‘பன்னாடை’ என்பது நல்ல தமிழ்ச் சொல்லாகும். பனை மரத்திலும், தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதியே பன்னாடை எனப்படும். தென்னை மரத்தில் குலையுடன் ஒட்டி இருக்கும் இந்த வலை போன்ற அமைப்பு கொண்ட சல்லடையே பன்னாடை எனப்படுகிறது.
கள் இறக்குபவர்கள் கள்ளை வடிகட்டுவதற்கு இந்தப் பன்னாடையைத்தான் அதிகம் உபயோகிப்பார்கள். அதோடு, கள் பானையை இந்த சல்லடையின் கீழ்தான் பனை மரத்திலும், தென்னை மரத்திலும் கட்டி வைப்பார்கள். மரத்தில் இருக்கும் பூச்சி, வண்டுகள் பானையின் உள்ளே விழாமல் இருக்கவும், தூசிகள் படியாமல் இருக்கவும் ஒரு தடுப்பாக இந்தப் பன்னாடை பயன்படுகிறது.
அழுக்குகளை தன்னிடம் தக்க வைத்துக் கொண்டு நல்லனவற்றை விட்டுவிடும் தன்மை கொண்டது பன்னாடைகள். எதற்கும் உபயோகப்படாதவர்களை, உதவாக்கரை ஆசாமிகளை திட்டுவதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. நன்னூல் என்பது 13ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட ஒரு இலக்கண நூலாகும். இதில் இந்தப் பன்னாடையைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது.
அன்னம் நீரிலிருந்து பாலை பிரித்து உண்பது போல், முதல் மாணாக்கர்கள் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லவனவற்றை எடுத்துக் கொள்வார்கள். பசுவானது கிடைக்கும்போது புல்லைத் தின்று பின்பு அதை நிதானமாக அசைபோடும். அதைப்போல் ஆசிரியரிடம் கலைகளைக் கற்றுக் கொண்டு பின்பு அதனை பயிற்சி செய்வார்கள். அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர்.
ஆனால், சில மாணவர்கள் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கிளியை போன்று சொல்லிக் கொடுத்ததை சொல்வார்கள். இவர்கள் இடை மாணாக்கர் வகையைச் சார்ந்தவர்கள். ஓட்டைக் குடம் எதையும் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளாது. ஆடு அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ட இலைகளை எல்லாம் மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனை கலக்கி விடும். பன்னாடை நல்லதை விட்டு விட்டு வேண்டாததை தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளும். ஆடு, எருமை, பன்னாடை போன்ற குணங்கள் உடையவர்கள் கடைநிலை மாணாக்கர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
பன்னாடை மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக் கொண்டு நல்லனவற்றை கீழே விட்டு விடும். அதனால்தான் அறியாமை நிறைந்த மூடர்களை பன்னாடை என்று அக்காலத்தில் பெரியோர்கள் குறிப்பிட்டனர்.