

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள ஒவ்வொரு பண்டிகையும் அர்த்தமுள்ளவை. தை மாதத்தின் முதல் தேதி நாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அதேபோல தை முதல் தேதிக்கு முந்தைய நாள், அதாவது மார்கழி கடைசி நாள் அன்று அதிகாலையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
முற்காலத்தில் மிகவும் எளிமையான வாழ்க்கை முறை அமைந்திருந்தது. தை முதல் தேதி அன்று பொங்கல் கொண்டாடி மகிழ அதற்கு முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் நமக்குப் பயன்படாத பழைய தேவையில்லாத பொருட்களை சேகரித்து அதை நம் வீட்டிற்கு முன்னால் வீதியில் போட்டு எரிக்கும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் பழைய பாய்கள், தலையணைகள், பழைய துணிகள், காலண்டர்கள், பழைய பேப்பர்கள், உடைந்து போன மர நாற்காலிகள், பழுதான மூங்கில் கூடைகள் முதலானவை எரிக்கப்படும். இவை அனைத்தும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத பொருட்களாக இருந்தன.
அக்காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் பரண் என்றொரு அமைப்பு இருக்கும். அதில் தேவையில்லாத பொருட்களைப் போட்டு வைப்பார்கள். போகிக்கு முந்தைய நாள் இந்த பரண்களை சுத்தம் செய்து தேவையில்லாத பொருட்களை போகியில் போட்டு எரிப்பார்கள்.
சிறிய அளவில் தோலினால் செய்யப்பட்ட மேளங்கள் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அதைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போகிக்கு முந்தைய நாளே வாங்கித் தருவர். அப்போதிலிருந்தே சிறுவர்கள் அந்த மேளத்தை இப்படியும் அப்படியும் ஆட்டி அதில் எழும் ஓசையைக் கேட்டு மகிழ்வார்கள். போகியன்று விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டில் முந்தைய நாள் சேகரித்து வைத்துள்ள பழையனவற்றை வீதியில் போட்டு எரிக்க சிறுவர்கள் அதிலிருந்து எழும் தீயில் தங்கள் மேளங்களை சூடேற்றி ஓசையை எழுப்புவார்கள். தெருவெங்கும் ஒரே சமயத்தில் அனைவரும் போகி கொளுத்துவார்கள். சிறுவர்களின் மேளச் சத்தமும் காதைப் பிளக்கும்.
நமக்குத் தேவையில்லாத பழைய பொருட்களை தீயில் போட்டு எரிப்பது மட்டுமல்ல, போகி பண்டிகை. நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அன்று அகற்றி மறுநாள் தை திங்கள் முதல் தேதியன்று தூய்மையான மனதுடன் பொங்கலிட்டு மகிழ்ச்சியாகத் தங்கள் வாழ்வை துவக்குவதும் இதன் உட்பொருளாகும்.
தற்காலத்தில் போகி பண்டிகையை எதையாவது சிலவற்றைப் போட்டு எரிக்கும் ஒரு பண்டிகை என்று தவறாகப் புரிந்து கொள்ளும் பலர், அன்று எதையாவது எரிக்க வேண்டுமே என்று சுலபமாகக் கிடைக்கும் பழைய டயர், டியூப் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீதியில் போட்டு எரிப்பதைக் காண நேரிடுகிறது. இது சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும்.
ஒரு செயலுக்கான அர்த்தம் என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் நமது உடல் நலமும் சீர்கெடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டியது அவசியம். போகி பண்டிகையைக் கொண்டாட வேண்டுமே என்பதற்காக எதையாவது போட்டுக் கொளுத்துவது போகி பண்டிகையாகாது. மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத நமக்குத் தேவையில்லாத பொருட்களை மட்டுமே நாம் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி எரிக்க வேண்டும். இந்த வருடத்திலிருந்து இதை நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்து சுற்றுச்சூழல் மாசடையாதவாறு போகி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வோம்!