சிறிய மாற்றம் தான்… பின்நாளில் ஒரு மிகப்பெரிய மாறுதலுக்கான அடித்தளம் ஆகிறது..! நாம் சிறு வயதிலிருந்தே அம்மா, அப்பா, உறவினர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் சின்ன ஒரு நல்ல விஷயங்கள் தான், நாளடைவில் நாம் நல்ல நிலைமைக்கு வர காரணமாகிறது.
இந்த விஷயத்தில் மிக முக்கியமானது குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம். 'கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை போடாமல் முறையாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும்..' என்பதை பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லி கொடுக்க வேண்டும். பொது இடங்களில் குழந்தைகள் மிட்டாயோ, பிஸ்கடோ, எது சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடித்துவிட்டு குப்பையை கண்ட இடங்களில் வீசாமல், தனது பாக்கெட்டுகளில் வைத்து, பின் குப்பை தொட்டியை பார்த்ததும், குப்பைகளை போட வேண்டும் என்ற பழக்கத்தை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். முதலில் பெற்றோர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
இந்த விஷயம் படிப்பதற்கு வித்தியாசமானதாக இருந்தாலும்..! இந்த விஷயங்களை நடைமுறையில் செயல்படுத்தினால் நல்ல மாற்றங்களை நிச்சயம் காண முடியும். இதை ஒருவர் நினைத்தால் முடியாது. நாம் ஒன்றுபட்டால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்..! நீங்களே நினைத்துப் பாருங்கள்; நாம் பொது இடங்களுக்கு செல்லும்போது, எத்தனை குப்பைகள், எத்தனையோ நெகிழிகுப்பைகள் நிறைந்த குளங்கள், ஆறுகள், அதுமட்டுமில்லாமல் குப்பைகள் நிறைந்து அடைத்து காணப்படும்.
கால்வாய்களும் பாதாள சாக்கடைகளும் என்று இயற்கை சீர்கேடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கு காரணம் நாம் ஒவ்வொருவரும் பொதுவெளியில் அசால்ட்டாக தூக்கி எறியும் நெகிழி குப்பைகள் தான். இந்த குப்பைகள் எல்லாம் ஒரு நாளில் சேர்ந்ததில்லை.
நமது பாட்டன் நமக்கு குளங்களையும், ஆறுகளையும், மரங்களையும் விட்டு சென்றான். நாம் அடுத்த தலைமுறைக்காக சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தி விட்டு செல்வோமே!
180 நாடுகள் அடங்கிய உலகத்தரவரிசை பட்டியலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நமது இந்தியாவிற்கு 178-வது இடம். அதேபோல் நெகிழி மாசுபாடு, கடலில் இருக்கும் நெகிழி மாசுபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய கழிவு மேலாண்மையில் நமது இந்தியாவிற்கு 151-வது இடம்.
இதைப் பார்க்கும்போதே மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது இந்தியா சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பது தெரிகிறது. ஆனால், பொருளாதார முன்னேற்றத்தில் நமது இந்தியாவிற்கு 5-வது இடம். நாட்டின் பொருளாதாரம் முக்கியம். அதேபோல் சுற்றுச்சூழல் மேம்பாடும் முக்கியம். மக்களாகிய நாம்தான் சுற்றுச்சூழலை பேணி காக்க வேண்டும்…!