பெண்களை வதைக்கும் மன அழுத்தம்!

காலை புத்துணர்ச்சி
காலை புத்துணர்ச்சி

ன்று பெரும்பாலான துறைகளில் ஆண்களோடு பெண்களும் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். வீடு, அலுவலகம் என்று பெண்கள் இரட்டைக் குதிரை சவாரி செய்வதால், ஆண்களை விட பெண்களே அதிக அளவுக்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு வரும் 70-80 சதவிகித பெண்களின் நோய்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ மன அழுத்தமே காரணமாக இருக்கிறது. பொதுவாக, மன அழுத்தத்துக்காக யாரும் சிகிச்சை பெற முன்வருவதில்லை. அது முற்றிப்போய், அதனால் ஏற்படும் உடல் சோர்வு, உடல் நல பாதிப்பு, குடும்ப உறவு சீர்கேடுகளுக்குப் பிறகே, மன அழுத்தம் அதன் பின் உள்ளது வெளிச்சமாகிறது.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தம் ஏற்படக் காரணமாக இருக்கிறது. இதேபோல் பிறப்பு, இறப்பு, திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல் என மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உண்டு.

லுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்துகொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும்.

முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கிறது. குறிப்பாக, வேலைக்குப் போகும் பெண்களில் 25 முதல் 34 வயதுக்குட்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் அதிகபட்ச மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

நல்ல தூக்கம்
நல்ல தூக்கம்

பெரியவர்களைப் போல சிறுவர்களும் அதிகளவில் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இறுக்கமற்ற சூழலை குடும்பத்தில் உருவாக்க முயற்சி செய்யுங்கள். தினமும் குழந்தைகளிடம் பேசுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது; என்னென்ன செயல்கள் நடந்தன என்பதைப் பற்றி அவர்களிடம் பேச்சு கொடுங்கள். அழுத்தமான சூழலில் குழந்தைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். உங்கள் பிரச்னைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள். குழந்தைகள் எதையாவது செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்களை இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள். நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது, இறுக்கமான சூழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும். குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

சந்தோஷம்தான் இந்த வாழ்வின் தேடல். 'சந்தோஷம் என்றால் என்ன?' என்று குழந்தையிடம் கேட்டால், 'மிஸ் ஹோம் வொர்க்கே கொடுக்கலைன்னா சந்தோஷம்’ என்று சொல்லும். கல்லூரி மாணவர்களிடம் கேட்டால், 'எக்ஸாம், டெஸ்ட் எதுவும் இல்லைன்னா அதுதான் சந்தோஷம்’ என்பார்கள். இல்லத்தரசியிடம் கேட்டால், 'வீடு கட்டணும், கார் வாங்கணும்’ என்று பட்டியலை அடுக்குவார். இப்படி ஒவ்வொரு தரப்பினருக்கும் வெவ்வேறு விஷயங்கள் சந்தோஷம் தருவதாக இருக்கும். ஆனால், உண்மையில் இவையெல்லாம்தான் சந்தோஷமா என்றால், இல்லை. இன்றைக்கு 99.99 சதவிகிதம் பேருக்கு உண்மையான சந்தோஷம் எதுவென்றே தெரியவில்லை. எதை எதையோ சந்தோஷம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அனைவரும் 'மெட்டீரியலிஸ்டிக் ஹேப்பினஸ்’ என்ற மாயையிலேயே உள்ளோம். அதாவது, பொருள் சார்ந்த சந்தோஷம். சொந்த வீடு, வாகனம், பணம், பதவி என்று எல்லாம் கிடைக்கப் பெறலாம். அவை எல்லாம் தருவது ஒருவித பெருமை, பரவசமே அன்றி சந்தோஷம் அல்ல. பணத்தால் ஒருபோதும் வாங்க முடியாதது சந்தோஷம். உண்மையில் சந்தோஷம் என்பது மன நிம்மதியே.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

டற்பயிற்சியும் மனப் பயிற்சியும் சந்தோஷத்துக்கான சாவிகள். பதற்றம், மனச் சோர்வு, மன அழுத்தம் இவற்றை எல்லாம் அகற்றும் அருமருந்து இந்தப் பயிற்சிகள். சந்தோஷம் மனதில் தங்க வேண்டுமானால், அதற்குரிய இடத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருக்கும் டென்ஷனை முதலில் வெளியே விரட்ட வேண்டும்தானே? அதற்கு இந்தப் பயிற்சிகள் கைகொடுக்கும்.

