
பிரஷர் குக்கர்:
பிரஷர் குக்கர் ஒரு சிறப்பான சமையலறைக் கருவியாகும். 1679 ஆம் ஆண்டு பிரெஞ்சு விஞ்ஞானி டெனிஸ் பாபின் என்பவரால் பிரஷர் குக்கர் உருவாக்கப்பட்டது. பிரஷர் குக்கர்கள் சீல் செய்யப்பட்ட பானைகள் போன்றவை. அவை வழக்கமான கொதிநிலையை விட மிக வேகமாக உணவை சமைக்க நீராவி அழுத்தத்தைப் பயன்படுத்துகின்றன. நவீன குக்கர்களில் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு வால்வுகள் உள்ளன.
பிரஷர் குக்கர்கள் சமைக்கும் நேரத்தை வெகுவாக குறைப்பதால் இது பெண்களுக்கு மிக பிடித்தமான ஒரு சமையல் அறைக் கருவியாகும். ஆரம்பகால மாதிரிகளில் பாதுகாப்பு வழிமுறைகள் இல்லை. ஆனால் அதன்பின் வந்த குக்கர்களில் விபத்துகளை தடுக்கவும் அழுத்த வெளியீட்டு வால்வுகள் மற்றும் தானியங்கி கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கேஸ் அடுப்பு. இண்டக்ஷன் ஸ்டவ் போன்றவற்றில் குக்கரை பயன்படுத்தலாம். அரிசி பருப்பு போன்றவற்றை சமைக்க பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
மல்டி குக்கர்கள்:
பிரஷர் குக்கரை போல அல்லாமல் மல்டி குக்கர்கள் பலவிதமான செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு எலக்ட்ரிக் சாதனமாகும். இது சமைத்தல், வதக்குதல், வேகவைத்தல், பேக்கிங், பால் காய்ச்சுதல் போன்ற செயல்முறைகளை உள்ளடக்கியது. மல்டி குக்கரில் பிரஷர் குக்கர்களைப் போல விசில் வருவது கேஸ்கட் போடுவது போன்ற பிரச்சினைகள் இல்லை. பெரும்பாலும் இவற்றில் ஸ்மார்ட் டைமர்கள் மற்றும் ஸ்மார்ட் சென்சார்கள் உள்ளன.
பிரஷர் குக்கர் Vs மல்டி குக்கர்கள்:
பிரஷர் குக்கரில் அதிக நீராவி அழுத்தத்தின் கீழ் உணவை விரைவாக சமைக்கலாம். மேலும் கடினமான இறைச்சி வகைகள், சுண்டல், பீன்ஸ் போன்ற உணவுகளை சமைக்கும் நேரத்தை குறைக்கிறது. இதில் கேஸ்கட் போட்டு ஆவி வந்ததும் வெயிட் போட்டு விட வேண்டும். அதிலிருந்து வரும் நீராவி அழுத்தத்தை அதிகரித்து நீரின் கொதிநிலை அதிகரிக்கிறது. சாதம் பருப்பு போன்றவை விரைவில் வெந்துவிடும். பிரியாணி, புலாவ், சூப்புகள், குழம்புகள் மற்றும் அரிசி உணவுகள் தயாரிக்கலாம். நவீன ரக மின்சார பிரஷர் குக்கர்களில் வதக்குதல் போன்ற அம்சங்களும் உள்ளன.
மல்டி குக்கர்கள் என்பது பல சாதனங்களை உள்ளடக்கிய ஒரு கருவியாகும். இதில் சாதம் சமைக்கலாம். காய்களை வேக வைக்கலாம், வதக்கலாம், பேக்கிங் செய்யலாம். இது டிஜிட்டல் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி செயல்படுகிறது. பரந்த அளவிலான சமையல் நுட்பங்களைக் கொண்டது. பல மல்டி குக்கர்கள் குறிப்பிட்ட உணவுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளதால், பயனர்களுக்கு வசதியாக இருக்கின்றன.
பிரஷர் குக்கரில் சமைத்துக் கொண்டிருக்கும் போது மூடியை திறந்து பார்க்க முடியாது. வெடித்து விடும். ஆனால் மல்டி குக்கர்களை அவ்வப்போது திறக்கலாம், பொருட்களை சேர்க்கலாம், உணவை சரி பார்க்கலாம். பெரும்பான்மையான மல்டி குக்கர்கள் டைமர்களுடன் இருக்கின்றன. உணவை சூடாக வைத்திருக்கும் செயல்பாடுகள் உண்டு. உணவு தயாரிப்பை மிகவும் எளிதாக்குகிறது. பிரஷர் குக்கர் போல விசில் வருவதற்காக அருகிலேயே நின்று காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. வேலை முடிந்ததும் தன்னாலே அது ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும்.
நவீன மல்டி குக்கர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் செயல்படக் கூடியவைகளாக இருக்கின்றன. சில மாதிரிகளில் உள்ளமைக்கப்பட்ட வைஃபை மற்றும் ரிமோட் கண்ட்ரோல் கண்காணிப்பின் மூலம் செயல்படக்கூடிய அமைப்பு உள்ளது. மிக முக்கியமான அம்சமாக இவற்றில் உபயோகப்படுத்தக்கூடிய பாத்திரங்கள் நல்ல ஸ்டீலால் செய்யப்பட்டுள்ளதால் இவற்றை சுத்தப்படுத்துவது மிகவும் எளிது. உணவு துகள்களை ஒட்டிக் கொள்ளாத பாத்திர அமைப்பைக் கொண்டுள்ளன.
மின்சார பிரஷர் குக்கர்கள் பாரம்பரிய முறைகளை விட வேகமாக உணவை சமைக்கின்றன. இதனால் நேரம் மற்றும் ஆற்றல் மிச்சமாகிறது. வழக்கமான கேஸ் அடுப்பில் சமைப்பதை விட குறைவான ஆற்றலே பயன்படுத்துகிறது. விரைவான சமையல் செய்முறை மற்றும் மூடி அமைப்பு உள்ளதால், உணவின் விட்டமின்கள் மற்றும் தாதுக்களை பாதுகாக்க உதவுகிறது. பிரஷர் குக்கர்கள் துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியம் போன்ற பல்வேறு பொருட்களில் கிடைக்கின்றன. இவை நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்தவை.