கர்ப்ப கால தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!

Pregnancy superstitions
pregnant woman
Published on

தாய்மை என்பது பெண்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான காலகட்டம். மக்களிடையே கர்ப்ப காலம் குறித்த தவறான நம்பிக்கைகள் பலவும் நிறைய உள்ளன. கர்ப்பமாக இருக்கும்பொழுது மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளிப் பழம் போன்றவை சாப்பிட்டால் கரு கலைந்து விடும். ஆட்டோவில் பயணம் செய்யக்கூடாது. தாம்பத்தியம் கூடாது. மாடிப்படி ஏறி இறங்கக் கூடாது என ஏகப்பட்ட நம்பிக்கைகள் நம்மிடம் உள்ளன. இந்த நம்பிக்கைகள் பல காலமாக நம்மிடையே தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உண்மையில் பப்பாளி மற்றும் அன்னாசி பழங்களில் நிறைய வைட்டமின்களும், தாது உப்புக்களும் உள்ளன. மாம்பழம், பலாப்பழம் ஆகியவற்றிலும் நிறைய சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்தப் பழங்களை சாப்பிடுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது. தாராளமாக சாப்பிடலாம். ஆனால் அளவுடன் சாப்பிடுங்கள்.

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்றும், கருப்பு திராட்சை சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்றும் நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறு. குழந்தையின் நிறம் நம் மரபை பொறுத்துத்தான் வரும். குங்குமப்பூ சிறந்த மணமூட்டி. இதனை பாலில் கலந்து குடிக்க கர்ப்பிணி பெண்கள் வாந்தி எடுக்காமல் பாலை குடிப்பார்கள். அதற்காகத்தான் குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்கச் சொல்கிறார்கள்.

மாடிப்படி ஏறுவதிலும் இந்தத் தவறான நம்பிக்கை உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் தாராளமாக மாடிப்படி ஏறலாம். வேக வேகமாக ஏறாமல் நின்று நிதானமாக ஏறினால் மூச்சு வாங்காது. சிரமம் ஏற்படாது அவ்வளவுதான். அதேபோல், பைக்கில் போகலாமா? ஆட்டோவில் போகலாமா? ரோடு மோசமாக இருக்கிறது என்ற சந்தேகத்திற்கும் டாக்டர்கள் தாராளமாக பைக்கில், ஆட்டோவில் பயணம் செய்யலாம் ஒன்றும் ஆகாது. எதிலும் வேகம் கூடாது. நிதானமாகச் செல்ல வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இதில் தொலைதூரப் பயணத்தைத் தவிர்க்கலாம்.

கர்ப்பிணிகள் நிமிர்ந்து படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் தவறு. கர்ப்பிணிப் பெண்கள் தாராளமாக மல்லாந்து படுக்கலாம் அவர்களுக்கு சௌகரியமாக இருந்தால். பிரசவம் நெருங்கும் சமயங்களில் அதாவது ஏழு, எட்டு மாதங்களில் மல்லாந்து படுப்பதைத் தவிர்க்கலாம். காரணம், தாயிடமிருந்து குழந்தைக்கு இரத்தம் எடுத்துச் செல்கின்ற இரத்த நாளங்கள் இதனால் அழுத்தப்படும். எனவே, பிரசவம் நெருங்கும் சமயங்களில் மல்லாந்து படுப்பதைத் தவிர்க்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கருவுற்றிருக்கும் சமயங்களில் சிலருக்கு பாதங்கள் வீங்கி விடும். இதற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்லி தண்ணீர் குடிக்கக் கொடுப்பார்கள். பாதங்கள் வீங்கினால் பார்லி தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தவறான அறிவுரையே. பார்லி தண்ணீர் உடலில் இருக்கின்ற தண்ணீரை வெளியேற்றி விடும். அதிலும் கோடைக்காலத்தில் கருவுற்றிருக்கும் பெண் பார்லி தண்ணீர் குடித்தால் பலவிதமான பிரச்னைகள் வரலாம். கால் வீக்கத்திற்கு கால்களை சற்று உயரே மேலே தூக்கி வைத்தாலே போதும். வீக்கம் தானாக குறைந்து விடும். கால் பகுதியில் இரண்டு தலையணைகளை வைத்து உயரமாக பாதங்களை தூக்கி வைத்தாலே வீக்கம் குறைந்து விடும்.

இதையும் படியுங்கள்:
கோயில்களில் தரும் எலுமிச்சை பழத்தின் மகிமை தெரியுமா?
Pregnancy superstitions

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உப்பு சுவை பிடித்திருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், இனிப்பு சுவை பிடித்திருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் உடலில் தாது உப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்பொழுது நம் உடல் தானாகவே சுவை தேடல் மூலம் குறைபட்ட ஊட்டச்சத்தை கேட்டு பெறும். இந்த 'ஃபுட் க்ரேவிங்'குக்கும் குழந்தையின் பால் இனத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கர்ப்பமுற்ற மூன்றாவது மாதத்தில் தாய்க்கு அதிகமாக வாந்தி வந்தால் குழந்தைக்கு முடி அதிகம் இருக்கிறது என்று கூறுவார்கள். உண்மையில் குழந்தையின் உச்சந்தலை, முடியின் அடர்த்தி பரம்பரை மரபணுக்களைப் பொறுத்தே அமையும். இதற்கும் வாந்திக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறுவதும் அர்த்தமற்றது. கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் மட்டும் வேண்டாம் என்றுதான் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதேபோல் கிரகண நேரத்தில் எந்த வேலையும் செய்யாமல் ஓரிடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்று கூறுவதும் அர்த்தமற்றது. கிரகணத்திலிருந்து வருகிற கதிர்களை நேரடியாக வெறும் கண்களால் பார்ப்பதைத் தவிர்க்கவும். மற்றபடி எல்லா வேலைகளையும் தாராளமாகச் செய்யலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com