பொறாமை என்பது மனித இயல்பு. ஒருவரிடத்தில் இருக்கும் ஒரு பொருளைப் பார்த்த உடனோ, நம்மைச் சுற்றி உள்ளவருக்குக் கிடைக்கும் பேரோ, புகழோ நம்மை அவரின் மேல் பொறாமைப் பட வைக்கும். பொறாமை யார் மீது வேண்டுமானாலும் வரலாம். அது ஒரு எல்லைக்குள் இருக்கும் வரை யாருக்கும் பாதிப்பில்லை.
ஆனால் அதுவே காதலர்களுக்கு மத்தியிலோ அல்லது கணவன் மனைவிக்கு இடையிலோ அவர்களின் கடந்த கால உறவின் காரணமாக ஏற்படும் மிதமிஞ்சிய பொறாமை அல்லது அதைப் பற்றியே விடாது ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலை என்பது ஒரு வகை மனநோய் என லண்டனைச் சேர்ந்த மனோதத்துவ ஆய்வாளர் டாக்டர் Darian Leader விவரிக்கிறார். இவர்தான் இந்த வகை பொறாமைக்கு ரெபேக்கா சின்ரோம் (Rebecca Syndrome) எனப் பெயரிட்டவர். இந்த பெயரை அவர் 1938ஆம் ஆண்டு வெளிவந்த Daphne du Maurier என்ற எழுத்தாளரின் நாவலான ரெபேக்கா என்பதிலிருந்து புனைந்தார்.
இந்த நாவலில் வரும் கதாநாயகியின் பெயர் தான் ரெபேக்கா. அவள் தன்னை சுற்றி இருப்பவர்களின் மூலம் தன் கணவனின் இறந்த மனைவியைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள். அதன் பின் அவள் தன்னை அந்த முன்னாள் மனைவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் துவங்குகிறாள். அப்படித் துவங்கி எவ்வாறு அவளையும் அவளின் சுயத்தையும் இழக்கிறாள் என்பதை இந்த நாவல் சித்தரிக்கிறது.
ரெபேக்கா சின்ரோம் உள்ளவர்கள் தன் துணையின் முன்னாள் துணையுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து மேலும் பொறாமைப் பட்டு தங்களின் இன்றைய மகிழ்ச்சியையும் ஒரு சில நேரங்களில் அந்த உறவையே கூட கெடுத்துக்கொள்வது அதிகம்.
எப்பொழுதும் இருக்கும் ஒரு வித பதட்டம், தங்கள் துணையின் மேல் ஒரு சந்தேகம், மன அழுத்தம், கவலை, பாதுகாப்பின்மை, உணர்ச்சிகளின் உறுதியற்ற தன்மை, எப்பொழுதும் தங்கள் துணையின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது, அவர்களுக்குப் போட்டியே இல்லை என்றாலும் போட்டி இருப்பதாக நினைத்துக் கொள்வது போன்ற குறிப்புகளை இவர்களிடத்தில் காண முடியும்.
இவர்கள் தங்கள் துணையின் கடந்த கால உறவினால் இப்பொழுது தங்கள் உறவில் நம்பிக்கை மற்றும் அன்யோன்யம் இல்லாமை, தங்கள் துணையின் அன்பையும் அரவைப்பையும் ஏற்றுக்கொள்ளக் கஷ்டப்படுதல் போன்ற மனச் சஞ்சலங்களுக்கு ஆளாவார்கள். எப்பொழுதும் தங்கள் துணையின் கடந்த கால நிகழ்வுகளுடன் தங்கள் நிகழ் காலத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் இவர்களால் அவர்களின் நிகழ் காலத்தை அனுபவிக்க முடியாமல் போவது அதிகம்.
ரெபேக்கா சின்ரோம் உளவியல் பிரச்சனை தான் என்றாலும் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உளவியல் கோளாறாக அங்கீகரிக்கப்படவில்லை. ரெபேக்கா சின்ரோமினால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்டு எடுக்க உரிய மனநல மருத்துவரையோ மனநல ஆலோசகரையோ அணுகுவது நன்மை தரும். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி அவர்களை தங்களின் இந்த பொறாமை உணர்வின் மூல காரணத்தை ஆராய உதவுவார்கள். இதுவே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல் படி.
அதற்குப்பின் இந்த குறைபாட்டை மனதளவில் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பொறாமை குணம் எழும்பொழுது தன்னை தானே சுதாரித்துக்கொண்டு நிகழ்காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். தங்களின் துணைவரிடம் மனம் விட்டுப் பேசுவது, நிகழ் காலத்தில் நிறைய நல்ல நினைவுகளை ஏற்படுத்துவது, சிறிது காலம் சமூக ஊடகங்களை உபயோகிக்காமல் இருப்பது போன்ற சில வழிமுறைகளினால் இந்த ரெபேக்கா சின்ரோமிலிருந்து வெளியே வரமுடியும்.