

சில நேரங்களில் வீட்டில் வளர்க்கப் படும் நாய்களோ அல்லது தெரு நாய்களோ ஊளையிடுவது இயல்பு. அவ்வாறு அவை ஊளையிட்டால் அந்த வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்திலோ யாரோ ஒருவர் இறக்க போகிறதை நாய்கள் முன்கூட்டியே நமக்கு தெரிவிக்கின்றன என பெரியவர்கள் கூறுவது வழக்கம். ஆனால் அந்த கருத்து எத்தனை சதவிகிதம் உண்மை/சாத்தியம் என்பது நமக்கு தெரியாது. ஆனால் இந்த நாய்கள் ஊளையிடுவதற்கு இதைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ஊளையிடுதல் என்பது நாய்களின் இயல்பான நடத்தைகளின் ஒரு பகுதியாகும். வீட்டில் வளர்க்கபடும் நாய்களும் மற்றும் தெரு நாய்களும் காட்டிலுள்ள ஓநாய்களைப் போல அதிகமாக ஊளையிடுவதில்லை. ஹஸ்கி அல்லது அலாஸ்கன் மலாமுட் போன்ற சில இனங்கள் தான் மற்ற இனங்களை விட அதிகமாக ஊளையிடுகின்றன. அந்த இனங்கள் தொடர்புடைய மரபியல் மற்றும் நடத்தைகளின் கலவையின் காரணமாக அவைகள் அதிகமாக ஊளையிடலாம் என கருதப்படுகிறது.
வேட்டை நாய்கள் அவற்றின் ஊளையிடுதல் மற்றும் குரைத்தல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவைகளாக இருக்கின்றன. இது ஒரு அற்புதமான வேட்டையின் போது கூட்டமாக வேலை செய்யும் இன வரலாற்றின் காரணமாக இருக்கலாம். ஆனால் அனைத்து இனங்களின் நாய்களுமே ஊளையிடுகின்றன. இந்த நாய்கள் ஊளையிடும் போது அப்போதைய சூழலைப் பொறுத்து வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாமா.
சில சத்தங்களுக்கு பதிலளிக்கும் விதமாக:
உங்கள் நாய் எப்போதாவது சைரன், ரயில் அல்லது மணியின் ஓசையைக் கேட்டதும் தலையை பின்னால் சாய்த்து ஊளையிட்டிருப்பதை பார்த்ததுண்டா? உயர்ந்த ஒலிக்கு இந்த ஊளையிடும் எதிர்வினையை பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ள நாய்களும் கடைபிடிப்பது இயல்பு. நாய்கள் ஏன் இவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து வெவ்வேறு கோட்பாடுகள் உள்ளன. நெருங்கி வரும் அச்சுறுத்தல் என்னவாக இருக்கக்கூடும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க, தூரத்தில் இருந்து ஊளையிடும் மற்ற நாய்களைப் போலவே இந்த ஒலி இருக்கலாம் அல்லது அந்த ஓசையின் சத்தமானது அவற்றின் காதுகளை காயப்படுத்தி இருக்கலாம்.
தங்கள் இருப்பிடத்தைக் குறிக்க:
ஓநாய்கள் மற்ற கூட்ட உறுப்பினர்களுக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தும் வகையில் ஊளையிடுகின்றன. நாய்களும் இந்த வகையான தொடர்பு முறையை இதே போல் பயன்படுத்துகின்றன.
ஊடுருவும் நபர்களை காட்டி கொடுக்கும் வகையில்:
தேவையற்ற அல்லது ஆபத்தான திருடர்களிடமிருந்து தங்கள் பகுதியை அல்லது தங்களை வளர்க்கும் வீட்டை காக்கும்போது, ஊளையிடுதல் பெரும்பாலும் குரைத்தல் மற்றும் பிற குரல்களுடன் இணைக்கப்படுகிறது. அவற்றின் இந்த ஊளையிடுதலின் காரணமாக அந்த இடத்தை விட்டு திருடர்கள் ஓடி விடலாம்.
உற்சாகத்தோடு இருக்கும் போது:
உங்கள் நாய் எதையாவதை பார்த்து உற்சாகமாக இருந்தால் அது உடனடியாக ஊளையிடத் தொடங்கலாம். குறிப்பாக அந்த நாய்க்கு மிகவும் பிடித்த நபரை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தால் இவ்வாறு ஊளையிட்டு சந்தோஷத்தை வெளிபடுத்தும்.
உங்கள் கவனத்தை ஈர்க்க:
உங்கள் நாயின் ஊளையிடுதலுக்கு நீங்கள் ஏதாவது ஒரு வழியில் கவனம் செலுத்தி வழக்கமாக பதிலளித்திருந்தால், அது தனக்கு தேவைப்படும் போதெல்லாம் உங்கள் கவனத்தை ஈர்க்க ஊளையிடுவதே சிறந்த வழி என கற்றுக் கொண்டிருக்கலாம்.
உணர்ச்சி ரீதியான துயரம்:
இந்த ஊளையிடுதல், ஒரு உணர்ச்சி ரீதியான துயரத்தையும் குறிக்கலாம். ஒரு நாய் தங்கள் குழுவுடன் மீண்டும் இணைய விரும்பும் போது அது ஊளையிடுகிறது. மேலும் தன்னுடைய குழுவை கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் இவ்வாறு ஊளையிட்டு கூப்பிடுகிறது. சில நாய்கள் பயத்தினாலோ அல்லது பதட்டத்தினாலோ கூட இவ்வாறு அலறுகின்றன.
உடல் ரீதியான துன்பம்:
சில நேரங்களில் நாய்கள் வலியால் அவதிப்படும் போது வலியை நம்மிடம் கூற முடியாமல் ஊளையிடுகின்றன. பெரும்பாலான நாய்கள் அடிபட்டால் அமைதியாகவே இருக்கும். வலி அதிகமானால் தான் அவை ஊளையிடத் தொடங்குகின்றன. ஒருவேளை உங்கள் நாய்க்கு எதாவது அடிபட்டு அது ஊளையிட்டால் தயவு செய்து கால்நடை மருத்துவரை அணுகி அதற்கு தேவையான சிகிச்சையை செய்யவும்.
நாய் ஊளையிடுவதற்கு பின்னால் உள்ள இந்த மிக முக்கியமான குறிப்புகளை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இனி உங்கள் நாயோ அல்லது தெரு நாயோ ஊளையிட்டால் இந்த குறிப்புகளை வைத்து கொண்டு நீங்கள் அதற்கான காரணத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.