புனிதமாகக் கருதப்படும் தர்ப்பை புல் சுத்தமான இடங்களில் மட்டுமே வளர்கிறது. பூஜை, புனஸ்காரங்கள் செய்வதற்கும், பித்ரு பரிகாரங்கள் செய்வதற்கும் தர்பைப் புல் பயன்படுத்தப்படுகிறது. தர்ப்பை பூஜைக்கு மட்டுமல்ல, அதில் நிறைய மருத்துவக் குணங்களும் அடங்கியுள்ளன.
தர்ப்பைப் புல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகக் கருதப்படுகின்றது. சுப காரியங்களில் மோதிர விரலில் தர்ப்பைப் புல் அணிந்து கொள்ளும்போது இறை ஆற்றல் கிடைக்கிறது. மோதிர விரல் வழியாக சக்திகள் ஊடுருவி வலது மூளைக்கு சென்று தூண்டிவிடப்பட்டு எண்ண ஓட்டத்தை தெளிவடையச் செய்கிறது. பித்ரு பரிகாரங்கள் செய்வதற்கும் மோதிர விரலில் தர்ப்பைப் புல்லை அணிவது வழக்கம்.
பொதுவாக, நிறைய வீடுகளில் தர்ப்பைப் புல்லால் செய்யப்பட்ட சிறிய பாய்களை வைத்திருப்பர். வீட்டில் பூஜை செய்யும்போதும், மந்திரங்கள் சொல்லும்போதும் தர்ப்பைப் புல் விரிப்புகளில் அமர்ந்து சொல்வது மிகவும் நல்லது. இதில் உட்கார்ந்து தியானம் செய்யும் பொழுது விரைவாகவே தியான நிலைக்கு செல்ல முடியும். தர்ப்பைப் புல் பாயில் தினமும் இரவு தூங்கினால் உடலில் இருக்கும் பல்வேறு நோய்கள் தீரும்.
கிரகண காலங்களில் பயன்பாடு: சந்திர, சூரிய கிரகண காலங்களின்போது நம் வீட்டில், உப்பு, புளி, அரிசி பாத்திரங்கள், பிரிட்ஜில் வைத்திருக்கும் உணவு பொருட்கள், சமைத்த உணவுகள், தண்ணீர் குடம் முதலியவற்றில் பெரியவர்கள் தர்ப்பையை சிறு துண்டுகளாகக் கிள்ளிப் போடுவது வழக்கம். எதற்காக இப்படி செய்கிறோம் என்றால் உணவு பொருட்களை கிரகணத்தின் கதிர்வீச்சில் இருந்து தர்ப்பை காக்கும் என்பதால்தான்.
மருத்துவப் பயன்கள்: தர்ப்பை ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, நம் உடலில் தோன்றும் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. கொதிக்கும் நீரில் தர்ப்பைப் புல்லைப் போட்டு காய்ச்சி வடிகட்டிப் பருகினால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும் என்கிறது ஆயுர்வேதம்.
இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட தர்பைப் புல் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது. கல்லீரல் பிரச்னை, உடல் உஷ்ணம் ஆகியவற்றை தவிர்ப்பதற்கும் இது பயன்படுகிறது. குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்ப்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். தர்ப்பைப் புல் தண்ணீர் சிறுநீரகப் பிரச்னையைப் போக்குகிறது. அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் தன்மை கொண்டது. தர்ப்பையை குடிநீரில் போட்டு வைத்து, தினமும் அந்த நீரைக் குடித்தால் உடல் வலிமையும் புத்திகூர்மையும் ஏற்படும். தர்ப்பைப் புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.
அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் இத்தனை மகத்துவம் வாய்ந்த தர்ப்பைப் புல்லை நம் வீட்டு சமையல் அறையிலும் பூஜை அறையில் வைத்து பயன்படுத்தி பலன் பெறலாமே.