கடுமையாக உழைப்பதை விட, திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

Rather than working hard, learn to work efficiently
Rather than working hard, learn to work efficiently

‘நான் கடுமையாக உழைக்கிறேன்; ஆனால் உயர்வுக்கு வழி இல்லை’ என்று புலம்புபவர்கள் நம்மில் பலர் உண்டு. கடுமையாக உழைத்து பிரயோஜனம் கிடையாது. திறமையாக உழைக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் உச்சத்தை அடைய முடியும். இந்த சூட்சுமத்தை கற்றுக் கொடுக்கும் ஒரு குட்டிக்கதைதான் இது. இதைப் படித்தால் நிச்சயமாக கடுமையாக உழைப்பதை விட, நீங்கள் திறமையாக உழைக்க முடிவு செய்து விடுவீர்கள்.

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய், ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்கத் தொடங்கியது.

சுவைத்துக் கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது. ஆனால், வயிறுதான் நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்" என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம், ‘அய்யோ! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது’ என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. ‘சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நட்பைப் பெற்று வாழ்நாளெல்லாம் நாம் பயம் இல்லாமல் வாழலாம்’ என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய், ஏதோ தப்பு நடக்கப்போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம், கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்தியபடி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

இப்பொழுது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

இதையும் படியுங்கள்:
உண்மையிலேயே மகிழ்ச்சியான மனிதர்கள் யார் தெரியுமா?
Rather than working hard, learn to work efficiently

தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன்பு போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்தக் குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்கக் கூறியது.

இதைக் கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மைச் சுற்றி இருக்கலாம். அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். ‘கடுமையாக உழைப்பதை விட, திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com