

முதுமை என்பது ஒரு வரம். நம் அமைதிக்கான காலம். அந்த காலத்தில் நம்மை அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் வைத்துக்கொள்ள நடுத்தர வயதில் இருந்தே திட்டமிட வேண்டும். இல்லையெனில் நாம் அடுத்தவருக்கு பாரமாகி நம்முடைய நிம்மதியையும் தொலைத்து அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். அந்த வகையில் முதுமையில் தனித்துவிடப்படாமலும் எவருக்கும் பாரமாகவும் இல்லாமல் இருக்க செய்ய வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. நிலத்தகராறில் ஈடுபட்டு பக்கத்து வீட்டுக் காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்ற வாயிலில் நம்முடைய காலம் வீணாவதோடு நிம்மதி இழந்து முடிவு கிடைக்காமல் கடைசியில் வழக்கறிஞர்களுக்கே இது சாதகமாக முடியும் என்பதால் பேசியே நிலப்பிரச்னையை தீர்க்க முற்படுங்கள்.
2. குறைவான விலை என நினைத்து பழைய வாகனங்களை வாங்கினால் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட கேரேஜில் இருக்கும் நேரமே அதிகமாக இருக்கும் என்பதால் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்க புதியனவற்றையே வாங்குவது சிறந்தது.
3. பிள்ளைகள் நமக்கு தெய்வங்களாக தெரிந்தாலும், சொத்துக்களை அவர்கள் பெயரில் எழுதிவைத்தால் நாம் தேவையற்ற பொருளாக மாறக்கூடும் என்பதால் எதையும் கையில் வைத்துக்கொண்டே உயிர் விடுவது உத்தமமானது. ஏனெனில் பிள்ளைகள் கெட்டவர்கள் இல்லை என்றாலும் உலகம் கொடூரமானது.
4. நம் வாழ்நாளில் 30 வருடங்கள் உழைத்து சேர்த்த ஓய்வூதிய தொகை (pension) முழுவதையும் பிள்ளைகளின் தொழிலுக்கு கொடுத்து விட்டால், இறுதியில் மருந்து வாங்குவதற்கு கூட அவர்களிடம் கையேந்தி வேண்டிய நிலை வரும் என்பதால் கடைசி சேமிப்பை பத்திரமாக உங்களிடமே வைத்து பார்த்துக் கொள்வதே சிறந்தது.
5. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல, தங்களுடைய பிள்ளைகள்தானே என அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டால், அது அவர்களுக்கு தொல்லையாக மாறக்கூடும் என்பதால் பிள்ளைகளின் வீடுகளில் ஒட்டிக் கொண்டிருக்காமல் உங்களுக்கென ஒரு சிறு இடத்தை தேடிக்கொண்டு சுதந்திரமாக இருங்கள்.
6. பிள்ளைகளுக்கு விடுமுறை கிடைக்கும்போது அவர்களுடன் யாத்திரை செல்லலாம் என நினைக்காமல் உங்களுக்கு தெம்பு இருக்கும் காலத்திலேயே தனியாக உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று வருவதே சிறந்தது. ஏனெனில் பிள்ளைகளுக்கு ஓய்வு கிடைக்கும்போது உங்களது உடல்நலம் சரியில்லாமல் போகலாம்.
7. நிகழ்காலம் என்பதே நிஜமானது என்பதால் நீங்கள் சாப்பிட நினைப்பதையோ அல்லது உங்கள் மனைவி அல்லது கணவனுக்கு பிடித்ததை இன்றே வாங்கிக் கொடுத்து சாப்பிடுங்கள்.
8. உடலுக்கு தேவையான ஓய்வை கொடுப்பது மனதுக்கும் நல்லது. காலை முதல் இரவு வரை ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் எதுவுமே இருக்காது என்பதால் இறக்கும்வரை வேலைகளை குவித்து வைக்காமல் ஓய்வை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
9. தேவையில்லாமல் தூங்குவதை விட நிம்மதியாக தூங்க வேண்டும். ஏனெனில் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது உங்களுடைய வலியை யாரும் பகிர்ந்துகொள்ள முடியாது என்பதால் அதனை தனியாகவே அனுபவிக்க தூக்கத்தை விட சிறந்த மருந்து இல்லை.
10. மகிழ்ச்சி என்பது யாரோ உருவாக்கிக் கொடுப்பதல்ல: உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்வது என்பதால் எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் தனியாக மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்வது வாழும் காலத்திலும் சரி முதுமையிலும் சரி சிறந்த மருந்து.
மேற்கூறிய செயல்களை பின்பற்ற தொடங்கினால் முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்வை கழிக்கலாம்.