முதியோர்களை மதியுங்கள்!

Eldery People
Eldery People

கடவுளுக்குச் சமமாக முதியோர்களைப் போற்றிய காலம் ஒன்று உண்டு. அது இன்றைக்கு மாறிவருகிறது. மேலை நாட்டுக் கலாசாரத்தின் தாக்கத்தால் பெரியவர்களுக்கு உரிய மரியாதை வெகுவாகக் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்டவர்கள் இன்று சுமையாகக் கருதப்படுகிறார்கள்.

புறக்கணிப்புகள் முதியோரை மனதளவில் கடுமையாகப் பாதிக்கின்றன. நாம் வாழ்வதே வீண் என்ற கழிவிரக்கத்தையும், மனச் சோர்வையும் அவர்களுக்குள் ஏற்படுத்திவிடுகின்றன.

வயது ஆக ஆக பலவித நோய்களோடு, கண் பார்வை குறைவு, காது கேளாமை, நடைகுறைதல், கீழே விழுதல், மயக்கம் வருதல், ஞாபக மறதி போன்ற பல்வேறு தொல்லைகளால் தங்களுடைய தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்படுகிறது. இத்தோடு முதியவர்கள் மனதளவிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

யார் அதிகமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்?

  • எந்தவிதமான வருமானமோ சொத்தோ இல்லாமல் இளைஞர்களைச் சார்ந்து வசிப்பவர்கள்.

  • ஒரே குழந்தையைப் பெற்ற முதியவர்கள்.

  • நாள்பட்ட நோய் உள்ள முதியவர்கள்.  (உதாரணம் : மறதி நோய், பக்கவாதம், உதறுவாதம், மனநோய்கள்.)

படுத்த படுக்கையில் கிடக்கும் முதியவர்கள். தங்களுடைய எல்லா தேவைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களின் உதவியை நாடும்பொழுது அவர்களுக்கு வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது.

தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 32 சதவிகித முதியவர்கள் இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்படுகிறார்கள் அல்லது தக்க மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதைவிட இன்னமும் அதிர்ச்சி ஊட்டும் செய்தி, 56 சதவிகித முதியவர்கள் தமது மகன்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள், 23 சதவிகித முதியவர்கள் தங்களது மருமகள்களால் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பதுதான்.

எப்படித் தவிர்க்கலாம்?

இளைஞர்களின் எண்ணப்போக்கில் மாற்றம் வேண்டும். தாங்களும் ஒருநாள் முதியவர்கள் ஆவோம் என்பதை எண்ணிப் பார்த்தாலே, செய்யும் தவறு புரிந்துவிடும். அவர்களது அணுகுமுறையில் மாற்றத்தை விளைவிக்கும்.

மனதில் பெற வேண்டியவை:

  • இயலாமையைப் பொறுத்தல், ஓர் உயர்ந்த குணம்.

  • ஒசையின்றி முதியோருக்கு இழைக்கும் கொடுமை, தண்டனைக்குரிய தீவிரவாதம்

  • முதியோருக்கு எதிரான கொடுமை ஒரு தீயச் செயல்.

  • முதுமையின் இயலாமை இயற்கையின் நியதி.

  • முதியோருக்கு கொடுமை செய்வோர், இயற்கையின் எதிரியாவார்.

  • முதியோர்க்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒரு வீட்டின் பிரச்னை அல்ல. அவை ஒரு சமுதாயப் பிரச்னையாகும்.

  • முதியோர்களை மதிப்போம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வோம். அவர்கள் நிம்மதியாக, கெளரவமாக வாழ, நாம் எல்லோரும் உதவுவோம்.

உறுதிமொழி எடுத்துக்கொள்வோமா?

‘முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகையான கொடுமைகளையும் அவை வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ - எந்த உருவில் வந்தாலும் அவற்றைக் களைவதற்காக முளையிலேயே கண்டுபிடித்துத் தலையிட்டுத் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன். மேலும், அவர்களுடைய அனைத்து வகையான  தேவைகளுக்கும் - அதாவது உடல் வளத்துக்கும்,  பாதுகாப்புக்கும், அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், அங்கீகாரத்துக்கும் இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்துப் பாதுகாப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com