
ஒரு குழந்தையை வளர்ப்பதில் தான் அந்த குழந்தையின் எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மனிதர்களின் வாழ்க்கை அன்பில் தான் அடங்கிவிடுகிறது. அதுவும் குழந்தை என்றால் சொல்லவா வேண்டும். அப்படி குழந்தை வளர்ப்பில் முக்கியமான ஒன்று அவர்களுடன் பேசுவது. இதை நவீன காலத்தில் பலரும் செய்ய தவறிவிடுகிறார்கள். வேலை வேலை என்று ஓடவே, குழந்தைகளிடம் அமர்ந்து மனம் விட்டு பேச யாருக்கும் நேரமே கிடைப்பதில்லை. இதனால் தான் இன்றைய குழந்தைகளின் வாயில் ஸ்ட்ரெஸ், டிப்ரஸன் என்ற வார்த்தைகள் அதிகமாக வருகின்றன.
இதை குறைக்கவும், உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக வளரவும் மனம் விட்டு பேசுவது அவசியமாகும். அதுவும் குறிப்பாக தூங்குவதற்கு முன்பு பேசினால், அவர்களின் மனதில் உள்ள பாரங்கள் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மறுநாள் புதுநாளாக அவர்களுக்கு அமையும் எனவும் சொல்லப்படுகிறது. அப்படி இரவு தூங்கும் முன்பு உங்களது குழந்தைகளிடம் என்னவெல்லாம் பேசவேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
முதலில், 'இன்றைய நாள் உனக்கு எப்படி இருந்தது?' என்ற கேள்வியை கேளுங்கள். இதன் மூலம் நமக்காக ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் உருவாகும். மேலும் அன்றைய நாளில் நடந்த விஷயங்களை சொல்வதன் மூலம் உங்கள் கண்காணிப்பில் குழந்தை இருக்கிறது என்ற எண்ணமும் பெற்றோர்களுக்கு வரும். இதை தவிர குழந்தைகளும் தொடர்ச்சியாக நடந்த விஷயங்களை தைரியமாக உங்களிடம் கூறுவார்கள்.
'இன்று நீ எப்போது மகிழ்ச்சியாக இருந்தாய்?' என்று கேட்கலாம். மேலும் அதற்கு காரணமானவர்களுக்கு நன்றி சொல்லும் பழக்கத்தை சொல்லி கொடுக்கலாம்.
எப்போதும் தூங்குவதற்கு முன்பு கதை சொல்வதை வழக்கமாக கொள்வது நல்லது. அது பட கதையாக இருந்தாலும் சரி, நம் வாழ்க்கையில் நடந்த கதையாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு அதில் உள்ள கருத்தை ஆழமாக பதிய வைத்து விடுங்கள்.
கேள்வி கேட்க சொல்லுங்கள். அவர்கள் மனதில் இருக்கும் சந்தேகங்கள், குழப்பங்களை தெரிந்து கொண்டு பதிலை கூறுங்கள்.
கடைசியாக தூங்க வைக்கும் போது, நம்பிக்கையும், உறுதியையும் கொடுங்கள். 'நாங்கள் இருக்கிறோம். கவலைபடாதே' என்ற வார்த்தைகள் மூலம் குழந்தைகள் தைரியத்தை வளர்த்து கொள்வார்கள். மேலும் இதன் மூலம் குழந்தைகள் பிரச்னைகளை எதிர்த்து போராட கற்று கொள்வார்கள்.