பிறந்த குழந்தையை பார்க்கச் செல்லும் முன் கடைபிடிக்க வேண்டிய மரியாதை விதிகள்!

பிறந்த பிஞ்சைச் சந்திக்கும்போது எப்போது செல்லலாம், என்ன செய்யக்கூடாது, எதைப் பேசக்கூடாது, எவ்வளவு நேரம் தங்க வேண்டும் என்பதைக் கூறி, தாயின் ஓய்வும் குழந்தையின் பாதுகாப்பும் பாதிக்கப்படாத வகையில் நடந்து கொள்வதற்கான வழிகாட்டி.
newborn-baby
newborn-baby
Updated on

புதிதாக பிறந்த குழந்தையை பார்க்க செல்லும்போது சில விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நமது வருகை அந்த குழந்தையையும் தாயையும் சங்கடத்திலோ, உடல் நலம் பாதிப்பையோ தந்துவிடக் கூடாது என்பதில் கவனம் வேண்டும். புதிதாய்ப் பிறந்த குழந்தையை பார்க்க செல்லும்போது எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

அவசரம் வேண்டாம்:

குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் உடனே போய்ப் பார்க்க முற்படாதீர்கள். குழந்தையின் மிக நெருங்கிய சொந்தக்காரர்களும், ரத்த உறவுகளும் மட்டும் முதலில் சென்று பார்த்தால் போதும். தூரத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வெளியூர்க்காரர்கள் சில நாட்கள் கழித்துப் போய்ப் பார்க்கலாம். ஏனென்றால், குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் அவளுடைய குடும்பத்தாருக்கும் ஆரம்ப நாட்களிலேயே கூட்டம் சேர்வது பெரிய தொந்தரவாக அமைந்துவிடும்.  தாய் நன்றாக ஓய்வெடுத்து, உடல் நலமும் தேறிய பின்பு நண்பர்களும் தூரத்து உறவினர்களும் போய்ப் பார்ப்பதே நல்லது.

உடல்நலக் குறைவிருந்தா போகாதீங்க:

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நோய்களை எதிர்க்கும் உடலமைப்பு முழுமையாக வளர்ந்திருக்காது. தாயின் கருப்பையில் இருந்த பாதுகாப்பான சூழலில் இருந்து வெளிவந்திருக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு,  கிருமிகளைத் தாங்கும் சக்தி இருக்காது. லேசான தலைவலி, தும்மல், இருமல், தொண்டை கரகரப்பு அல்லது ஏதேனும் அலர்ஜி போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், குழந்தையைப் பார்க்கப் போக வேண்டாம். ’லேசான சளிதான்’ என்ற அலட்சியம், குழந்தைக்குக் கடுமையான காய்ச்சலையோ அல்லது மூச்சுக்குழாய் அழற்சியையோ ஏற்படுத்திவிடும்.

கொஞ்சி முத்தமிடாதீங்க:

குழந்தையின் மென்மையான கன்னங்கள், பஞ்சு போன்ற கைகள், பிஞ்சுப் பாதங்களைப் பார்த்ததும் கொஞ்சத் தோன்றும். ஆனால், குழந்தையின் முகத்திலோ அல்லது கைகளிலோ முத்தமிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நம் வாயில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள், குழந்தையின் மெல்லிய தோலில் படும்போது கடுமையான அலர்ஜியை உண்டாக்கிவிடும். அதேபோல், பெற்றோர் அனுமதிக்கும் வரை குழந்தையைத் தூக்குவதைத் தவிர்க்கவும். தூக்க நேர்ந்தால், கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு நன்றாகச் சுத்தம் செய்த பிறகே தூக்கவேண்டும்.

ஸ்ட்ராங்கான வாசனைத் திரவியங்கள் வேண்டாம்;

குழந்தையைப் பார்க்கச் செல்லும்போது அதிக வாசனையுள்ள சென்ட், பெர்ஃப்யூம், பாடி ஸ்ப்ரே அல்லது தலைமுடிக்கு வைக்கும் அடர்ந்த மல்லிகைப்பூ போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. முதியவர்களுக்கே சில நேரங்களில் தலைவலியைத்தரும் இந்த அடர்ந்த வாசனைகள், பிறந்த குழந்தையின் மூச்சுக்குழாயைச் சட்டென்று பாதித்து, தொடர் தும்மல் அல்லது மூச்சுத் திணறலை ஏற்படுத்திவிடும்.

இதையும் படியுங்கள்:
மார்க் குறைய இதுதான் காரணம்! உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கும் எளிய வழிகள்!
newborn-baby

மொபைலில் போட்டோ எடுக்காதீங்க:

குழந்தையை போட்டோ எடுக்காதீங்க. கண்களையே கூசச் செய்யும் மொபைல் போனின் ‘ஃபிளாஷ் லைட்’களை, பிறந்த குழந்தையின் முகத்திற்கு நேரே அடித்துப் படம் பிடிப்பது மிகப்பெரிய தவறு. இது அவர்களின் மென்மையான கண் திரையை  பாதிக்கும். மேலும், பெற்றோரின் அனுமதியின்றி குழந்தையின் புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அல்லது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்கவும்.

தேவையில்லாத அறிவுரைகளும் ஒப்பீடுகளும்:

“குழந்தை ஏன் இவ்வளவு கருப்பா இருக்கு? ‘ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கு?’ ‘அப்பா ஜாடையா, அம்மா ஜாடையா?", போன்ற தேவையற்ற கேள்விகளைத் தயவுசெய்து கேட்காதீர்கள். அதேபோல, தாய்க்குப் பால் சுரப்பது பற்றியோ, பிரசவ முறையைப் பற்றியோ (சுகப்பிரசவமா, சிசேரியனா?) தேவையில்லாமல் விமர்சிப்பதோ, பயமுறுத்தும் ஆலோசனைகளை வழங்குவதோ கூடாது. இது பிரசவித்த தாய்க்கு கடுமையான மன அழுத்தத்தை உண்டாக்கும்.

பிரைவசியும் நேர மேலாண்மையும்;

குழந்தை தூங்கும் அறையில் சத்தமாகப் பேசுவது, சிரிப்பது, மொபைல் போனை அலறவிடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, உங்கள் சந்திப்பு 15 முதல் 20 நிமிடங்களுக்குள் முடிவடைய வேண்டும். தாய்க்கும் குழந்தைக்கும் அதிக ஓய்வு தேவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக, குழந்தைக்கான தாய்ப்பால் கொடுக்கும் நேரங்களில், நாமாகவே புரிந்து கொண்டு அந்த அறையிலிருந்து சற்று வெளியே வந்து அவர்களுக்குரிய பிரைவசியைக்  கொடுப்பது மிகச்சிறந்த நற்பண்பாகும்.

logo
Kalki Online
kalkionline.com