
கூட்டுக் குடும்பங்கள் அருகிவிட்ட நிலையில், தனிக்குடும்பங்கள் அல்லது ஒற்றைப் பெற்றோர் என மாறிவிட்ட சூழலில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பது சவாலான காரியம்தான். சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெரும்பாலான பெற்றோர் இரண்டு, மூன்று வயது வரை அதனுடைய இயற்கை உபாதைகளைத் தணிப்பதற்கு டயப்பர் அணிவித்து விடுகிறார்கள். ஆனால், பள்ளிக்குச் செல்லும்போது குழந்தை கழிப்பறையை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது அவசியம். அதற்கான முறையான பயிற்சி பெற்றோர்களால் தரப்படுவதும் மிகவும் முக்கியம்.
வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும்போதும் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவித்து விடுகின்றனர் பெற்றோர். இதனால் நினைத்த நேரத்தில் அணிந்திருக்கும் டயப்பரிலேயே தனது இயற்கை உபாதையை தணித்துக் கொள்ளும் வகையில் குழந்தைகள் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.
முதல் முதலாகக் கழிப்பறைக்குள் அழைத்துச் செல்லப்படும்போது அவர்களுக்கு பலவிதமான அச்சமும் தயக்கமும் ஏற்படலாம். அவர்களை உணர்ச்சி ரீதியாக மன ரீதியாக தயார்ப்படுத்துவது பெற்றோருக்கு ஒரு சவாலான காரியமாகும். பிள்ளைகளுக்கு இதைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவர்களுக்கு முறையான பயிற்சி தருவது மிகவும் அவசியம்.
சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனடியாக அப்பாவையோ அம்மாவையோ அழைக்க வேண்டும் என சொல்லித் தர வேண்டும். சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்த சுவாரசியத்தில் சொல்ல மறந்து, இருந்த இடத்திலேயே சிறுநீர் கழித்து விடும். அதற்காக பெற்றோர் கோபப்படாமல், ‘அடுத்த முறை உனக்கு யூரின் வருவது போல இருந்தால் அம்மாவிடம் சொல்லு’ என்று அன்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
குழந்தைக்கு கழிப்பறையை உபயோகிப்பது என்பது புதிய ஒரு இடத்திற்கு இடம்பெயர்வது போன்ற ஒரு செயலாகும். வழக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது அது சற்றே தடுமாறும். சில குழந்தைகளுக்கு கழிப்பறையை பார்த்தாலோ தண்ணீரின் சத்தத்தை கேட்டாலோ அச்சம் ஏற்படலாம். அவர்களுக்கேற்ற சிறிய அளவிலான டாய்லெட்டுகளை உபயோகிக்கலாம்.
பிடிவாத குணம் கொண்ட சில குழந்தைகள் கழிப்பறையை உபயோகிக்க மறுக்கலாம். அழுது ரகளை கூட செய்யலாம். தம் எதிர்ப்பைக் காட்ட உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் சமயத்தில் வேண்டுமென்றே இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிக்கலாம். இதைப் பார்க்கும் பெற்றோருக்கு கோபம் வந்து அவர்களை அடிப்பதோ அல்லது திட்டுவதோ கூடாது. மீண்டும் மீண்டும் குழந்தைகள் அதே தவறை செய்யும். எனவே, அதை இயல்பாக எடுத்துக்கொண்டு கழிப்பறையின் அவசியத்தை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு அதைப் பயன்படுத்த சொல்லித் தர வேண்டும்.
டயப்பர் அணிந்திருக்கும்போது உடல் எப்போதும் ஈரமாகவே இருக்கும். ஆனால், கழிவறையைப் பயன்படுத்தும்போது உலர்வாக இருக்கலாம் என்கிற அதன் நன்மையைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். பேசத் தெரியாமல் இருக்கும் குழந்தைகளுக்குக் கூட, ஒரு வயது குழந்தைகளுக்குக் கூட கழிப்பறைக்குச் செல்வதற்கு சில சைகைகளை சொல்லித் தரலாம். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வார்த்தைகளாக சொல்லித் தரலாம்.
பெற்றோர் இரவில் மட்டும் பிள்ளைகளுக்கு டயப்பர் அணிவித்துவிட்டு பகல் நேரங்களில் உள்ளாடைகளை அணிவிக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சரியான முறையில் டாய்லெட் ட்ரெயினிங் கொடுத்தால் அவை அவற்றைப் புரிந்து கொண்டு நடக்கும். இதில் பெற்றோரின் மனப்பக்குவமும் பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம்.