இரவில் நிம்மதியாக, நன்றாக உறங்குங்கள். அலுவல் பணி, குடும்பம், குழந்தைகள், தொலைக்காட்சி, மொபைல், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என, உங்கள் தூக்கத்தைத் தின்னும் காரணிகள் இங்கே வரிசை கட்டி நிற்கலாம். சந்தோஷம் வேண்டும் என்று நினைத்தால், இவற்றுக்கு எல்லாம் கண்டிப்பாக எல்லை நிர்ணயுங்கள். தினமும் குறைந்தது எட்டு மணி நேர உறக்கத்தைச் சொந்தமாக்குங்கள். உங்கள் உறக்கத்தில் இரண்டு மணி நேரம் குறையும்போது, அந்தச் சோர்வு அந்நாள் முழுக்க உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கும். 'நல்லா தூங்கினேன்’ என்று முழு திருப்தியுடன் படுக்கையில் இருந்து எழும் நாளில் அனுபவிக்கும் புத்துணர்வே, அந்நாளின் பணிகளை சுறுசுறுப்பாக முடிக்க வைத்து, ஒருவித நிம்மதியை, சந்தோஷத்தைத் தரும்.

பணம் சந்தோஷத்தைத் தரும், உண்மைதான். ஆனால், பணம் ஒன்றுதான் சந்தோஷம் என்று எண்ணி, அதற்காக உறவுகள், ஆரோக்கியம், குணம் என்று அனைத்தையும் சீக்காக்கிக் கொண்டால், சந்தோஷம் என்பது வாழ்க்கையில் கானல் நீர்தான்.

வீடு, வாகனம், பணம், பதவி உயர்வு போன்றவை வாழ்வின் இலக்குகள் மட்டுமே, சந்தோஷமோ நிம்மதியோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், பணம் அதிகரிக்க அதிகரிக்க, நிம்மதி விலகும் என்பதும் கண்கூடு. மெத்தையை வாங்கியவர்களால், தூக்கத்தை வாங்க முடியாமல் போகும் கதை இதுதான். நிம்மதியான மனமே சந்தோஷத்தின் நிரந்தர முகவரி.

பணத்தை விட, தனி மனித ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நல்லொழுக்கம், நல்வழியில் அழைத்துச் சென்று மன நிம்மதியைக் கொடுக்கும். அதனால் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதோடு, நினைத்ததை எளிதில் சாத்தியப்படுத்தும் வல்லமையும் கிடைக்கும்.

வேண்டாம் வேலை பளு
வேண்டாம் வேலை பளு

டுத்தவர் பிரச்னைகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதைத் தவிருங்கள். முடிந்தால் உதவுங்கள், இல்லையென்றால் ஒதுங்குவதே நல்லது. பெற்றோர்களின் சண்டை, சந்தேகம், டென்ஷன் எதிரொலிக்கும் சுவர்களை உடைய வீடுகளில் வாழும் குழந்தைகளை விட, நிம்மதியான இல்லறத்தில் வளரும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். நீங்களும் நிம்மதியாக இருந்து, உங்கள் குழந்தைகளுக்கும் அந்த நிம்மதியைப் பரிசளியுங்கள்.

வாழ்க்கைப் பந்தயத்தில் ஜெயிக்க, படுக்கையில் விழுந்த பின்னும் மனதையும் மூளையையும் ஓடவிட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அனைத்தையும் மறந்துவிட்டு, தூக்கத்தை மட்டும் தழுவுங்கள். பெரியோர்கள், நூல்கள், மதங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை வழிகாட்டலுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்தவர்களைத் தாழ்த்திப் பேசுவது, காயப்படுத்துவது போன்ற செயல்களால் நமக்குக் கிடைப்பது என்ன? எதிராளியை அவமானப்படுத்திவிட்ட பெருமிதமா? உண்மையில், அது குரூரம். குரோதம். இவையெல்லாம் குடிகொண்டிருக்கும் நெஞ்சத்துக்கு, மன நிம்மதி சாத்தியமில்லை.

காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.  எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப்போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

வேலைகளைத் தள்ளிவைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்த பின் செய்வதைத் தவிருங்கள். சற்று முன்கூட்டியே செல்லப் பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்துக்கு முன்பாகவே புறப்படுங்கள்.

உங்கள் உடைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள். வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள். செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால், ‘மன்னிக்கவும்… என்னால் செய்ய முடியாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com