக்கு அது சலித்துப் போய்விட்டது. பதிலேதும் சொல்ல வேண்டாம் என்றோர் புதிய கோணத்தைச் தேர்ந்தெடுத்தாள். ஒரு வாரத்தில் கணவன் கோபப்படுவது கணிசமாகக் குறைந்துவிட்டது.

மத்தியானம் ஒரு மணி நேரம் தூங்கினால்தான் உடம்பு ஒத்துழைத்தது சரளாவிற்கு. ஆனால் வேலைகள் முடியாமல் போனது. ஒவ்வொரு மணி நேரத்திற்குப் பிறகு பத்து நிமிடம் ஓய்வு எடுத்தால் என்ன என்று சிந்தித்தாள். அதன்படி நடந்ததும் வேலைகளும் முடிந்தன. மனத்திலும் புத்துணர்ச்சி ஏற்பட்டது.

மாதக் கடைசியில் பணம் கேட்கும் வேலைக்காரிக்கு மாதச் சம்பளத்தை நிறுத்தினாள் சுமதி. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சம்பளம் என்று பழக்கினாள். வேலைக்காரி திட்டமிட்டுச் செலவிட அது தூண்டியது.

நமது அணுகுமுறை ஒரே திசையில் பார்த்துப் பழகிவிட்டது. அதனால்தான் சூழ்நிலைகள் மாறினாலும், நாம் மாறாத பார்வையோடு விஷயங்களை நோக்குகின்றோம்.

பிள்ளை பெரியவளாக வளர்ந்த பின்னும் குழந்தையை நடத்துவது போல் நடத்துகிறோம். வேதனைப் படுகின்றோம். அதனால் கணவன் மனம் மாறிய பின்னும், முன்பு போலவே நடந்து கொள்கின்றோம்; துன்பத்திலே அடைந்து கிடக்கின்றோம்.

புதிய கோணத்தில் பார்ப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் புது நாளே. புது சூழ்நிலைகளே. பார்வையில் புதுமை இருந்தால், வாழ்வில் சுவையிருக்கும் என்பது உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com