விரல் சூப்பும் பழக்கம் பல குழந்தைகளிடம் இருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் இதை ஆரம்பத்திலே கவனிப்பது நல்லது. ஏனெனில், சில குழந்தைகளின் இந்த பழக்கம் அவர்களின் பருவ வயதிலும் தொடர்கிறது. இதனால் இதை ஆரம்பத்திலே கண்டிப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகிறது.
சிறுவயதில் குழந்தைகள் கடைபிடிக்கும் பழக்கங்கள் அவர்களின் குழந்தைப்பருவம் சென்றாலும் மாறுவதில்லை. அவர்கள் தூங்கும் போது அவர்களை அறியாமலே கையை வாயில் வைப்பதுண்டு. சில குழந்தைகள் தனது 1 வயதை கடக்கும் போது இந்த பழக்கத்தை விட்டுவிடுவர். ஆனால் சில குழந்தைகள் அதை தொடர்கிறது. இவ்வாறு உங்கள் குழந்தையும் இந்த பழக்கத்தை மேற்கொண்டால், சிறுவயதிலே அதை கவனித்து சரி செய்துவிடுங்கள்.
குழந்தைகள் கட்ட விரலை உறிஞ்சுவதற்கான முக்கிய காரணம்?
சில குழந்தைகளுக்கு கட்டைவிரலை உறிஞ்சுவதன் மூலம் ஒரு வகையான அமைதி கிடைக்குமாம். அதிக பசி காரணமாகவும் குழந்தைகள் இப்படி செய்வார்களாம். அதை போல் மன அழுத்த சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்கு வளர்ந்த குழந்தைகள் இவ்வாறு செய்யலாம் (ஆனால் இது சிறுவயதில் இருந்து தொடந்த பழக்கம்தான்) என கூறப்படுகிறது. தூங்கும் போது சிலருக்கு கட்டைவிரலை உறிஞ்சினால் மட்டுமே தூங்க முடியும் என்ற எண்ணம் இருக்குமாம்.
இதனால் ஏற்படும் பாதிப்பு
குழந்தை பருவத்தில் கட்டை விரலை இவ்வாறு உறிஞ்சுவதால் பற்கள் சீராக வளராமல் போகலாம். மேலும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
சரி செய்ய முடியுமா?
இதை சரி செய்ய முடியும். உங்கள் குழந்தை 1 வயதில் தானாக விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்திவிட்டால் கவலை இல்லை. ஆனால், இது ஒரு வயதையும் தாண்டி தொடர்ந்தால், கட்டாயம் கவனிக்க வேண்டும்.
குழந்தைகள் இவ்வாறு விரல் சூப்பும் நேரத்தில், அவர்கள் கையை வாயிலிருந்து எடுத்துவிட்டு அழ வைக்காமல், அவர்களுக்கு எதாவது சாப்பிட கொடுக்கலாம்.
அவர்கள் அவ்வாறு செய்யும் போது அவர்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்யுங்கள். எடுத்துக்காட்டாக, விளையாட்டு பொருட்களை கையில் கொடுப்பது, அவர்களுடன் கேம்ஸ் விளையாடுவது போன்ற செயல்களை செய்யலாம். (மறந்தும் கூட மொபைல் போனை கொடுத்து விடாதீர்கள்)
வளர்ந்த குழந்தைகள் எனில், பெற்றோர்களுக்கு கோபப்பட எளிதாக இருக்கும். ஆனால், அவர்கள் மன அழுத்தம் அல்லது பதட்டம் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு இவ்வாறு செய்கிறார்கள் என்றால், நீங்கள் கோபப்படும்போது மேலும் அவர்களை மனஅழுத்தம் தாக்கலாம். எனவே அவர்களது பிரச்சனையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
பெற்றோர்களே! கோபப்படாமல் நேரம் ஒதுக்கி, அவர்களுடன் அன்பாக, அரவணைத்து பேசிப்பாருங்கள் நீங்கள்தான் வெற்றி அடைவீர்கள்...