புகுந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க...

வாழ்வியல்
புகுந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க...

புகுந்த வீட்டினருடன் நல்லுறவில் இருக்க நான் செய்தது.. செய்வது... 

20+ல் திருமணம் இன்னாருடன் என்று முடிவானதுமே புகுந்த வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்ன வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? என்ன படிக்கிறார்கள் போன்ற விவரங்களை விருப்பத்துடன் தெரிந்து கொண்டேன். புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் போதே," இது நம் வீடு, நம் குடும்பம் இந்த வீட்டின் சுக துக்கங்களில் முழுமனதாக பங்கெடுத்து கொள்வேன்" என்ற உறுதி மொழியை மனதில் எடுத்துக் கொண்டேன். கணவரின் பெற்றோரை அன்பாக ,அழகாக அதே சமயம் அழுத்தம் திருத்தமாக" அத்தை ,மாமா" என்று அழைத்தே பழகினேன். புகுந்த வீட்டில்.  யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை விரல் நுனியில் வைத்திருந்து தக்க சமயத்தில் அவற்றை எல்லாம் செய்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினேன். கூப்பிட்டா தான் போகணும், சொன்னால்தான் வேலை செய்யணும், பேசினால் தான் பேசணும்னு... ஒருபோதும் நினைக்காமல் எந்த விஷயமாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும் அந்த விஷயத்தை அணுகினேன்.

ன்னதான் உயிர்த் தோழியாக இருந்தாலும் புகுந்த வீட்டின் விஷயங்களை துளியும் சொல்ல மாட்டேன். ஒப்பீடும் பண்ணி பார்க்க மாட்டேன். குடும்ப உறுப்பினர் முன் கணவரிடம் வீண் வாக்குவாதம் செய்வதை முக்கியமாக சத்தமாக பேசுவதை தவிர்த்து விடுவேன். (எந்த அம்மாக்களுமே தன் மகனுடன் சண்டை போடும் மருமகளை விரும்ப மாட்டார்கள்) எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் பெரியவர்களிடம் சொல்லாமல் வெளியில் செல்ல மாட்டேன். உரிமை இருந்தாலும் அனுமதி கேட்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும்.

அத்தை மாமாவின் திருமண நாள் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள் அன்று விடியற் காலையிலேயே வாழ்த்துச் சொல்லி அவர்களுக்கு பிடித்த சமையல் செய்து அசத்துவேன். (அது இன்னமும் தொடர்கிறது).

50+ல்... வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல் இப்போது அத்தை இருந்த இடத்தில் நான்.. இப்போது இன்னும் அதிக ஜாக்கிரதையோடு தான் உறவுகளை அணுகுகிறேன்.

மனதிற்கு நெருக்கமானவர் என்ற இடத்தை யாருக்கும் கொடுக்காமல் எல்லோரையும் அவரவர் இயல்போடு  நேசிக்கிறேன். யாரும் பிறரை திருத்த முடியாது மாற்றவும் முடியாது. அதனால் கவனமாக வார்த்தைகளை பிரயோகிக்கிறேன். சொற்கள் வெறும் சத்தங்கள் இல்லை அவை விதைகள் அவை இடமறிந்து விதைத்தால் அதிலிருந்து நமக்கு கிடைக்கும் பலன் மிகப்பெரிது என்பதை நன்கு உணர்ந்து... அதன்படி நடக்கிறேன். உறவுகளின் பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்த நேர்ந்தால் மென்மையாக சொல்லி திருத்துகிறேன். கடுமையாகப் பேச வேண்டிய தருணங்களில் கடுமையாகத் தான் பேசுகிறேன். (ஒழுக்கம் மிகவும் முக்கியம் பாஸ்)

அப்பவும் சரி இப்பவும் சரி பயன் கருதா அன்பே அன்பு என வாழ்பவள் நான். மொத்தத்தில் நான் சரியானவளாக இருப்பதை விட அன்பானவளாக இருப்பதையே விரும்புகிறேன் அதையே  என் உயிர் மூச்சாக கொண்டுள்ளேன். நீங்களும் அப்படியே இருந்துதான் பாருங்களேன்... வாழ்க்கையிலே எப்பொழுதும் மகிழ்ச்சி தான்! வெற்றிதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com