கணவன் - மனைவியிடையே சண்டை சச்சரவை தீர்க்கும் மருந்து!

கணவன் - மனைவியிடையே சண்டை சச்சரவை தீர்க்கும் மருந்து!

ரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் தினமும் சண்டையிட்டுக்கொள்வது வழக்கம். அவர்கள் சண்டையிடாத நாளே இல்லை என்று சொல்லலாம். யார் வேண்டுமானாலும் முதலில் சண்டையை ஆரம்பிப்பார்கள். ஒருவர் ஒன்று சொல்லிவிட்டால், மற்றவர் அதை வளர்த்திக்கொண்டே போவார். அதனால் அவர்கள் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவும் கூச்சலுமாக நிறைந்திருக்கும்.

பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒரு தம்பதியினர் குடி வந்தனர். அவர்கள் வீடு எப்போதும் அமைதி நிரம்பியதாக இருந்தது. இருவரும் பேசிக்கொள்வார்களா என்று சந்தேகப்படும் அளவுக்கு சின்ன சத்தம் கூட கேட்காது. இந்த வீட்டுப்பெண்மணிக்கு ஒரே ஆச்சர்யம். ஒரு நாள் பக்கத்து வீட்டுக்குச் சென்று, ‘’எப்படி உங்கள் வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் நிம்மதியாக இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

அதைக் கேட்ட அந்தப் பெண், ‘’அதற்கு ஒரு மருந்துதான் காரணம். என் கணவர் எப்போதெல்லாம் என்னுடன் சண்டை போட ஆசைப்படுகிறாரோ அல்லது திட்ட ஆரம்பிக்கிறாரோ அப்போது நான் அந்த மருந்திலிருந்து ஒரு மூடி எடுத்து வாயில் ஊற்றிக்கொள்வேன். அதை உடனே முழுங்காமல், ஐந்து நிமிடம் வைத்திருந்து பிறகே விழுங்குவேன். அதன் பிறகு அவர் அமைதியாகச் சென்று விடுவார். சண்டையே வராது’’ என்றார்.

‘’சண்டையை நிறுத்துவதற்குக் கூட மருந்து இருக்கா? எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன். நானும் அதைப் பயன்படுத்தி பார்க்கிறேன்’’ என்று கேட்டு அந்த மருந்துப் புட்டியை வாங்கிக்கொண்டு சென்றார் முதல் வீட்டுப் பெண். வாசலில் காத்திருந்த கணவர், ‘’அறிவிருக்கா உனக்கு? நீ பாட்டுக்கு வீட்டை பூட்டிட்டுப் போயிட்ட. நான் வெளிய நிற்கறேன்ல?’’ என்று கத்த, மனைவி பதில் பேசாமல், ஒரு மூடி மருந்தை வாயில் ஊற்றிக்கொள்கிறார். ஐந்து நிமிடம் கத்திப்பார்த்த கணவன், மனைவியிடம் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் அவரும் அமைதியாகிறார்.

அடுத்த நாள் எதிர்வீட்டு அம்மாவுக்கு நன்றி சொல்லி, ‘’எங்க வீட்டுல நேத்து முழுக்க சண்டை சச்சரவே இல்ல. இந்த மருந்து அருமையா வேலை செய்யுது. இது என்ன விலையானாலும் நான் வாங்கிக்கிறேன். எங்க கிடைக்கும்னு சொல்லுங்க?’’ என்றார்.

அதைக் கேட்ட அந்தப் பக்கத்து வீட்டுப் பெண், ‘’இது மருந்தில்லை. நான் கொடுத்தது வெறும் தண்ணிதான். பொதுவாக இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும். ஒருவர் கத்தவோ, திட்டவோ ஆரம்பிக்கும்போது நாம் அமைதியைக் கடைப்பிடித்தால் ஐந்து நிமிடங்களில் அவரது கோபம் வடிந்துவிடும். சண்டையே வராது. இதுதான் அந்த சூட்சுமம்’’ என்று கூறினாராம் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்.

இது தென்கச்சி சுவாமிநாதன் கூறிய ஒரு வாழ்வியல் கதை. கோபமோ, வருத்தமோ, எரிச்சலோ உடனே மனதில் இருப்பதை வெளியே கொட்டாமல் அமைதியாக இருந்தால் சூழ்நிலையே மாறி அழகாகி விடும். மனமும் அமைதியாகி விடும். இது தம்பதியருக்கு மிகவும் பொருந்தும் அல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com