வீடு பத்திரம்! மழைக்கால முன்னெச்சரிக்கை! பராமரிப்பு டிப்ஸ்!

வீடு பத்திரம்! மழைக்கால முன்னெச்சரிக்கை! பராமரிப்பு டிப்ஸ்!

‘வரலையே... வரலையே’ என்று காத்திருக்க வைத்துவிட்டு, ‘இதோ, வந்தே விட்டேன்’ என்று வருவதுதான் பருவகால மழை. இனி, இரண்டு மாதங்களுக்கு மழைக்காலம்தான். மழைக் காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க நாம் பின்பற்றவேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ:

* ஈர விரலோடு மின் சுவிட்சை போடக் கூடாது என்பார்கள். தண்ணீரும் மின்சாரமும் எதிரிகள். எனவே, வீட்டிலுள்ள மின்சார இணைப்புகளில் ஏதாவது பழுது ஏற்பட்டிருந்தால் மழைக்காலத்துக்கு முன்பே அதையெல்லாம் சரிசெய்து விடுங்கள். மழைக் காரணமாக ஈரமாகக்கூடும் எனும்படியான எல்லாவிதமான மின் சாதனங்களையும் மூடிவைத்து விடுங்கள்.

* வெளிச்சுவர்களின் வண்ணங்கள் பெருமழை பெய்த பிறகு டல்லாகக் காட்சி தரும். காரணம், அந்த வண்ணத்தின் ஒரு பகுதியை நீர் நீர்த்துப்போக வைத்திருக்கும். வாட்டர் ப்ரூஃப் பெயின்ட்களைப் பயன்படுத்துவது நல்லது.

* சுவர்களில் விரிசல்கள் இருந்தால் அவற்றைச் சரிப்படுத்தி விடுங்கள். இல்லையேல் அவற்றால் பிரச்னைகள் எழும்.

* முக்கியமாக, இந்த விரிசல்கள் மேற்கூரையில் இருந்தால் கவனம் தேவை. ஏனென்றால், நீர்க்கசிவு அதன் வழியாக வீட்டுக்குள் வரலாம்.

* மொட்டை மாடியில் சேறும் / சருகும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் வெளியேறும் பாதையில் எந்த அடைப்பும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் அங்கு தேங்கும் நீர் மேற்கூரை வழியாகக் கீழே கசியக் கூடும்.

* கரையான்களின் ஆதிக்கம் மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். காரணம் மழைக்காலத்தில் சுவர்கள் நனைந்திருக்கும். இதனால் உள்நுழையும் கரையான்கள் மரச்சாமான்களை அரிக்கத் தொடங்கும். வீட்டில் ஒரு கரையானைப் பார்த்தால்கூட உடனடியாக அதற்கு எதிரான மருந்தை அடியுங்கள்.

* மரத்தினால் ஆன தரைத்தளம் கொண்ட வீடு என்றால் மேலும் முன்னெச்சரிக்கை தேவை.

* சாரல் உள்ளே வரக்கூடாது என்பதற்காக மழைக்காலத்தின்போது ஜன்னல்களையும், கதவுகளையும் மூடியே வைத்திருப்போம். இதன் காரணமாக அறைக்குள் ஒருவித நாற்றம் உண்டாகலாம். அவ்வப்போது கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வையுங்கள். சூரிய வெளிச்சம் உள்ளே படட்டும்.

* வேப்பிலைகளை அறையில் வைத்தால் துர்நாற்றம் குறையும்.

* தரையில் கம்பளம் விரித்திருப்பவர்கள் மழைக்காலத்தில் அவற்றை நீக்கிவிடுவது நல்லது. இல்லையென்றால் ஈரப்பதமும், அழுக்குகளும் அவற்றில் சிக்கிக்கொண்டு துர்நாற்றத்துக்கு வழி வகுக்கும். இதனால் கிருமிகள் பரவும்.

* அலமாரிகளில் அவ்வப்போது காற்றோட்டம் இருக்க வேண்டும். நாப்தலின் உருண்டைகளை இவற்றில் வையுங்கள். துர்நாற்றம் குறைவதோடு, கரையான்களின் நடமாட்டமும் குறையும். அதுவும் மர அலமாரி என்றால் இது மிக மிக அவசியம்.

* அலமாரிகளில் வேப்பிலைகளை வைத்தால் துணிகளுக்குக் கீழே நாளிதழைப் பரப்பி அதற்குக் கீழே வேப்பிலையைப் பரப்பலாம்.

* மிதியடிகளை அதிகமாகப் பயன்படுத்துங்கள். அப்போதுதான் வீட்டுக்குள் தண்ணீரும், சேறும் சேராது. அதேசமயம் இந்த மிதியடிகளை அடிக்கடி தட்டி அல்லது நனைத்து உலர்த்திக் காயவையுங்கள்.

* சுவருக்கும் சோஃபா அல்லது கட்டிலுக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும். அப்போதுதான் சுவர்களின் ஈரப்பதம் சோஃபாவையோ, கட்டிலையோ பாதிக்காது.

* மரச்சாமான்களைத் துடைக்கும்போது ஈரத்துணி வேண்டாம். ஏனென்றால், ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை தூசிக்கு உண்டு. இதனால் ஃபர்னிச்சருக்குப் பாதிப்பு உண்டாகலாம். எனவே, அவற்றைச் சுத்தப்படுத்த உலர்ந்த துணிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

* கதவு, ஜன்னல் போன்றவை ஈரப்பதம் காரணமாகக் கொஞ்சம் விரிவடையலாம். இதன் காரணமாக அவற்றை மூடுவது கடினமாக மாறலாம். எனவே, உராயக்கூடிய பகுதிகளில் சிறிது எண்ணெய் அல்லது மெழுகைப் பூசி வைத்து விட்டால் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்.

* தண்ணீர் தேங்கினால் அது கொசுக்களுக்குக் கொண்டாட்டம். எனவே, தண்ணீர் தேங்காதபடி ஆங்காங்கே வடிகால்களை ஏற்படுத்துங்கள்.

* மழைக்காலங்களில் வீட்டுக்குப் பெயின்ட் அடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால், காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நீங்கள் நினைக்கும் விளைவைப் பெயின்டிங்கில் கொண்டுவர முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com