பார்த்தவுடன் வருவதும்... புரிதலில் வருவதும்...

Friendship...
Friendship...Image credit - pixabay.com

-மரிய சாரா

லகில் உன்னதமான உறவுகளின் பட்டியலில் பலரின் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடிப்பது நட்புதான். அதிலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அந்தத் தூய நட்பு மலர்ந்துவிட்டால்? அந்த வாழ்வை வாழ்வதே அலாதிதான். இப்போதெல்லாம் சொல்வதைப்போல bestie கலாச்சாரத்தைப் பற்றி நான் இங்கு பேசவில்லை. ‘பிரியமான தோழி’ திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கும் மாதவனுக்கும் இடையில் இருக்குமே அந்த நட்பைப் பற்றி பேசுகிறேன். 

அப்படியான நட்பு நிச்சயம் எல்லோருக்கும் இருக்கவேண்டும். இருந்தால் எந்த இன்னலையும் துச்சமெனக் கடந்திடலாம். அதிலும் இன்றையக் காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு தூய நட்பு வேண்டும். ஆனால், அமைகிறதா என்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்துபோலும். இப்போது இருக்கும் வாழ்க்கைச் சூழலின் அனைத்திலும் அவசரம், இந்த அவசரத்தில் யாருடைய தூய்மையான நட்பு நம்மீது வரும் என்பதை நிதானித்து தெளிய நேரம் எது?

இப்போதைய காலகட்டத்தில் நாம் தினமும் அதிகமாகக் கேட்கும் அல்லது அனுபவிக்கும் வார்த்தைகள் stress, depression, suicide – சர்வசாதாரணமாக. அதுவும் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களுக்குக்கூடக் கேட்க முடிகிறது. அந்த அளவிற்கு இன்றைய தலைமுறைக்கு வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும் குறைந்துள்ளது.

20 வருடங்களுக்கு முன்பு வரை வளர்ந்த பிள்ளைகள் இன்றைய நிதர்சன வாழ்க்கையில் தங்களை பொருத்திக்கொண்டு அனைத்தையும் மிக வலிமையுடன் எதிர்கொள்கின்றனர். காரணம் அன்று அவர்களுக்கு மற்றவர்களோடு பேச, பழக நேரம் இருந்தது, நன்மை, தீமை சொல்லித்தர உறவுகள் உடன் இருந்தனர், தூய்மையான நட்பு இருந்தது. தன்னலமற்ற நண்பர்களுடன் விளையாடி, சண்டை போட்டு, மீண்டும் ஒன்றுசேர்ந்து விளையாடிய அந்த அனுபவம்தான் இன்றும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.

Friendship...
Friendship...Image credit - pixabay.com

அப்படிக் கிடைத்த நட்பு எனும் பூக்கள் இன்றும் நம்மோடு, நம்மை மகிழ்ச்சியாய் வாழவும், துணிவுடன் வாழ்வை எதிர்கொள்ளவும் துணையாய் நிற்கின்றன என்பதுதான் உண்மை. மானசீகமாக காதல் மட்டுமல்ல நட்பும் சாத்தியமே. காதலில்கூட சண்டையால் பிரிவுகள் நேரலாம். ஆனால், உண்மையான நட்பில் பிரிவு என்பது சாத்தியமே இல்லை எந்த நிலையிலும்.

கைப்பேசிகள் இல்லாத அந்த உலகம்தான் வாழ்க்கையின் பாடத்தை எளிதாய் படிக்க உதவியது. ஆனால் இன்று? பிள்ளைகள் இளைஞர்கள் என அனைவருக்கே கைப்பேசிக்குள் அடக்கம். உறவுகளையும் கைப் பேசிக்குள்தானே அடக்கிவைத்துள்ளனர்? இந்த நிலையில், நட்பையும் கைப்பேசிக்குள்தானே வைக்க முடியும்? இன்றையக் காலகட்டத்தில் நட்பிற்குள்ளும் சுயநலம்தானே அதிகமாய் இருப்பதைப் பார்க்கிறோம்?.

இதையும் படியுங்கள்:
விடா முயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும்!
Friendship...

இந்தத் தலைமுறையினரைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. நமக்கு கிடைத்தே அறிய பொக்கிஷங்கள் இவர்களுக்கு கிடைப்பதில்லையே என்று. அப்படியான பொக்கிஷங்கள் வரிசையில் முழுமுதலாய் நிற்பது தூய நட்புதான். மனம் விட்டுப் பேச, நாம் பேசியதை அலிபாபா குகை போல ரகசியமாய் பாதுகாக்கும் அந்தத் தூய தோழமையெல்லாம் உண்மையில் வரமாய் அமைந்திடல் வேண்டும்.

பார்த்தவுடன் காதல் வரலாம். ஆனால், பார்த்தவுடன் உண்மையான நட்பு வருவதில்லை. அது சரியான புரிதலில்தான் உதயமாகிறது. ஒரு நல்ல நட்பின் உன்னதத்தை உணர்ந்ததால், அந்த மாண்பு பொருந்திய மகத்தான தோழமை நிச்சயம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

எனவேதான் இப்பதிவு நண்பர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com